மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் செளத்ரி என்று அழைக்கப்படும் பிட்டு தபாஹி, 2026 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அஜ்னார் நதிக்குள் இறங்கினார், வேலையைத் தொடங்கினார். ஆனால், நதியின் நிலை அவர்கள் நினைத்ததைவிட மோசமாக இருந்தது. தண்ணீரில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைகள், பாசி, மதச் சடங்குகளில் விடப்பட்ட பொருட்கள் என ஏராளமான கழிவுகள் தேங்கிக் கிடந்தன.
தண்ணீரில் கையை விட்டு, கண்ணில் பட்ட பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைகள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியே எடுத்தார். சிக்கிக் கிடந்த பாசி மற்றும் நீர்ச் செடிகளையும் அகற்றினார். கரையோரத்தில் குவிந்திருந்த திடக் கழிவுகளையும் சேர்த்து வெளியேற்றினார். பெரிய இயந்திரங்கள் எதுவும் அவரிடம் இல்லை; கிடைத்த அடிப்படை கருவிகளுடனும், பெரும்பாலும் தனது கைகளாலுமே வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் செய்துவிட்டு மறுநாள் காணாமல் போகாமல், பல மாதங்களாக அதே வேலையைத் தொடர்ந்து செய்தார்.
நதியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மட்டுமல்ல; மத வழிபாட்டுப் பொருட்களும் இருந்தன. அவற்றை மீண்டும் நதிக்குள் செல்ல விடாமல் சேகரித்து, வழிபாட்டுக் கழிவுகளை உரமாக மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டார்.
குப்பை மீண்டும் நதிக்குள் கொட்டப்படுவதைத் தடுக்க, தானே சில குப்பைத் தொட்டிகளையும் நிறுவினார். இதற்கான செலவுகளையும் அவர் தனது சொந்த பணத்திலிருந்தே செய்தார்.
வேலை முடியவில்லை என்றாலும், மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு குப்பையால் மூடப்பட்டிருந்த பகுதிகளில் தண்ணீர் தென்படத் தொடங்கியது. அவர் சுத்தம் செய்த இடங்களின் ‘முன்பு–பின்பு’ காட்சிகளை கேமராவில் பதிவு செய்தார். அந்த கேமரா அவருடைய வேலைக்கான சாட்சியாக இருந்ததே தவிர, ஆரம்பத்தில் புகழுக்கான கருவியாக இல்லை. மாதக்கணக்கில் தொடர்ந்து உழைத்து, அஜ்னார் நதியின் பல பகுதிகளில் கண்களுக்குத் தெரியும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அவர் செய்தது ஒரு நாள் ‘க்ளீனிங் டிரைவ்’ அல்ல. ஜனவரி 26 அன்று தொடங்கிய வேலை, மாதக்கணக்கில், பகுதி பகுதியாகத் தொடர்ந்து நடந்த ஒரு தனிமனிதப் போராட்டம். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியைத் தனது இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தி ‘ஜல் கங்கா சம்வர்தன் அபியான்’ என்ற மாநில அரசின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு இந்த முயற்சி பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரையாளர்: அன்னபூரணி ராஜேஷ்