சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

8.ம. வெங்கடேசனின் மாரத்தான்

சென்னை, சிட்லபாக்கம் சென்ற வாரம். காலையிலிருந்து வீட்டுக்குழாயில் தண்ணீர் வரவில்லை. மொட்டை மாடியில் ஏறி பார்க்க வேண்டும். எத்தனை முறை தான் போன் செய்வது. எல்லாப் பிளம்பரும் ஒரேயடியாக துபாய்க்குப் போய் விட்டார்களா என்ற கேள்வி வீட்டில் எதிரொலிக்கிறது.‌ நீர் நிறைந்த கிணறும், கயிறும், தலைக்கட்டும் இருப்பதால் அடிப்படை பிரச்சினை இல்லை.
நம்முடைய பங்கிற்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா? யோசித்துப் பார்த்தேன், தேவையில்லா இடத்தில் வெட்டியாக ஆறு பேர் உட்கார்ந்துகொண்டு தவெக அரசு தப்பிக்குமா? என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வேலை இருக்கும் இடத்தில், ஆள் கிடைக்கவில்லை.
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் அல்டஸ் ஹக்ஸிலி இதற்குத் தீர்வாக ஒரு கதை எழுதி இருக்கிறார், நெடுங்கதை.
அந்தக் கற்பனை உலகில் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தனை எலக்ட்ரீசியன்களையும், பிளம்பர்களையும் மட்டுமே அவர்கள் உற்பத்தி செய்து கொள்வார்கள். ஆண், பெண், காதல், கடத்தல், கல்யாணம். விசிக பஞ்சாயத்து மற்ற விஷயங்கள் எதற்கும் அங்கே இடமில்லை. மற்ற பொருட்களைப் போல், மனிதரும் தயாரிக்கப்படும் பொருளாகி விடுகிறார்கள். இந்த அமைப்பை எதிர்த்துக் கலகம் செய்கிறான் கதாநாயகன்.
அமெரிக்க எழுத்தாளரின் பொன்னுலகம் பற்றிய பக்கங்களை ஆர்வத்தோடு புரட்டிக் கொண்டிருக்கும்போது “ஏங்க அந்த ஏணிய கொஞ்சம் எடுத்துக் கொடுங்க. பிளம்பர் வந்துட்டாரு” என்று உள்ளிருந்து குரல் வந்தது. எழுந்தேன்.
இருப்பு முக்கியம். இலக்கியம் இரண்டாம் பட்சம்தான்.
Brave New World. Aldous Huxley. 1932.

