வி.சி., கட்சி நிர்வாகி வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வீடு உட்பட ஐந்து இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா; வி.சி., கட்சியில் துணை பொதுச்செயலராக உள்ளார். இவர், நிதி நிறுவனத்துடன், ‘வாய்ஸ் ஆப் காமன்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, சமீபத்தில் திருச்சியில் வி.சி., நடத்திய மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கும், ஆதவ் அர்ஜுனான் ஏற்பாடு செய்துள்ளார்.

வி.சி., கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கு இணையதளம் துவக்கம் என, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இவர் நடத்தி வரும் நிறுவனங்கள் வாயிலாக, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை போயஸ் கார்டன் அருகே, கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு, வாய்ஸ் ஆப் காமன் அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை வேப்பேரியில் வசித்து வரும் தொழில் அதிபர் மகாவீர் ஈரானி என்பவரின் வீடு உட்பட ஐந்து இடங்களிலும் நேற்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது. ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ‘சப்ளை’ செய்ய, ‘டெண்டர்’ எடுத்துள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார் என்ற புகார் உள்ளது. அதனால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அலுவலகத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவற்றை நிறைவு செய்துள்ளனர். கைப்பற்றிய தொகை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.