வரவு செலவுக் கணக்கை கையாள்வதில் முன்மாதிரியானவர்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த சங்கர சுப்ரமணியன் என்ற எம்.எஸ்.எஸ் மணியன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

முத்துசாமி ஐயர் −- பகவதி தம்பதியினருக்கு மகனாக 1938 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கிழக்கோட்டம் என்ற ஊரில் பிறந்தார், எம்.எஸ்.எஸ் மணியன் என்று அனைவராலும் அழைக்கப்படும் சங்கர சுப்ரமணியன் ஜி. இவரது பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் ஆகும். தந்தை பம்பாயில் உள்ள ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றினார். பின்பு சிற்றுண்டிச் சாலை நடத்தி வந்தார்.
சங்கர சுப்ரமணியன் ஜி, தனது ஒன்பதாவது வகுப்பு வரை மதுரை அருகில் உள்ள மேலூரில் படித்தார். பத்தாவது மற்றும் பதினொன்றாவது வகுப்புகளை அருப்புக்கோட்டையில் முடித்தார். 1960 ஆம் ஆண்டு, பாண்டியன் வங்கியில் பணிக்குச் சேர்ந்தார். 1962ல், அரசாங்கத் தேர்வு எழுதி எழுத்தராக (கிளார்க்) பணியில் சேர்ந்தார். தபால் வழிக்கல்வி மூலமாக பி.காம் பட்டப்படிப்பை மைசூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவராக இருந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பேச்சினை கேட்டு, அவரைச் சந்தித்த பின் ஆன்மீகராக மாறினார். ராமகிருஷ்ணா மடத்திலும் தொடர்புடன் இருந்தார். பின்னர் வேதாத்திரி மகரிஷியிடம் தீட்சை பெற்றார். குரு தட்சிணையாக தனது கோபத்தை கொடுக்கச் சொன்னார், வேதாத்திரி மகரிஷி. அதனால் அன்று முதல் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்.
1967ல், ரமாமணி அம்மாளை திருமணம் செய்த சங்கர சுப்ரமணியன் ஜிக்கு, மாதங்கி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் பிறந்தனர். 1978ல், அவரது மகன் மணிகண்டன் மாலையில் நடக்கும் ஷாயம் ஷாகாவிற்கு சென்று விளையாடி விட்டு வருவார். மகன் செய்யும் உடற்பயிற்சிகள் பார்த்து தானும் ஷாகாவிற்கு சென்றார். அங்கு இருந்த சந்திரசேகர் ஜி, நடராஜன் ஜி அதன்பின் அவரை தொடர்ந்து ஷாகா வர வைத்து விட்டனர். இவ்வாறு சங்கர சுப்பிரமணியன் ஜிக்கு சங்க அறிமுகம் கிடைத்தது. அடுத்தடுத்த வருடங்களில் சங்கப் பயிற்சி முகாமை முடித்து, மூன்றாம் வருட பயிற்சி முகாமும் முடித்துள்ளார்.
அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி கரசேவையில் கலந்து கொள்ள லட்சுமி நாராயணன் ஜியுடன் சென்றபோது, உத்தரப்பிரதேசத்தின் மாணிக்பூரில் கைதானார். பின்னர் அங்கிருந்து தப்பித்து, மத்தியப் பிரதேசம் சம்பல்பூர் பள்ளத்தாக்கு காட்டினை கடந்து டபொளராவை அடைந்து, அங்கிருந்து காசிக்குச் சென்று, தமிழ்நாட்டில் இருந்து வரும் கரசேவககர்களுக்கு வழி காட்டினார்.
வருடந்தோறும் நடைபெறும் சங்கப் பயிற்சி முகாமில் அலுவலகப் பொறுப்பினை திறம்படச் செய்து, முகாம் முடிந்த அன்றே வரவு செலவு கணக்கினை முடித்து, சங்கத்தின் மூத்த பிரச்சாரக் சூரி ஜியின் பாராட்டைப் பெற்றுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்த வேதாந்தம் ஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புரசைவாக்கம் மற்றும் தலைமை அலுவலகத்தில் கணக்குகளை ஒழுங்குப்படுத்த உதவிகரமாக செயல்பட்டார்.
2004ல், சுனாமியின் போது சபரிமலை செல்ல விரதம் இருந்து வந்த நிலையில், நிவாரண வேலையில் மற்றவர்களுடன் இணைந்து ஈடுபட்டார். நாகபட்டினம் கலெக்டரிடம் சேவா பாரதிக்கு “சிறந்த சேவை அமைப்பு” என்ற பெயரினை பெற்றத் தர பணியாற்றினார். சங்க வேலையை போன்றே அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திலும் பொறுப்பு ஏற்றார். வருடா வருடம் சபரிமலை பெரிய பாதையில் நடந்து, அங்கே நடைபெறும் அன்னதானம் முகாமில் பதினைந்து நாட்கள் பணியாற்றுவார்.
பின்னர் சங்கம் தொடங்கிய விவித க்ஷேத்ர அமைப்பான “சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தில்” டிரஸ்டியாகவும், ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின் பொருளாளராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் விதிமுறைகளை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தார். பத்தனம்திட்டாவில் உள்ள சமாஜத்தின் கேரளம் சபரி சரணாஸ்ரமம் கணக்குகளையும் ஒழுங்குப்படுத்தி கொடுத்து உதவினார்.
1953 ஆம் ஆண்டு, தனது 15வது வயதில் சித்தப்பா ராமகிருஷ்ண ஐயருடன் சபரிமலை செல்லத் தொடங்கியவர், 2019 ஆம் வருடம் வரை என தொடர்ந்து 67 ஆண்டுகள், சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றுள்ளார்.
மகன் மணிகண்டன் சங்கத்தில் காரியகர்த்தாவாக இருந்தார், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும் முடித்துள்ளார். 1998ல், ஒரு சாலை விபத்தில் காலமானார். மனைவி ரமாமணி அம்மாள், 2012 நவம்பர் 15ல் காலமானார். தனது அம்மா மற்றும்‌ மனைவியின் கண்களை தானமளித்துள்ளார்.
மகள் மாதங்கி சேவிகா சமிதியுடன் இணைந்து வேலை செய்துள்ளார். சமிதியில் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம் முடித்துள்ளார். தன்னுடைய இறுதிக் காலம் வரை மகளுடன் வாழ்ந்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24ல், சங்கர சுப்ரமணியன் ஜி காலமானார்.
சங்கத்தில் எந்த ஒரு முகாமாக இருந்தாலும், வரவு செலவுக் கணக்கை எப்படி கையாள்வது, அதை எப்படி சரி பார்ப்பது, உடனுக்குடன் எவ்வாறு கணக்குகளை முடித்து சமர்ப்பிப்பது என்பதை கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுத் தந்த சங்கர சுப்ரமணியன் என்ற எம்.எஸ்.எஸ் மணியன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

கட்டுரையாளர் : அ. ஓம்பிரகாஷ்