வெம்பி உதிர்வதல்ல அன்பில் கனிவது!

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் பெண்ணை ஒரு ‘உழைப்பு சக்தி’யாக மட்டுமே பார்த்து,உழைப்பு சார்ந்த சம உரிமை, சம வாய்ப்பு என்ற தளத்தில் மட்டுமே நிறுத்தின. நமது பாரத மரபோ ‘பெண்மை’ என்ற குணாதிசயத்தையே வடிவமைத்து, அதில் தாய்மை, கருணை, காதல், நளினம், சிருங்காரம் என்று நளினமான பல வண்ணங்களைக் குழைத்து மெருகூட்டியது. கல்லில் கூட ‘ஆண் கல்’ – ‘பெண் கல்’ என்று வகைப்படுத்தியது நமது சிற்ப சாஸ்திரம்.

சரியான வார்த்தைகளை, சரியான பொருளில்,சரியான கோணத்தில் புரிந்துகொள்ளாமல் போவதே தவறான புரிதல்களும், தவறான எண்ணங்களும், தவறான விளைவுகளும் ஏற்படக் காரணம். இன்று பெண்ணுரிமை என்ற பெயரில் முழங்கப்படும் பல கருத்துக்களும் பெண் உரிமையை மேம்படுத்துவதாக இல்லாமல் பெண்மையின் பெருமையை சிதைப்பதாகவே உள்ளன. நமது தொன்மை மிக்க பாரத சமுதாயம் பெண்மையின் பெருமையை மதிக்காத சமுதாயமா? அது பெண் விடுதலையை நசுக்கிய சமூகமா? இவர்கள் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ‘penmai’ என்பது பாரத சமூகத்தின் மரபில் இல்லாத ஒன்றா?

ஒரு வார்த்தைக்கும், அதன் மோசமான திரிபுக்கும் இடையே மிக மெல்லிய நூலிழை வித்தியாசம்தான் உண்டு. நிமிர்ந்த நன்னடை” என்பது வேறு – ‘தெனாவட்டு வேறு!’ நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்பது வேறு- எவரையும் எடுத்தெறிந்து பேசி, மதிக்காமல் நடப்பது என்பது வேறு! திமிர்ந்த நல் ஞானத்தால் வரும் செருக்கு” என்பது வேறு – நான் ஆஉ /– கூஞுஞிட படித்து, ஐ.டி துறையில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறேன் என்ற திமிர் என்பது வேறு! அந்த மாகவிஞன் பாரதி கூறியது போல் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுக்கு” இலக்கணமாக நமது பாரத சமுதாயம் பல பெண்மணிகளைக் கண்டுள்ளது!

ஆதிசங்கரருக்கும், மண்டன மிஸ்ரருக்கும் வாதப்போர் நடந்தபோது மண்டன மிஸ்ரரின் மனைவிதான் நடுவர்! தன் கணவரே ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல், வென்றது சங்கரர்தான் என்று தீர்ப்பளித்த அந்தப் பெண்மணிதான் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்பதன் இலக்கணம்! கையில் சிலம்புடன், கணவன் கொலைக்கு நியாயம் கேட்டு, பாண்டியன் சபையில் நின்று, தேரா மன்னா” என்று அழைத்தவள்தான் பாரதி போற்றிய நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுக்கு” இலக்கணம்!

தகப்பன் சொல்லக் கேட்க மாட்டேன்- தாயின் கண்டிப்பை ஏற்க மாட்டேன்- எந்நேரம் வேண்டுமானாலும் வீட்டுக்கு வருவேன்- தண்ணி அடிப்பேன்- ‘தம்’ அடிப்பேன்- கிராப்பு வைத்துக் கொள்வேன்- பொட்டு வைக்க மாட்டேன்… என்றெல்லாம் ‘பெண் சுதந்திரம்’ என்ற பெயரில் தமுக்கடிக்கப்படும் இன்றைய ‘பெண்ணுரிமை’ கோஷம் எதுவும் பெண்மைக்குப் பெருமை சேர்ப்பதில்லை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி” – இதுவல்ல! இது அதன் மோசமான புரிதலால் விளைந்த திரிபு!

