தமிழ் இலக்கியக் களஞ்சியம் தொல்காப்பியம்

முந்தைய தலைமுறையினரின் அனுபவ அறிவையும், வாழ்வியல் கட்டமைப்புகளையும், அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாலேயே இலக்கியப் படைப்புகளுக்கு எல்லா காலத்திலும் தனிச்சிறப்பு உள்ளது. உலக நாகரிகங்களுள் பண்பட்டதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ள தமிழர் நாகரிகத்தின் காலக் கண்ணாடியாகவும், மொழி வளத்திற்கு சாட்சியாகவும் தொல்காப்பியம் விளங்குகிறது.
கிடைக்கப்பெற்ற இலக்கணம் நூல்களுள் மிகப்பழமை வாய்ந்ததாக தொல்காப்பியம் கருதப்பட்டாலும், அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்ததும், இதுவழி நூலே என்பதும் தொல்காப்பிய நூலாசிரியரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதும் தற்போதுள்ள ஆய்வு நூல்களுக்கு எல்லாம் தாய் நூலாகத் தொல்காப்பியம் இயங்குகின்றது. பல்வேறு காலகட்டத்தில், தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டோர் பல்வேறு கால எல்லைகளை இந்நூலுக்கு வரையறுக்கின்றனர்.
சங்க இலக்கியப் பாடல்களை “செய்யுள்” என்பது போல, திருக்குறளை “குறட்பா” எனக் குறிப்பிடுவது போல, தொல்காப்பிய கருத்துக்களை “நூற்பா” என்று அடையாளப்படுத்துகின்றனர். இந்நூல் 1610 நூற்பாக்களையும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனும் மூன்று பகுப்பினுள் அடக்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைப் பெற்று இருக்கின்றது. நூலின் உள்ளடக்கம் இலக்கணத்தோடு நில்லாமல், பழந்தமிழர்களின் நாகரிகம், வாழ்வியல் அறம், பண்பாட்டு விழுமியங்களை விளிப்பதோடு, உயிர்களின் பகுப்புமுறை, காலப் பகுப்புமுறை, நிலப் பகுப்புமுறை, உலகத்தின் தோற்றம் முதலிய எல்லாவற்றையும் பற்றி பேசும் கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது.
எழுத்து அதிகாரத்தில், தமிழ் எழுத்துக்களின் தோற்றத்தையும், பகுப்பு முறையும் பற்றி பேசும்போதும், சொல் அதிகாரத்தில் சொற்களின் அமைப்பு முறையையும், பயன்பாட்டையும் சொல்லும் போதும், தொல்காப்பியர் கூற்றுநராகவும், வாசகர்கள் கேட்குநராகவும் இருக்கையில், வாழ்வியல் அமைப்பை பற்றி பேசும் பொருள் அதிகாரத்திலேயே கூறுநர் – கேட்குநர் என்ற இரு துருவங்களிலும் அகத்திணை மாந்தர்களான தலைவன் – தலைவி, தோழி – செவிலி – பாங்கன் உட்பட்டோர் நிறுத்தப்படுகின்றனர்.
அதே பொருள் அதிகாரத்தில் புறநிலை கருத்துக்களை கூறும்போது கூறுநர் – கேட்குநர் கூறப்படுவது என்ற நிலையில் வெளிப்படையாகவே கருத்துக்கள் உரைக்கப்படுகிறது. எழுத்தும்,, சொல்லும், புறத்திணை கருத்துகளும் அறிவையும் சமூக அறத்தையும் நிலைநிறுத்த எழுப்பப்பட்டவை. எப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் அறநெறிகளை வலியுறுத்தி அறிவுறுத்துவாரோ, அதேபோல் இங்கு ஆசிரியரான தொல்காப்பியரும் வாசகர்களைத் தம் மாணவர்களாக்கி கூறுகின்றார். ஆனால், அகத்திணை நூற்பாக்கள் ஒவ்வொன்றும், பாத்திரங்களின் உணர்வு நிலைகளையே பேசுகின்றன.
குறிப்பிட்ட சூழலில் உறவுகளுக்கு இடையில் ஏற்படும் உணர்வு எழுச்சி, சம்பந்தப்பட்ட பாத்திரங்களால் மட்டுமே முழுவதுமாக உணர்த்த இயலும். அங்கு ஆசிரியருக்கோ, வாசகர்களுக்கோ பேசும் தேவையில்லை. இதைக் கருத்தில் கொண்டே, தொல்காப்பியரும் நூலை இவ்வமைப்பில் கட்டமைத்திருக்க வேண்டும். கவிதையியல் நூலில் அரிஸ்டாட்டில், உணர்வை கதாபாத்திரங்கள் திறம்பட வெளிப்படுத்தும் என்று பதிவு செய்கிறார். இதன் அடிப்படையில் தொல்காப்பியர் ஆகச்சிறந்த உளவியலாளராகவும் இருந்துள்ளார் என்பது தெளிவாக புலப்படுகிறது. இக்கருத்துக்கு மற்றுமொரு சான்றைப் பார்ப்போம்.
