விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்களை தடையின்றி பரிமாற அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சமூக நீதி வழக்கறிஞர்கள் பேரவை தலைவரான வழக்கறிஞர் கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், “சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் பொது இடங்கள் என்பதால் அங்கு மது அருந்துவது என்பது சட்டப்படி குற்றம். ஆகவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஒரு விளையாட்டு மைதானத்தில் 75 ஆயிரம் பேர் கூடுகின்றனர் என்றால் அவர்கள் அனைவரும் மதுபானங்கள் அருந்த அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே கல்வி நிறுவன கருத்தரங்குகளில் மதுபானங்கள் பரிமாறக்கூடாது என்பதுபோல, விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்களும் அதுபோல விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.