ஹிந்துக்கள் சிறுபான்மையாக உள்ள எட்டு மாநிலங்களில் என்ன நடக்கிறது?

 

டில்லி மாநகர வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அவருடைய கோரிக்கை என்ன?

லட்சத் தீவு (2.5%), மிசோரம் (2.75%), நாகலாந்து (8.75%), மேகாலயா (11.53%), ஜம்மு – காஷ்மீர் (28.44%) அருணாசல பிரதேசம் (29%) மணிப்பூர் (31.39%), பஞ்சாப் (28.40%) என்று எட்டு மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி விட்டார்கள். (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு). இந்த 8 மாநிலங்களில் வாழும் ஹிந்துக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள், நியாயமற்ற முறையிலும் ஆளுபவர்களின் விருப்பு – வெறுப்புக்கும் ஏற்ப மனம் போன போக்கில் அந்த மாநிலங்களின் பெரும்பான்மை சமுதாயத்தினரான கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் திருப்பி விடப்படுகிறது. எனவே மேற்சொன்ன 8 மாநிலங்களிலும் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்படவேண்டும்.”

உச்ச நீதிமன்றம் மனுதாரர் தேசிய சிறுபான்மை கமிஷனை அணுகலாம் என்று ஆலோசனை கூறியது. அதனடிப்படையில் அஸ்வினி குமார் சிறுபான்மை கமிஷனிடம் தன் கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கமிஷன் மூன்று நபர் குழுவினை அமைத்து இந்த விஷயத்தின் சாத்தியக் கூறு, நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூற பணித்துள்ளது. 1993ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்ஸிக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோர் சிறுபான்மைச் சமூகங்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள். 2014ம் ஆண்டு ஜைனர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

சிறுபான்மையினர் நல கமிஷனின் பணிகள் என்ன?

* சிறுபான்மையினருக்கு அரசியல் சாஸனத்தில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், பாதுகாப்பு அம்சங்கள், நாடாளுமன்றம் மாநில சட்ட சபைகளால் சட்டமாக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது.

* சிறுபான்மையினரின் கல்வி – பொருளாதார முன்னேற்றத்தை அரசுகள் நடைமுறை படுத்துவதை  மதிப்பீடு செய்வது.

* சிறுபான்மையினருக்கு ஏற்படும் இடர்பாடுகள், குறைகளைப் போக்க மத்திய மாநில அரசுகளின் செயல்களை கண்காணித்தல்.

* சிறுபான்மையினரின் நலம் குறித்த விஷயங்களை ஆராய்ந்து தேவையான தீர்வுகளை அரசுகளுக்கு தெரிவித்தல்.

அதுசரி, ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கிடைத்தால் என்ன பயன்? சிலவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்:

த ஹிந்துக்களுக்கு ஏற்படும் சமூக – பொருளாதார இடர்பாடுகளை எந்த அரசியல் வாதியும் பேசாத நிலைதான் மேற்சொன்ன மாநிலங்களில் காணப்படுகின்றன. அப்படிப் பட்ட சூழ்நிலையில் சட்டத்தின் துணையுடன் கமிஷனின் கதவுகளைத் தட்டலாம். அப்பொழுதுதான் மத்திய அரசு, ஊடகம் இவற்றின் கவனத்தை ஈர்க்க முடியும். மாநில அரசும் பதில் சொல்லியாக வேண்டும்.

த ஹிந்துக்களின் மக்கள் தொகை எங்கெல்லாம் குறைகிறதோ அங்கெல்லாம் பிரிவினைவாதம் தலைதூக்குவது, வளர்வது, வலுப்பது கண்கூடு. இந்த மாநிலங்களில் ஹிந்துக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருந்தால்தான் தேசிய சக்திகள் வலுப்பெற முடியும்.

த சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்கள் துவங்குவதில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதில், அவர்களின் பணி, ஊதிய நிர்ணயம் போன்ற நடைமுறைகளில் எத்தனை தாராளமயம் தெரியுமா? உதாரணமாக, ஒரு உயர்நிலைப் பள்ளி துவங்க அவர்கள் அரசிடம் முன் அனுமதி பெறவேண்டியதில்லை. துவங்கிவிட்டு அரசின் பதிவுக்கு விண்ணப்பித்தால் போதும்.

ஆகவே, அஸ்வினி குமார் உபாத்யாயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

 

************************************************************************

“Muslims are become aggressive day by day” (வர வர முஸ்லிம்கள் அதிரடிப் போக்கு உள்ளவர்களாகி வருகிறார்கள்)

இதைக் கூறியவர்? தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனார். எப்போது? 1985ல் (அப்போது அவர் காங்கிரசின் அகில பாரத பொதுச் செயலர்) யாரிடம்? டில்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் துறவிகள் எம்.பிக்களை அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவளிக்கக் கோரி சந்தித்த போது.

(‘விசுவ ஹிந்து மித்திரன்’ இதழின் ஸ்ரீராமஜென்மபூமி 25 சிறப்பு மலரிலிருந்து)  

************************************************************************