நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணி செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரம் ஸம்ஸ்க்ருத மொழியை பொதுமக்களின் அன்றாட வாழ்வுடன் இணைக்கும் நோக்கில் செயல்படும் தேசிய அமைப்பான ஸம்ஸ்க்ருத பாரதி பற்றி
அறிவோம்…
ஸம்ஸ்க்ருத பாரதி என்ற அமைப்பானது, 1981 ஆம் ஆண்டு பெங்களூர் நகரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய முயற்சியாக தொடங்கிய இவ்வமைப்பு, இன்று பாரதத்தில் மட்டும் அல்லாமல், உலகின் பல நாடுகளிலும் மிகப்பெரிய மொழி இயக்கமாக வளர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் வாய்மொழியாக இருந்த ஸம்ஸ்கிருதம், காலப்போக்கில் நூல்கள் மற்றும் சடங்குகளுக்குள் மட்டுமே சுருங்கியது. இதை மாற்றி, ஸம்ஸ்க்ருதத்தை மீண்டும் பேசப்படும் மொழியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த அமைப்பு தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம், சமஸ்கிருதத்தை எளிய முறையில் பேசவும், எழுதவும் கற்றுத் தரப்படுகிறது.
அனைத்து தரப்பினரையும் மொழியுடன் ஒருங்கிணைக்கவும், பண்பாடு மற்றும் பாரதத்தின் கலாச்சார மதிப்புகளை மொழி வழியாக பரப்பவும், ஸம்ஸ்க்ருத பாரதி பாடுபட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களிடம் சம்ஸ்க்ருத மொழியை கொண்டு செல்கிறது.
சம்பாஷண சிபிரம் மூலம் மிக குறுகிய காலத்தில் பேச கற்றுத்தரும் முகாம்கள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
வாராந்திர வகுப்புகள் மூலமாகவும் தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் பயிற்சி – புதிய பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், பல பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்று வருகிறது.
பால கேந்திரம் மூலம் குழந்தைகளுக்கான மொழி மற்றும் பண்பாட்டு வகுப்புகள் எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
கீதா சிக்ஷன கேந்திரம் மூலம் பகவத் கீதையை எல்லோருக்கும் வாழ்க்கை வழிகாட்டியாக கற்பித்து வருகிறது.
அஞ்சல் வழி சம்ஸ்க்ருதம் மற்றும் ஆன்லைன் கல்வி முறைகள் மூலம், வீட்டிலிருந்தே அனைவரும் கற்றுக் கொள்ள ஏதுவாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
சர்வதேச குறும்பட விழா – நவீன ஊடகத்தில் சமஸ்கிருத மொழியில் காணொளி வாயிலாக குறும்படம் எடுக்க ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஸம்ஸ்க்ருத பாரதி அமைப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமிரேகம் போன்ற பல நாடுகளிலும், அமைப்பின் செயல்பாடுகள் விரிந்துள்ளன.
தமிழ்நாட்டில், ஸம்ஸ்க்ருத பாரதி மாவட்டம் முதல் கிராமம் வரை பல நிலைகளில் செயல்படுத்தப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், முகாம்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஸம்ஸ்க்ருதம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், ஸம்ஸ்க்ருதம் பயிற்றுவிக்கும் நல்லாசிரியர்கள் பலரும் உருவாகியுள்ளனர்.
பாலபாரதி – ஸம்ஸ்க்ருத பாரதியின் மற்றும் ஓர் அமைப்பான பாலபாரதி என்ற அமைப்பு மூலம், பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஸம்ஸ்க்ருத வகுப்புகள் பள்ளிகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகின்றது.
