வி.ஹெச்.பி கண்டனம்

தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதித்த தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மிகவும் பழமையான ஆதீனமான மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுர ஆதினம், பல்வேறு ஆன்மீகப் பணிகள் மூலம் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறார். தருமபுரத்தில் 500 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும்  பட்டினப்பிரவேச விழாவில் ஆதீன சிஷ்யர்கள் குருமகாசன்னிதானத்தை  வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்வார்கள். இது மரபுவழி ஆன்மீக திருவிழா. ஆனால், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மூலமாக இதற்கு தடை விதித்துள்ளது. இது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற தமிழகத்தில் பண்பாடு கலாச்சாரம் மரபுவழி திருவிழாக்களை தடை செய்யும் சக்திகளை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது. இந்த பட்டினபிரவேச நிகழ்விற்கு அனைத்து ஹிந்து மக்கள், ஹிந்து இயக்கங்களுடன் சேர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்களும்  நிகழ்ச்சி  வெற்றியடைய  பங்கேற்பார்கள்.தமிழக அரசு இந்த பட்டினப்பிரவேசம் ஆன்மீக நிகழ்விற்கு தடை விதித்ததை நீக்கி மரபுவழி விழா நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று வி.ஹெச்.பி வலியுறுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.