நமது சினிமாக்கள் எதைப் புகட்டுகின்றன? தன் படிப்புக்கும் தகுதிக்கும் மென்மைக்கும் மேன்மைக்கும் குடும்பப் பின்னணிக்கும் நுண்ணிய ரசனைக்கும் நுண்கலைகளின் நாட்டத்துக்கும் சற்றும் தொடர்பே இல்லாத, மன விசாலமோ, மாண்புகளோ சற்றும் இல்லாத,கீழ்த்தரமான ரசனை கொண்ட ஒருவனிடம்தான் இவள் மனதைப் பறி கொடுப்பாள்! அதுதான் புரட்சி கரமான காதல்! இதைத்தான் இன்றைய சினிமா சொல்லிக் கொடுக்கிறது. அவனுடன், ‘பப்’ , பைக் சவாரி, பீர் பாட்டில்.. என்று சுற்றி விட்டு, பிறகு ஒரு கட்டத்தில் அவன் தன் தரத்துக்கு ஏற்ப இவளிடம் உதிர்க்கும் கொச்சையான வர்ணனைகளையும் வசவுகளையும் ஏற்று… சிரமப்பட்டுச் சீரழிவதோ, நீதிமன்றம் செல்வதோதான் .. இவர்களில் பலர்,- தன்னைப் பெற்றவர்கள் மனதை நோகடித்து,- சாதித்து முடித்த மாபெரும் பெண் சுதந்திரம்!

அப்படி ஒன்றும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து மருகும் காதல் பாரத மரபுக்குப் புதிது அல்ல! அவன் வீரத்தையும் போரில் அவன் பெற்ற தழும்புகளையும் மற்றவர்கள் சொல்லக் கேட்டே அந்த ராஜபுத்திர மாவீரன் மீது காதல் கொண்ட இளவரசிகளை இந்த பூமி கண்டிருக்கிறது! பிருத்விராஜ் – ராணி சம்யுக்தா முதல், அர்ச்சுனனைப் பற்றிக் கேள்விப்பட்டே அவனைக் காணாமலே அவன் மீது காதல் வசப்பட்ட சுபத்திரை வரை நமது பாரத பூமி பெண்மையின் சிருங்கார வெளிப்பாட்டைக் காவியம் ஆக்கி உள்ளது. எதிலும் தரம் அல்லவா முக்கியம்?

அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்வில், பெண்மையே அச்சாணியாகி, அந்தக் குடும்பத் தேர் நகர உதவியது. அதிலும் கணவனை இழந்து கைம்பெண்ணான சகோதரி  யாரேனும் இருந்தால், வீட்டில் உள்ள அவளது தமையன்கள், தம்பிகள் எல்லாரும் அவள் வாழ்வைத் தாங்கிப் பிடிப்பார்கள்! இவர்களின் குழந்தைகளுக்கும் அத்தையிடம்தான் பயம் – கண்டிப்பு – பாசம் – உரிமை எல்லாமே! அதிலும் அந்த விதவை அத்தைக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்க்கும் பொறுப்பையும் அண்ணன் தம்பிகளே ஏற்பார்கள். தாய் மாமன்களின் பராமரிப்பில் அவை வளரும்! பதிலுக்கு இந்த அத்தையும் அந்தக் குடும்பத்துக்கு தன்னை சந்தனமாக தேய்த்து உழைப்பாள்! பிறகு ஒரு கட்டத்தில் அவளின் பெண்ணையோ, பையனையோ தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ கொண்டோ, கொடுத்தோ அவள் இத்தனை நாள் உழைத்த உழைப்புக்கு பிரதி உபகாரம் செய்வார்கள். எந்த உழைப்பும் பலனின்றிப் போனதில்லை! அந்த சகோதரர்களின் மனைவிகளும் அந்த விதவை நாத்தனாரை, அந்தக் குறை அவள் மனதை உறுத்தாமல் அரவணைத்து நடப்பார்கள்! ஏதோ சில விஷயங்களில் அந்தப் பெண்மணிகளுக்குள் சில மனத் தாங்கல்கள், வருத்தங்கள், முணுமுணுப்புகள் இருந்திருக்கலாம்! ஆனால் அவர்கள் யாரும் யாரையும் கை விட்டதில்லை. மிக மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்மையின் நளினமான குணாதிசயங்கள் குடும்ப ஒற்றுமைக்கு அஸ்திவாரம் போல அமைந்து காத்தன!