பாலா- − கீர்வாணி – மேலும், சாஸ்த்ரங்களைப் பற்றிய அறிவைப் பெற விரும்பும் குழந்தைகளுக்கு, ‘பாலகீர்வாணி’ (Balgirvani) வாயிலாக இணையவழியில் ஸமஸ்கிருதமும், சாஸ்த்ரங்களுக்கான அறிமுகமும் கற்பிக்கப்படுகின்றன. கிராமப்புற மக்களும் ஸம்ஸ்க்ருத மொழியை அறிந்து கொள்ளும் வகையில், கிராமப்புறங்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
கீதாம்ருதம் – 2022-ஆம் ஆண்டில், பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் நிறைவுற்றதை முன்னிட்டு, ‘ஸமஸ்கிருத பாரதி’ அமைப்பானது, 2022 டிசம்பர் மாதம் முழுவதும் ‘கீதாம்ருதம்’ எனும் ஒரு மாத கால நிகழ்ச்சியைப் பெரும் கோலாகலத்துடன் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா, ‘சின்மயா மிஷன்’ உடன் இணைந்து, ‘சின்மயா பாரம்பரிய மையத்தில்’ நடைபெற்றது. அன்றைய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஒரு மாதம் முழுவதும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், முழு பகவத் கீதையையும் பாராயணம் செய்தனர். ‘கீதாம்ருதம்’ நிகழ்ச்சியின் நிறைவு விழா, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
ப்ரபோதன வர்க – ஸமஸ்கிருதத்தில் உரையாடும் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் மொழி மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் இங்கு நடைபெறுகின்றன. இந்த வகுப்பு, ஒரு வாரம் நடைபெறும். தங்கும் வசதியுடன் கூடிய வகுப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், ஸமஸ்கிருதத்தின் மீது பெருமிதம் கொண்ட சுமார் 150 பேர் கலந்து கொள்கின்றனர்.
ப்ரஸிக்ஷணவர்க – சமூகத்தில் ஸமஸ்கிருதம் கற்பிக்க விரும்புவோருக்கு, ஸமஸ்கிருத பாரதி ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் தங்கிப் பயிலும் ஆசிரியர் பயிற்சி முகாமை நடத்துகிறது. கற்பித்தல் திறன், சம்பாஷண சிபிரம்களை நடத்தும் செயல்முறை, ‘ஸமஸ்கிருத பாரதி’யின் கோட்பாடுகள் ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அகில பாரத மாநாடு 2025
நவம்பர் 2025ல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை அம்ரிதா பல்கலைக்கழகத்தில், ஸம்ஸ்கிருத பாரதியின் அகில பாரத மாநாடு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.
வரும் ஆண்டுகளில் நமது கவனம் எதன் மீதும், எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த சிந்தனைகளும், விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெற்றன.
1,20,000 சம்பாஷண சிபிரம் (Speak Samskrit) வாயிலாக, 1 கோடிக்கும் அதிகமானோருக்கு ஸம்ஸ்கிருதம் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, நாடாளுமன்ற வளாகத்திலேயே ஒரு தனித்துவமான ‘ஸம்ஸ்கிருதம் பேசும் முகாம்’ நடத்தப்பட்டது.
ஸம்ஸ்கிருத மொழியின் வாயிலாகவே கற்பிப்பதற்காக, 70,000-க்கும் மேற்பட்ட ஸம்ஸ்கிருத ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முந்நூறு-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ‘ஸம்ஸ்கிருத இல்லங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன.
நான்கு தொலைதூரக் கிராமங்களை, உயிர்த்துடிப்புமிக்க ‘ஸம்ஸ்கிருதக் கிராமங்களாக’ உருமாற்றியுள்ளது.
உலகம் முழுவதும் 27 நாடுகளில் அமைந்துள்ள 2,000 மையங்கள் வாயிலாக ஸம்ஸ்கிருதத்தைப் பரப்பி வருகிறது.
பெங்களூரில் 2011-ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெற்ற ‘உலகச் ஸம்ஸ்கிருதப் புத்தகக் கண்காட்சியை’ ஏற்பாடு செய்தது.
1981ல் தொடங்கிய இந்த அமைப்பு, 2031ல் தனது 50-வது ஆண்டு நிறைவை சிறப்பாக கொண்டாட உள்ளது. இதன் மூலம் கடந்தகால சாதனைகளை நினைவுகூரவும், எதிர்கால இலக்குகளை உருவாக்கவும் ஒரு பாலமாக இந்த நிகழ்ச்சி நிச்சயமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஸம்ஸ்க்ருத பாரதி ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு மொழி மறுமலர்ச்சி இயக்கம். மொழியை வாழ்வோடு இணைத்து, மக்களிடையே பரப்பும் இந்த முயற்சி, ஸம்ஸ்க்ருதத்தை மீண்டும் சமூகத்தின் இயல்பான பகுதியாய் மனித குலத்தின் உயரிய மொழியாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வதது சம்ஸ்க்ருதம். ஜெயது பாரதம்
கட்டுரையாளர்: தென் பாரத அமைப்பாளர்