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்/ டாக்டர் சு நரேந்திரன் /என்.சி.பி.எச்
கடந்த நூறாண்டுகளாக அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி முதல் இன்றைய தமிழ்நாடு வரை ஓர் அரசியல் இயக்கம் நடந்து வருகிறது‌. இந்த இயக்கத்தின் வாரிசுகள், வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் பினாமிகள் சேர்த்து மொத்தமாக திராவிடம் என்று அழைக்கலாம்.
திராவிடத்துடைய செய்கூலி என்ன, சேதாரம் என்ன என்ற கேள்விக்கு இரண்டு விடைகள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் சொல்வது. சமுதாயத்தில், கல்வியில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு அரசுப் பணிகளையும், நிதியையும் கொடுத்து உதவுவது, அவர்களையும் முன்னேறிய வர்க்கத்தாரோடு சமன் செய்வது என்பது தான் எங்களுடைய நோக்கம் என்பது அவர்களுடைய அறிவிக்கப்பட்ட கொள்கை. உண்மையை நான் சொல்கிறேன்.
நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்த வெள்ளைக்காரன், தான் ஆட்சி செய்வதற்கு தகுதி உடையவன் என்று நிலை நிறுத்துவதற்காக கட்டுரைகளை, பொய்யுரைகளை, அதிகாரப்பூர்வமாக நம்மிடையே பரவ விட்டான். அதில் ஒன்று, இந்தியர்கள் தொழில் வளர்ச்சிக்குத் தோதானவர்கள் இல்லை, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது, அவர்களுக்கு அறிவு ஊட்ட வேண்டியது, நம்முடைய கடமை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். இதை நம்பிய இந்தியர்கள் தங்களை இரட்சிப்பதற்காக வந்த தேவனைப் போல், வெள்ளைக்காரனைக் கொண்டாடினார்கள்.
இந்தப் பொய் மூட்டையைத் தயாரித்தது வெள்ளைக்காரன். தூக்கிச் சுமந்தவன் திராவிடக்காரன். இதனுடைய விளைவுதான், இன்றைய தமிழக அரசியலின் கொள்கை இல்லாத கூட்டணிகளும், கூக்குரலிடும் கும்பல்களும். இத்தனை கொடுமையும் போதாது என்று, தமிழகத்தின் பொதுவுடமைக்காரர்களும் இந்த மூட்டை சுமத்தலில் தன்னெழுச்சியாக பங்கெடுத்தார்கள். இந்த சூழலில் இந்த நோய்க்கு மருந்தாக வந்திருக்கிறது டாக்டர் சு. நரேந்திரன் எழுதிய இந்தப் புத்தகம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் இருந்த கோடானு கோடி இந்தியர்களுக்கு ஏற்ற மருத்துவ முறை இங்கே இருந்ததா, அது எந்த அளவில் இருந்தது என்ற விஷயம்தான் கருப்பொருள். சுதேசி இந்திய மருத்துவ முறைகளை, ஆட்சியாளர்கள் எப்படி நசியச் செய்தார்கள் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி என்ற ஒரு முறையும் வளரக்கூடாது என்பதில் வெள்ளைக்காரன் கண்டிப்பாக இருந்தான். அதற்கேற்ற சட்டங்கள், அதற்கேற்ற கல்வி முறை, அதற்கேற்ற அரசியல் நகர்வு என்பதுதான் ஒரு தலைமுறைக்கு, அவன் வைத்தது தான் சட்டமாக இருந்தது.
சுதேசி மருத்துவத்தை தடுப்பது என்பது ஒரு பக்கம். ஆங்கில மருந்துகளை சுதேசி வைத்தியர்கள் பயன்படுத்துவதற்குத் தடை ஏற்படுத்துவது இன்னொரு பக்கம் அரசு கொள்கையால், ஆயிரக்கணக்கான சுதேசி மருத்துவர்களும் கோடிக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர்.
அம்மை நோயைத் தடுப்பதற்கு அம்மை குத்துதல் என்ற முறையை அறிமுகப்படுத்திய போது, பொது ஜனங்களிடையே எதிர்ப்பு இருந்தது. அதை சமாளிக்க எப். டபிள்யு. எலிட்ஸ் என்பவர் ஒரு சமஸ்கிருதச் செய்யுளை சுட்டிக்காட்டி அம்மை குத்துதலுக்கு சாஸ்திர சம்மதம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார். இந்திய மருத்துவ முறைகள் பற்றி ஆய்வு செய்ய ஆங்கிலேய அரசால் “உஸ்மான் குழு” நியமிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், டாக்டர் கேப்டன் ஜீ ஸ்ரீனிவாச மூர்த்தி எழுதுகிறார். “அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், இந்திய மருத்துவ முறைகள் சிறப்பாக உள்ளது, சிக்கனமானது, நமக்கு போதுமானது” என்று அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தமிழகத்து தேசியவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் மீது வீசப்படும் அபாண்டம் என்ற ஆயுதம் தொடர்ந்து பலரை பலி வாங்கி விட்டது. ஒரு பொய்யை நூறு முறை சொன்னால், அதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும், அதையே ஆயிரம் ஆக்கினால் அவர்கள் நம் கட்சிக்கு வந்து விடுவார்கள் என்பது திராவிடத்தை இயக்கும் விதி.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்ற தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது வீர சத்தியமூர்த்தி சட்டத்தை எதிர்த்ததாகவும், அவரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அடக்கினார் என்றும் ஒரு பொய்யுரை. இதை சொல்லாத மேடை இல்லை, இதை குறிப்பிடாத கழகத்தவர் இல்லை.
தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்தப் பொய்யுரையை பொடிப் பொடியாக்கி ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார்.
ம. வெங்கடேசன் / தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் / சுவாசம் வெளியீடு. சட்டமன்ற விவாதத்தை அப்படியே ஆங்கிலத்திலும், தமிழிலும் கொடுத்திருக்கிறார்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் மசோதாவாக கொண்டு வரப்பட்ட போது நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. ஒப்பிலி ராஜா பிரதமர் /02.02
1929. ‘சத்தியமூர்த்தி போன்ற தேசிய பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆதரவு அளித்தவர் தந்தை பெரியார்’ என்பது திராவிட வாதம். அந்த வாதத்தைப் பொடிப் பொடியாக்குகிறார் ம.வெ.
ம.வெ சொல்வது ‘தன்னுடைய சட்டமன்ற அனுபவங்களை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புத்தகமாக எழுதி “My experience as a legislator” என்ற பெயரில் அது வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் தேவதாசி மசோதா பற்றி அவர் விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் ஈ.வெ.ரா பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
இதைத் தவிர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அது “Autobiography of MRS S. Muthulakshmi Reddy” என்ற தலைப்பில், 1964ல் வெளிவந்தது. அந்தப் புத்தகத்திலும், ஈ.வெ.ரா.வின் பெயர் இல்லை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஈ.வெ.ரா அறிவுரை சொன்னதாகவோ, உதவி செய்ததாகவோ, வழி காட்டியதாகவோ தகவல் இல்லை. இந்தப் புத்தகத்தில் சத்தியமூர்த்திக்கு எதிராக எதுவும் இல்லை. அவருக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் இடையே நடைபெற்றதாக கூறப்படும் விவாதமும் இல்லை.
என்னுடைய அறிவுக்கும், படிப்பிற்கும் தெரிந்த அளவில் சொல்கிறேன். இது ஒரு அபூர்வமான முயற்சி. பக்கத்துக்கு பக்கம் ஆதாரங்களோடு நிறைந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் ம.வெ.வின் உழைப்பு தெரிகிறது. இந்தப் புத்தகத்திற்கு ” ம.வெ.வின் மாரத்தான்” என்றும் பெயர் வைக்கலாம்.

