ஹைதராபாத் பல்கலை மாணவர் சங்க தேர்தல்: ஏபிவிபி சார்பில் முஸ்லிம் மாணவி போட்டி

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில்தலைவர் பதவிக்கு முதல்முறையாக முஸ்லிம் மாணவியை வேட்பாளராக ஏபிவிபி நிறுத்தியுள்ளது.

ஹைதராபாத் மத்திய பல்கலை. மாணவர் சங்க தேர்தல்  (நவ. 9) நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்), 75 ஆண்டுகளில் முதன் முறையாக இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இஸ்லாமிய மாணவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஷேக் ஆயிஷா என்றஇம்மாணவி விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். வேதியியலில் பிஎச்டி படித்து வருகிறார்.

இவர், எஸ்எஃப்ஐ-ஏஎஸ்ஏ-டிஎஸ்எஃப் கூட்டணி சார்பில் போட்டியிடும் மற்றொரு பிஎச்டிமாணவரான முகமது அதீக் அகமதுவை எதிர்த்து போட்டியிடுகிறார். மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு இரு சிறுபான்மையின மாணவர் இடையே போட்டி நிலவுவது இதுவே முதல் முறையாகும். ஏபிவிபியுடன் பழங்குடியின மாணவர்களின் சேவா லால் வித்யார்த்தி தளமும் (எஸ் எல் வி டி) இணைந்துள்ளது. இந்த அணி சார்பில் 3 மாணவிகள் உட்பட மொத்தம் 9 பேர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.