கடந்த ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சங்கத்தின் அதிகாரிகள் பிற நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள ஹிந்து சமுதாயத்தினருடன் உரையாடுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், சர்சங்கசாலக் இம்முறை மேற்கொண்ட பயணம் மிகவும் உற்று நோக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சங்கம் சொல்ல விரும்பும் செய்தி என்ன? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. டாக்டர் மோகன் பாகவத் சங்கத்தின் செய்தியை மட்டும் சொல்லவில்லை; பாரதம் உலகுக்கு வழங்கும் செய்தியையும் எடுத்துரைத்தார்.
வசுதைவ குடும்பகம் — யாதும் ஊரே, யாவரும் கேளிர் — உலக ஒருமை. இதை மையமாகக் கொண்டே அவரது உரைகள் அமைந்திருந்தன. உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாரதம் என்றும், அவர்களுக்கு புகலிடம் அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் வாழ்வில் சிறக்கவும், பாரதம் வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பன்முகத்தன்மைதான் பாரதத்தின் சிறப்பு என்பதை வலியுறுத்திய அவர், உலகின் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், வழிபாட்டு முறைகள் வேறுபட்டிருந்தாலும், மனிதகுலம் ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்தார்.
“ஒவ்வொரு தேசமும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கடமை உண்டு. பாரதத்தின் கடமை வேற்றுமையில் ஒற்றுமையை உணர்வதும், அந்த ஒற்றுமையை உலகிற்கும் உணர்த்துவதுமே.”
இந்தக் கருத்துகளில் 1893-ம் ஆண்டு சிகாகோ சர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் முன்வைத்த சிந்தனையின் எதிரொலியைப் பார்க்க முடிகிறது. பார்சி உள்ளிட்ட துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு பாரதம் அளித்த அடைக்கலம், அனைத்து நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் பாரதத்தின் மரபு, உலக சகோதரத்துவம் ஆகிய பல கருத்துகள், சுவாமிஜியின் உரைகளில் வெளிப்பட்டதைப் போலவே, சர்சங்கசாலக்கின் உரைகளிலும் வெளிப்பட்டன.
ஆனால், இங்கே ஒரு முக்கியமான வேறுபாடும் உள்ளது. 1893-ல் விவேகானந்தர் மேற்கத்திய உலகிற்கு பாரதத்தின் தனித்துவமான ஆன்மிகப் பார்வையை அறிமுகப்படுத்தினார். 2026-ல் மோகன் பாகவத், அதே நாகரிகப் பார்வையை இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விடையாக முன்வைத்தார்.
நிராசை மற்றும் அவநம்பிக்கையால் சோர்ந்து போயிருந்த ஹிந்து சமுதாயத்திற்கும், பாரத தேசத்திற்கும் புத்துணர்வூட்டி எழுச்சிப் பெற செய்தது சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கப் பயணம். டாக்டர் மோகன் பாகவத்தின் பயணமானது, பெருகி வரும் ஹிந்து சமுதாயத்தின் பெருமைகளை அமெரிக்க சமூகம் அங்கீகரிக்கும் தருணமாக அமைந்தது. சமுதாயங்களுக்கு இடையேயான மோதல்கள், அரசியல் ரீதியான பிளவுகள் ஆகியவற்றால் உலகம் பல சவால்களை சந்தித்து வரும் வேளையில், இந்த பயணமானது உலக ஒருமை எனும் நல்லதொரு செய்தியை வலியுறுத்தியுள்ளது.
சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் மீது கொண்டிருந்த அதே நம்பிக்கையின் மற்றொரு வெளிப்பாட்டையும், மோகன் பாகவத்தின் உரையில் காண முடிந்தது. உலகத்தை இன்னும் சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்ற உந்துதல் இளைய தலைமுறையினரிடம் இருப்பதாகவும், அவர்களுக்கு இலக்கை மட்டும் கொடுக்க வேண்டும்; வழிமுறையை அவர்களே கண்டறிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். ஒட்டுமொத்த உலகிற்குமான அறநெறியையும், வளத்தையும் உருவாக்கும் ஆற்றல் இளைய தலைமுறையிடம் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இளம் தலைமுறை ஹிந்து அமெரிக்கர்களுக்கு தங்களது அடையாளத்தை சரியாக புரிந்துகொள்ள ஒரு வழியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய உலகம் சமுதாயங்களுக்கு இடையேயான மோதல்கள், மத சகிப்பின்மை, அரசியல் பிளவுகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், வேற்றுமையை மதித்து, சமூகங்களை இணைக்கும் விசாலமான எண்ணம் வேண்டும் என்ற செய்தியை மோகன் பாகவத்தின் பயணம் முன் வைத்துள்ளது.
அதன் அடிப்படையில் நம்பிக்கை, பரஸ்பர உரையாடல், இணைந்து பணியாற்றுதல், பன்முகத்தன்மைக்கான மரியாதை, மதங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு மற்றும் சேவை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பாரதத்தின் தொன்மையான ஞானத்தின் மூலம், இன்றைய நவீன உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விடை தேடுவதற்கான ஒரு வாய்ப்பையும் இந்தப் பயணம் ஏற்படுத்தியுள்ளது. உலக ஒருமைப்பாடு, சகோதரத்துவம், பரஸ்பர புரிதல், அனைத்து வேற்றுமைகளையும் மதித்து ஏற்றுக் கொள்ளுதல், அதற்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி கொள்வது, நிறைவாக உலகமே ஒரு குடும்பம், இதுவே உலகிற்கு பாரதம் சொல்ல விரும்பும் செய்தி என்பதை தெளிவாக்கியது, இந்த பயணத்திற்கு இது நிறைவு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!
பங்கேற்றவர்களின் நேரடி அனுபவம்
நியூயார்க் போகும் ரயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற்ற மேடிசன் ஸ்கொயர் அருகே, அமெரிக்க குடிமக்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து சொல்லி ராக்கி கட்டினோம். அவர்களுக்கும் புது அனுபவமாக இருந்தது, ஸ்வயம்சேவகர்களின் இந்த முயற்சிக்கு நியூயார்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சர்சங்கசாலக் நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மக்கள் பங்கேற்றார்கள். முஸ்லீம், யூதர்கள், கிறிஸ்தவ மத அறிஞர்கள் முதலில் பேசினார்கள், பிறகு சர்சங்கசாலக் பேசினார். சகோதரத்துவம், உலக ஒருமை குறித்தும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் தோளுடன் தோள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் டாக்டர் மோகன் பாகவத் ஜி குறிப்பிட்டார். இந்த உரை வந்திருந்த அமெரிக்க மக்களை மிகவும் கவர்ந்தது.
− அருண் வெங்கட், ஓஹியோ
நியூயார்க் நகரில் பலருக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை உணர்த்தினோம். நமது தர்மம் வலியுறுத்தும் உண்மை மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாக இது அமைந்தது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவம், இங்கு மிகச் சிறப்பாக உணரப்பட்டது. 30 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு சமயத் தலைவர்கள் ஒன்று கூடி, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மதிப்பிற்குரிய ரெவரெண்ட், இமாம் மற்றும் ரப்பி ஆகிய மூவரும் உலகளாவிய ஒருமைப்பாட்டின் மகத்துவத்தை ஒருமித்த குரலில் பேசினர். கலை நிகழ்ச்சிகள் துவங்கி சர்சங்கசாலக் சிறப்புரை வரை, அனைத்தும் உலகளாவிய ஒருமைப்பாடு – மனிதகுலத்தின் ஒற்றுமை என்ற செய்தியை ஆழமாக வெளிப்படுத்தின.
− ஹரிணி, சான் ஓண்டானியோ
கட்டுரையாளர் : கண்ணப்பன்