ஹிந்து மதத்தை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க.,: காரணங்களை பட்டியலிடும் ஹிந்து முன்னணி

‘ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் கேவலமாக பேசுவதை வாழ்நாள் செயல்திட்டமாக கொண்டுள்ள தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டும் நாள் நாளை வருகிறது,” என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் அறிக்கை: தி.மு.க., துவக்கப்பட்ட காலம் முதலே ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து சம்பிரதாயங்களையும் இழிவுபடுத்தி வருகின்ற கட்சி. நீதிக் கட்சி தலைவராக இருந்த பி.டி.ராசன் ஏற்பாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க., தலைவர் அண்ணா துரை, ‘அடியே மீனாட்சி, உனக்கு எதுக்குடி வைர மூக்குத்தி’ என்று நம்மையெல்லாம் காத்திடும் அன்னை மீனாட்சியை தரக்குறைவாக பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த ஒரே தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.

கோவில்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை பற்றி பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒவ்வொரு வருடமும் திருமணம் நடக்கிறது என்றால் முதல் இரவும் நடக்குமா என்று ஏளனமாக பேசினார். சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என்று பேசினார். பாரசீக மொழியில் ஹிந்து என்றால் வேசி மகன் என்றும் பேசினார். இது ஏதோ ஒரு முறை பேசியது அல்ல. தொடர்ந்து ஹிந்து மதத்தை பற்றி பழித்து பேசுவது இவர்களின் வாழ்நாள் அஜண்டா. காமராஜரை அரைகுறை உடையோடு பார்வதி தேவியாகவும், கக்கனை அழுக்குப் பிள்ளையாராகவும் சித்தரித்து, 1970ம் ஆண்டு வெளிவந்த, கருணாநிதியின் முரசொலி பத்திரிகை கார்ட்டூன் படம் ஹிந்துக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க., தலைவர் கருணாநிதியை வரவேற்ற ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததை, ”என்ன உன் நெற்றியில் ரத்தம் வழிகிறதா?” என்று நக்கலடித்தார் கருணாநிதி.

தமிழர்களின் பாரம்பரிய ஆன்மிகப் பழக்க வழக்கங்களான குண்டம் இறங்குதல், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் சம்பிரதாயங்களை கொச்சைப்படுத்தி, இது மாதிரியான செயல்கள் எல்லாம் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் என்று கூறியவர் கருணாநிதி.

ராமர் பாலத்தை சேது சமுத்திர திட்டத்தின் மூலம் இடித்து தள்ள முடிவெடுத்த கருணாநிதி, ஹிந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் ராமர் என்ன இன்ஜினியரா? எந்த கல்லுாரியில் படித்தார் என கேவலமாக பேசினார். கோவையில் குண்டு வெடித்த நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஹிந்துக்களால் முஸ்லிம்கள்தான் அதிகம் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவு என்று பேசியது எப்படிப்பட்ட இழிவான மனநிலை. தந்தை வழியில் வந்த ஸ்டாலின், ஹிந்துக்கள் புகையை மூட்டி அனைவருக்கும் கண்ணெரிச்சல் ஏற்படுத்துகிறார்கள் என்று இழிவுப்படுத்தினார்.

நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா, ஹிந்து என்றால், வேசி மகன் என்றும், ஜெய்ஸ்ரீராம் என்று சொல்பவர்கள் முட்டாள் என்றும் அநாகரீகமாக பேசினார். 2023 நவ., 21ல் திண்டிவனம் நகர மன்ற துணைத்தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இருக்கை கூட தராமல் தீண்டாமை கொடுமையை செய்த தி.மு.க.,வுக்கு சமூக நீதி பேசும் உரிமை இல்லை.

தமிழக அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். நமது தொண்மையான சனாதன தர்மத்தை பழித்து விட்டு ஹிந்துக்களிடமே வாக்கு கேட்டு நிற்கும் இவர்களை இனம் கண்டு தோற்கடிப்போம்.

டி.ஆர். பாலு, ஒரு கூட்டத்தில், ”எனது தொகுதியில், 100 ஆண்டுகள் பழமையான, 300 கோவில்களை இடித்துள்ளேன். தேர்தலில் எப்படி ஓட்டு வாங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்,” என்று தலைக்கணத்தோடு கூறினார். கடந்த, 2022 அக்., 23ல், கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் குண்டு வெடித்தது. அத்தகைய பயங்கரவாத செயலை கூட சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடியது தி.மு.க., அரசு. விழுப்புரம், பகவதி அம்மன் கோவிலில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்க்காமல் கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தது இந்த நாத்திக அரசு.

பெண்களை கேவலமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள தி.மு.க.,வில், அமைச்சர் பொன்முடி, வேலுார் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் என பலரும் பெண்களை கேவலப்படுத்தினர். மயிலாடுதுறையில் உள்ள தருமை ஆதினத்தின் பட்டினப்பிரவேச விழாவை தடை செய்த தி.மு.க., வுக்கு பாடம் புகட்ட வேண்டும். பெரம்பலுார், வி.களத்தூரில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. 2023 மே மாதம் அவிநாசி பெரிய கோவிலில் ஒருவன் உள்ளே புகுந்து சுவாமி விக்கிரகங்களை சேதப்படுத்தினார். இவ்வாறு, கோவில்கள் உடைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் தி.மு.க., வை தோற்கடிக்க வேண்டும்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும், ஸ்டாலின், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரிக்கோ, தமிழர் புத்தாண்டுக்கோ, வாழ்த்து சொல்வதில்லை. தர்மபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் அரசு விழாவில் பூமி பூஜை செய்த போது வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட பொருட்களை எல்லாம் எட்டி உதைத்தார். ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் இவர்களுக்கு ஓட்டு போடலாமா?

கோடிக்கணக்கான ஹிந்துக்கள் மிகவும் புனிதமாக வணங்கும் ஸ்ரீவிநாயக பெருமானை அமைச்சர் உதயநிதி, ‘விநாயகரை வெறும் மண்ணு,’ என்று நக்கலடித்து பேசினார். அதுவும், விநாயகர் சதுர்த்தி நாளன்று இவ்வாறு பேசியது, ஹிந்துக்களை மனம் நோக வைத்தது. தி.மு.க., தோற்றுவிக்கப்பட்ட பின் புத்தன் வாழ்க இயேசு வாழ்க … ஹிந்து ஒழிக என்று கோஷமிட்டனர். தேர்தல் வந்தால் மட்டும் ஹிந்துக்கள் வாழ்க என்று கோஷத்தை கையில் எடுக்கின்றனர். தொடர்ந்து ஹிந்து மதத்தை பற்றி கேவலமாக விமர்சித்து வந்தார் கருணாநிதி. ஹிந்து என்றால் திருடன் என்ற கருத்துக்கு மாபெரும் எதிர்ப்பு கிளம்பிய போது, இது நான் சொன்ன கருத்து அல்ல. மத்திய அரசின் ஹிந்தி கலைக்களஞ்சியத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்று பல்டி அடித்தார். இன்றளவும் தொடரும் ஹிந்து மத வெறுப்பு பிரசாரங்களை முறியடிக்க தி.மு.க.,விற்கு ஓட்டு போடக்கூடாது.

ராமாயணம், மகாபாரதம், கந்த சஷ்டி நமது இதிகாசங்களையும், புராணங்களையும் தி.மு.க.,வினர் கொச்சைப்படுத்தி வந்துள்ளனர். அது இன்றளவும் தொடர்கிறது. இனியும், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க கூடாது. இவ்வாறு, ஹிந்துக்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொண்ட தலைவர்கள் தி.மு.க.,வில் ஏராளம். இவர்களுக்கு, வரும் லோக்சபா தேர்தலில் பாடம் புகட்ட ஒவ்வொரு ஹிந்துவும் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு கிஷோர்குமார் கூறியுள்ளார். டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசினார். நம் தொண்மையான சனாதன தர்மத்தை பழித்து விட்டு ஹிந்துக்களிடமே ஓட்டு கேட்டு வரும், இவர்களை தோற்கடிப்போம்.