நாய்க்கு எங்கே அடிபட்டாலும், அது பின்னங்காலைத் தான் தூக்குமாம். நமக்கும் அப்படித்தான். கிடைத்த இடத்தில் காங்கிரசை கண்டனம் செய்ய வேண்டும். அதற்காக 1960களில், சீனாவிடம் நம் எல்லைப்புறப் பகுதியை பறி கொடுத்தது பற்றி ராமச்சந்திர குஹா எழுதுகிறார். ராமச்சந்திர குஹா/இந்திய வரலாறு /கிழக்குப் பதிப்பகம்.
“சீனப் படைகள் வெகுதூரம் முன்னேறி வந்த பிறகு, நேரு விழித்துக் கொண்டார். பஞ்ச சீலத்தைப் பத்திரமாக லாக்கரில் வைத்தார். ‌ கிருஷ்ணமேனன் இடமிருந்து அதிகாரத்தைப் பறித்தார். “அமெரிக்காவிடம் உதவி கேட்டார். ஆயுதங்கள் வந்தன‌”.
இதை எல்லாம் பதிவு செய்த ராமச்சந்திர குஹா, நேரு மீது சொல்லோ, கல்லோ விழாதபடி வியூகம் வைத்து எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.”
தொடரும்…

கட்டுரையாளர் : சுப்பு