ஐம்பது -அறுபது ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த என் பாட்டியும்- பாட்டனும், தாயும் தகப்பனும் எதை இழந்தனர்? மூன்றாம் வகுப்பு தாண்டாத என் அம்மா அனுபவித்த ஆளுமையும், குடும்பத்தில் அவள் சொல்லுக்கு இருந்த மதிப்பும், வீடே அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இயங்கிய ஒத்திசைவும் இன்றைய ‘சுதந்திரப்’ பெண்கள் பலருக்கு கிடைப்பதில்லை.

அது அடிமைத் தனமில்லை –  கட்டுப்பாடான ஒத்திசைவு! இணக்கமான கூட்டுறவு! பாசமும் கண்டிப்பும் கலந்த கலவை! உதறித் தள்ளுதலில் இல்லை – உடனிருந்து மேம்படுத்தலே குடும்ப இலக்கணம் என்ற மேன்மையான புரிதலே பாரதப் பெண்மை! அது முறுக்கிக் கொண்டு போகாது – நெருங்கி நின்று விவாதிக்கும்! நெருக்கம் கொடுக்கும் – ஆனால் நெருக்கடி கொடுக்காது! கண்டிக்கும் – ஆனால் வெறுக்காது! தான் கண்டிக்கப் பட்டாலும் அதில் உள்ளுறைந்து கிடக்கும் பாசத்தையும் உரிமையையும் உணர்ந்து அந்தக் கண்டிப்பை மனம் உவந்து ஏற்கும்!

இப்படிக் கட்டுப்படுதலுக்கும் – அடிமைப் படுதலுக்கும்; உரிமைக்கும் – தறி கெட்டுப் போவதற்கும்; பணிவுக்கும் – சுய மரியாதை அற்றுப் பல் இளித்தலுக்கும்; கண்ணியமான நகைச்சுவைக்கும் – ‘கெக்கே பிக்கே’ அசட்டுச் சிரிப்புக்கும்; நாகரிகமான சிலேடைக்கும் – விஷமத்தனமாக உதிர்க்கப்படும் இரட்டை அர்த்த சொல்லுக்கும்;…  இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளை உணர்ந்து தெளிதலையே திமிர்ந்த நல் ஞானம்” என்பான் பாரதி! இந்த நல் ஞானம்” கை கூடி, இளைய சமுதாயம் பெண்மையை அதன் உரிய தளத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடுவதில்தான், இன்று நாம் காணும் பல சமூக, குடும்ப, உறவுச் சிக்கல்களுக்கான தீர்வு இருக்கிறது.

 

 

ஞானமிக்க சிற்பிகள் நளினங்கள், நுட்பங்களை வெளிப்படுத்தக் கூடிய ‘பெண்மைக்’ கல்லையே சிற்பம் செதுக்கத் தேர்ந்தெடுப்பார்கள். ராதையின் நாணம், அதனுடன் போட்டியிடும் கிருஷ்ணனின் தாபம், ரதியின் நளினம், மன்மதனின் மோகம், இரண்யனை மடியில் இட்டுக் கிழிக்கும் நரசிம்மரின் கண்களில் தெறிக்கும் ரௌத்திரம், அம்பாளின் சாந்தம் … இப்படி சகல நளின நுட்ப சிற்ப வேலைப்பாடுகளை எல்லாம் பெண் கல்லில்தான் வெளிக்கொண்டு வரமுடியும். ஆண் கல் உரலுக்கும் அம்மிக்கும்தான்!

 

 

உதறித் தள்ளுதல் அல்ல, – உடனிருந்து மேம்படுத்தலே குடும்ப இலக்கணம் என்ற

மேன்மையான புரிதலே பாரதப் பெண்மை! அது முறுக்கிக் கொண்டு போகாது – நெருங்கி நின்று விவாதிக்கும்! நெருக்கம் கொடுக்கும் – ஆனால் நெருக்கடி கொடுக்காது! கண்டிக்கும் – ஆனால் வெறுக்காது! தான் கண்டிக்கப்பட்டாலும் அதில் உள்ளுறைந்து கிடக்கும் பாசத்தையும் உரிமையையும் உணர்ந்து அந்தக் கண்டிப்பை மனம் உவந்து ஏற்கும்!