அணு ஆயுதங்களை அகற்ற மார்க்சிஸ்ட் வாக்குறுதி; காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? – ராஜ்நாத் சிங் கேள்வி

மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் “அணு ஆயுதங்களும் பேரழிவு ஏற்படுத்தும் பிற ஆயுதங்களும் முற்றிலும் அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.எல்.அஷ்வினியை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டை பலவீனப்படுத்த தீவிர சதி நடக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் காங்கிரஸும், நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டின் அணு ஆயுதங்களை அகற்றுவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் பேச்சு நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுவதற்கு சமமாகும்.

உலகின் 11 அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக திகழ இந்தியா கடுமையாக உழைத்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும்போது நமது நாட்டின் அணு ஆயுதங்களை அகற்றுவது நாட்டை பலவீனப்படுத்தும். நமது நாட்டின் அணு ஆயுத திட்டத்தை 1974-ல் இந்திரா காந்தி தலைமையிலான அரசு தான் தொடங்கியது. எனவே மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குறுதி குறித்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.