இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள்: பா.ஜ., விமர்சனம்

இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணிக்கு எந்த நோக்கமும், தொலைநோக்கு பார்வையும் கிடையாது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை துவங்கியதில் இருந்து இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. உறவுகள் முறிந்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா ராகுல் ஒரு புலம்பெயர்ந்த பறவை. அவர் போட்டோசூட் நடத்தி வருகிறார். காங்கிரசுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது என தெளிவாக கூறியுள்ளார்.

பஞ்சாபில், ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில் உத்தவ் சேனா மற்றும் காங்கிரஸ் இடையும், கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையேயும் குழப்பம் நிலவுகிறது. இண்டியா கூட்டணியில் தினமும் சண்டை உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். ராகுல் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை துவங்கியதில் இருந்து, இந்த நியாய யாத்திரை ஒரு “குட் – பை” யாத்திரையாக மாறிவிட்டது. ராகுல் தனது நியாய யாத்திரையை மறந்துவிட வேண்டும். இவர்களால் எப்போதாவது இணைந்து நாட்டை நடத்த முடியுமா?. முதலில் மாயாவதி, பின்னர் மிலிந்த் தியோரா, பின்னர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் இண்டியா கூட்டணிக்கு “குட் பை” சொல்லிவிட்டனர். மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.