வீடு திரும்பும் சொந்தக்காரர்கள்

பளிங்கு போல தெள்ளிய  ஆறுகள், சிற்றோடைகள்; துல்லிய நீல வானம்; கரும்புகையில்லா காற்று; காலையில் ஜன்னல் கதவைத் திறந்தால் கீச்சு கீச்சு என்று கிளிகள்- குருவிகள்- குயில்கள் ” ஹலோ ஹலோ , நான் ஒன்றும் அந்தக் காலத்தில என்று ஆரம்பிக்கும் ‘ பெருசும்’ இல்லை கவிதாயினியும் இல்லை.

இதெல்லாம் எங்கோ மலை வாசத் தலங்களிலோ ஆள் அரவரமற்ற காடுகளிலோ என்று எண்ண வேண்டாம். நான் சொல்வதெல்லாம் இன்று சென்னை, பங்களூரு போன்ற பெரு நகரங்களில் நாம் காண்பதைத் தான் .

பாரத பிரதமர் மார்ச் 24ஆம் தேதி இரவு கொ ரானா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் முழு அடைப்பு அறிவித்தவுடன் எப்படி இவ்வளவு நாட்களைக் கழிக்கப் போகிறோம், இது வரை நம் வாழ்நாளில் காணாத  ஒன்றாயிற்றே  என்ற குழப்பம், கவலை, போதாதற்கு பீதியைக் கிளப்பும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும். ஆனால் வழக்கம் போல் இந்த சிக்கலான காலங்களில் இயற்கையானது மனிதனின் மீட்புக்கு வந்தது.

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் முக்கிய இந்திய நகரங்களில் நைட்ரஸ் ஆக்சைடு அளவு கணிசமாகக் குறைந்துவிட்டதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.ஒட்டு மொத்த நாட்டின் உற்பத்திக் கூடங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், கடைகள், பொதுக் கூட்ட இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுப் போக்குவரத்து, கட்டுமானம் ஆகியவை நிறுத்தப்பட்டன. முக்கிய நகரங்களில் 2.5 க்கும் குறைவான பார்ட்டிகுலேட் மேட்டருடன், பல குடிமக்கள் தெள்ளத்  தெளிவான நீல வானங்களைப் பற்றி கூச்சலிட்டனர். மும்பை, சென்னை கொல்கத்தா மற்றும் பெங்களூர் முழுவதும் N2O இன் 71% வீழ்ச்சி ஒரு கன மீட்டருக்கு 52 முதல் ஒரு கன மீட்டருக்கு 15 ஆக குறைந்துள்ளது.

வாகன நெரிசல் மிகுந்த சாலைகள் புதிய ‘ குடிமகன்களைக் ‘ கண்டன. குதிரைகள், ஆடு மாடுகள் சாலையோரப் பச்சை பசும் புற்களை மேய்கின்றன. ஊட்டி, கொடைக்கானல், தேக்கடியிலோ சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் இயற்கையின் கருணை இன்னமும் அபாரம். கிளிகள், குயில்கள் மட்டும் அல்ல, மயில்களும் மிகவும் சுவாதீனமாக வீட்டு மாடிகளில் வந்து அமர்கின்றன. நியாயம்தானே, அவை தானே நமெக்கெல்லாம் ம ‘ மூத்த குடியினர் ‘.

நாட்டின் கடற்கரை முழுவதும், பிப்ரவரி – மே பருவம் ஆலிவர் ரிட்லி ஆமை வருடாந்திர கூடு கட்டும் பருவமாகும். ஆமைகள் ஆஸ்திரேலியாவின் தொலைதூர கடற்கரையிலிருந்து ஆயிரம் மைல் தொலைவில் இந்தியக் கடலின் வெதுவெதுப்பான நீர்நிலைகளுக்குச் சென்று முட்டையிடுகின்றன.

வழக்கமாக, இரைச்சல் மற்றும் மனித போக்குவரத்தின் காரணமாக இரவில் மட்டும் முட்டையிடும் ஆமைகள் பகல் நேரத்தில் நிம்மதியாக வந்து தங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காண முடிகிறது.

இந்த ஊரடங்கு  நாட்டின் நதிகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கங்கை நதியின் நீரின் தரம் 40-50% அதிகரித்துள்ளது. இது வாரணாசி – ஹரித்வார் நகரங்களில் முழுமையான தொழில்துறை மூடப்பட்டதன் காரணமாகும்,

நம்முடைய எல்லையற்ற நுகர்வுக் கலாச்சாரத்தை நாம் சற்று குறைத்தால் இயற்கையானது எவ்வாறு மீண்டும் வர முடியும்,  வாழ்வில் தவற விட்ட சின்னச் சின்ன சந்தோஷங்களை எப்படி மீண்டும் அனுபவிக்கலாம், இருக்கும் இடத்தை பறவைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள இப்படிப் பட்ட கட்டாய ஓய்வு தேவை போலிருக்கிறது.

லக்ஷ்மி ரங்கராஜன்