வெள்ள நிவாரணத்தை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக் கோரி வழக்கு: விரைவில் விசாரணைக்கு வருகிறது

 தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரத்தை, நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ், பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதேநேரம், அந்த தொகையை நியாயவிலை கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கினால், அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிவாரணம் முறையாக சென்றடையாது.

ஏற்கெனவே, அரசின் பல்வேறு திட்டங்களில் நிவாரண உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ‘புறநகர் பகுதிகளில் ஏடிஎம் வேலை செய்யவில்லை. குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை’ என்றெல்லாம் தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் ஏற்கும்படி இல்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவதால் அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது. மாறாக, ரொக்கமாக வழங்கினால் கண்டிப்பாக அதில் அரசியல் கட்சியினரின் இடையூறுகள் இருக்கும். எனவே, தமிழக அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக சென்றடையும் வகையில் திட்டம் வகுத்து, அந்த தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே பேரிடர் கால நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு வகுத்துள்ள திருத்தப்பட்ட விதிமுறைகள், தமிழக அரசு ஏற்கெனவே பின்பற்றும் விதிமுறைகளில் எது மக்களுக்கு கூடுதல் பயன் தரும் என்பதை ஆய்வு செய்து அதை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருத்தப்பட்ட விதி அடிப்படையில், நிவாரணம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது