ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும், 11வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி, வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 29ம் தேதி துவங்குகிறது.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத, ஆறு அடிப்படை பண்புகளை வலியுறுத்தி, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சிக்கு, மக்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, ‘ஸ்ரீகிருஷ்ணா சம்ஸ்கார யோகா’ என்ற தலைப்பில், யோகாசன நிகழ்ச்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லுாரியில் நேற்று மாலை நடந்தது.கோவை, ஓசோன் யோகா மையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விவேகானந்தா கல்விக்குழும செயலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 30 பள்ளிகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவர்களால், கண்காட்சியின் கருத்துக்களின் படி, பல வகையான யோகாசனங்களை, 50 நிமிடங்களில் நிகழ்த்தினர்.

ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு, ‘திரங்கா சைகிள்தான்’ என்ற தலைப்பில், சைக்கிள் பேரணி, நேற்று காலை நடந்தது.எண்ணுார், அன்னை சிவகாமி நகர், அங்காள ஈஸ்வரி கோவில் முன் பேரணி துவங்கியது. தேசிய கேரம் வீராங்கனை வினிதா, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில், 10 முதல், 17 வயது வரை உள்ள ஆயிரக்கணக்கான மாணவ – மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எர்ணாவூர் பாலம் அருகே, பேரணி நிறைவு பெற்றது.