நவீன அறிவியலின் ஆகச்சிறந்த வளர்ச்சியாக நோக்கப்படும் உளவியல் துறை, வில்ஹெல்ம் வுண்ட்-ல் தொடங்கி, சிக்மண்ட் பிராய்ட், பி. ஃப். ஸ்கின்னர், கர்ட் லெவின், மேரி ஐன்ஸ்வேர்த் உள்ளிட்ட பல தலை சிறந்த உளவியலாளர் சமூகம், கால நெருக்கடி போன்ற புறகாரணிகள் மூலம் உடலிலும், அறிவிலும் ஏற்படும் நடத்தை மாற்றங்களைப் புரிந்துகொள்ள பல நிலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். 19 ஆம் நூற்றாண்டில் தான் உளவியல் என்ற ஒரு தனித்துறை உலகிற்கு அறிமுகமாகிறது. ஆனால், தொல்காப்பியத்தில் உள்ள புறத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய இயல்கள் மனிதர் மனத்திலிருந்து எழும் உணர்வை அடியாகக் கொண்டு எழும் நிகழ்வுகளைத் தம் நூற்பாக்களில் விவரிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய உளவியலாளரான பால் எக்மேன் உணர்ச்சிகளுக்கும், உடல்பாவனைக்கும் தொடர்புகள் இருக்கின்றது என்று “அன்மாஸ்கிங் தி பேஸ்” என்ற தம் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். பொருளதிகாரத்தின் 6ம் இயலான மெய்ப்பாட்டியல் முழுக்க மன உணர்வு நிலைகளைக் கொண்டு, உடலில் நிகழும் மாற்றங்களைப் பற்றி பேசுகின்றது. அகநிலை (உணர்வியல்) மாற்றங்களுக்கு ஏற்ப புறநிலையிலும் (உடல்) மாற்றங்கள் வெளிப்படும் என்கிற இதே கருத்தைத்தான் பின் நாட்களில் பால் எக்மேனும் தமது ஆய்வின் வழி நிறுவுகிறார்.
இன்றைய சூழலில் உயிரியல், நடத்தைவாதம், உளவியல், பகுப்பாய்வு போன்ற உளவியல் அணுகுமுறைகள் கொண்டு ஆய்வுகள் கையாளப்படுகிறது. தொல்காப்பியரோ மேற்கண்ட எல்லா அணுகுமுறைகளையும் மிக எளிமையாய் தன் நூற்பாக்களில் செல்கிறார்.
போரில் உயிர் நீத்தாரை நினைவு கூற, நடுகல் நடும் வழக்கத்திற்கான வழிமுறைகளை கூறுகிறது என்பதும், ஆச்சரியத்திற்கு உட்பட்ட தகவல். கல்லை தேர்ந்தெடுப்பது, நடுவதற்கான துவக்க விழா செய்வது, கல்லை நீராட்டுவது, கல்லை நடுவது, தலை சிறந்த படைவீரர்கள் கல்லிற்கு மரியாதை செய்வது, வீரனின் வீரப்புகழ் பாடி வணங்கி வழிபடுவது என்று ஆறு நிலைகளில் நடுதல் வழிபாட்டையே ஒரு சடங்காக தொல்காப்பியர் நிலைப்படுத்தி விளக்குவது, அன்றைய சூழலில் “மாண்புடையோருக்கு மரியாதை செய்தல்” எனும் ஒழுக்கம் ஒவ்வொரு குடிமகனாலும் கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறது.
தொல்காப்பியம் என்பது ஒரு இலக்கண நூலாக மட்டும் இல்லாமல், தமிழர் வாழ்வியல், பண்பாடு, அறநெறி மற்றும் உளவியல் சிந்தனைகளை முழுமையாக பிரதிபலிக்கும் நீரோடை. முந்தைய தலைமுறையினரின் அனுபவங்களையும், சமூக கட்டமைப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு தெளிவாகக் கடத்தும் திறன் இதற்கு உள்ளது. தொல்காப்பியம் தமிழர் நாகரிகத்தின் அடையாளமாகவும், காலத்தைத் தாண்டி நிலைக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் இருந்து, இன்றும் ஆய்வுகளுக்கு அடிப்படை நூலாகத் திகழ்வதோடு, தமிழ்மொழி வளத்தையும், தமிழரின் பெருமையையும் பறைசாற்றி, அறிவிக்கும் தமிழக்குரலாக உலகெங்கும் ஒலிக்கிறது.
கட்டுரையாளர்: முனைவர் பட்ட ஆய்வாளர்