வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு பிறந்தது: மக்கள், பக்தர்கள் தரிசனம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு, நேற்று குளக்கரையில் தோன்றியதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு சங்கை வைத்தனர். இதையடுத்து, சுற்றுப்புறங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சங்கை நேரில் கண்டு வணங்கி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது.
மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அப்போது, சிவபெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இத்திருக்குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும், இதையடுத்து, குளத்தில் சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும், இந்த சங்கை சுவாமியே வழிபாட்டுக்கு வழங்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இதன்மூலம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் சங்கு பிறந்து வருவதாகவும், அதனால், இக்குளத்துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கும் வைபவமும் நடைபெறுகிறது. இவ்வாறு பிறக்கும் சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளுடன் சங்கு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மேலும், கார்த்திகை மாததத்தின் கடைசி சோமவாரம் (திங்கள்கிழமை) நாளில் மலைமீது வேதகிரீஸ்வரருக்கு நடைபெறும் 1,008 சங்காபிஷேகத்தில், இக்குளத்தில் பிறந்த சங்கு முதன்மை பெறும். இதற்கு முன்னர் கடந்த 2011-ம் ஆண்டு செப். 1-ம் தேதி சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறந்தது. மேலும், உப்புநீரில் சங்கு உற்பத்தியாகும் என்ற நிலையில், சங்கு தீர்த்த குளத்தில் நன்னீரில் சங்கு பிறப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மேற்கண்ட சங்கு தீர்த்த குளத்தில் நேற்று காலை சங்கு தோன்றியது. தகவல் அறிந்த கோயில் நிர்வாகம், குளக்கரையில் இருந்த சங்குக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் செய்தனர். பின்னர், குளக்கரையில் உள்ள மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு சங்கை வைத்தனர்.
சங்கு பிறந்த தகவல் பரவியதும், ஏராளமான பக்தர்கள் சங்கை தரிசிக்க அங்கு திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர், அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாடவீதிகளில் சங்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயிலை அடைந்தது. மேலும், பக்தர்களின் பார்வைக்காக உட்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சங்கு வைக்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த சங்கை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசித்து வருகின்றனர்.