விளையாட்டு துறைக்கான நிதி 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கான நிதியை 3 மடங்கு உயர்த்தி இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 4வது பாரா மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா உத்தப்பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மத்திய தகவல் தொடர்பு மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அனுராக் தாக்கூர் இதில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விளையாட்டுத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் விளையாட்டுத்துறைக்கு 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் விளையாட்டுத்துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருவதற்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் மிக முக்கிய காரணம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான 500 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான ராமர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மறைமுகமாக விமர்சித்த அனுராக் தாக்கூர், “சிலர், தங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கே நியாயம் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அந்த கூட்டணிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அந்த கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்கத் தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதோடு, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைவதற்கு மம்தா பானர்ஜி அனுமதி மறுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.