வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபட்டவர் பொன் பாண்டியன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த பொன் பாண்டியன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

சாமியப்பன் நாடார் – காந்திமதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1937 ஆம் ஆண்டு பிறந்தார் பொன் பாண்டியன் அவர்கள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு தம்பிகள். தனது இளம் வயதிலிருந்தே திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டு, திராவிடர் கழகத்தின் அனுதாபியாக வளர்ந்தார். பின்னர் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேலை செய்தார்.
கன்னியாகுமரி அருகே உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், ஹிந்துக்கள் தினமும் வழிபாடு செய்து வந்தபோது, 1982 ஆம் ஆண்டில் பெண்களுக்கு தொந்தரவு தரும் வகையில் சில கிறிஸ்தவர்கள் செயல்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் வெகுண்டெழுந்து, வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். ஹிந்துக்கள் படும் இன்னல்களை, தமிழகம் எங்கும் வீதிதோறும் மக்களுக்கு அம்பலப்படுத்த பொதுக்கூட்டங்கள் நடத்தி, மண்டைக்காட்டில் நடந்த நிகழ்வுகளையும், பெரும்பாலான ஹிந்து மக்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையும் அனைவருக்கும் விளக்கிக் கூறி வந்தார்.
அப்போது சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் கூடிய கூட்டத்தின் நடுவே, ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை தாணுலிங்க நாடார் ஜி விவரித்த போது, நடந்த விபரங்களைக் கேட்டறிந்த பொன் பாண்டியன் ஜி மிகவும் துயருற்றார். தாணுலிங்க நாடார் ஜி பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக மடி ஏந்தி பிச்சை கேட்ட போது, தான் அணிவித்திருந்த மோதிரத்தை அவிழ்த்துப் போட்டு, ஹிந்துக்களின் துயர் துடைக்க உழைப்பதே, என் லட்சியம் என தீர்மானித்தார். ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணியில் இணைந்து இயக்கப் பணியைத் தொடங்கினார், பொன் பாண்டியன் ஜி.
வடசென்னை முழுவதும் குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் ஹிந்து எழுச்சி ஏற்பட, இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் ஜி மற்றும் தாணுலிங்க நாடார் ஜியை வரவழைத்து பல பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளார். அவர்களது எழுச்சியுரையைக் கேட்ட பல ஹிந்துக்கள், ஹிந்து சமுதாய ஒற்றுமைப் பணிக்காக வேலை செய்ய முன்வரத் தொடங்கினார்கள்.
ஒருமுறை 95 சதவீதம் ஹிந்துக்கள் வாழ்ந்தப் பகுதியில், திடீரென தொழுகை நடத்தப்பட்டது. அதனை எதிர்த்து எட்டு கோயில் அறங்காவலர்களை ஒன்றிணைத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இறுதியில் நியாயத்தின் பக்கமே தீர்ப்பு வந்து, அது நிறுத்தப்பட்டது.
இராம கோபாலன் ஜி மீது மிகுந்த அன்பு கொண்டு, அவரது பக்தராகவே வாழ்ந்தார். கோபால் ஜியும் பொன் பாண்டியன் ஜி மீது மிகுந்த அன்பு கொண்டு, எப்போது அவர் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் உடனே தேதி கொடுத்து, தவறாமல் கலந்து கொள்வார். அதேபோல் வீரபாகு ஜி போன்ற பல மூத்த சங்கப் பொறுப்பாளர்களை வரவழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தியதன் விளைவாக, விநாயகர் சதுர்த்தியன்று 32 அடி உயர விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வடசென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெறும். இதுபோன்று பல இடங்களிலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, ஹிந்து எழுச்சிக்கு வித்திட்டவர். அயோத்யா கரசேவையின் போது, பலரையும் அயோத்தியாவிற்கு அனுப்பி வைக்க அரும்பாடுபட்டார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை கோயில் ஒன்றில் பங்குனி மாதம் தோறும், ஹிந்துக்கள் அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி வழிபடுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு. அதனை அவதூறுப்படுத்தும் நோக்கில், நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிட்டு இருந்தனர். பொதுமக்களைத் திரட்டி அதனை கடுமையாக எதிர்த்தன் விளைவாக, நிகழ்ச்சி நடத்த வந்தவர்கள் திக்கு தெரியாமல் ஓடினர் என, இதனை நேரில் கண்டவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
பொன் பாண்டியன் ஜியின் செயலால் வேறு மதத்தினர்கள், மற்ற அமைப்பினர்கள் இவர் நடத்தி வந்த முட்டை கடையில் வியாபாரம் செய்யாமல் தவிர்த்து வந்தனர். புதியதாக அவர்கள் முட்டை கடை ஒன்றை ஆரம்பித்து, அவர் தரும் விலையை விட குறைவான விலைக்கு முட்டையை விற்று வந்தனர். அவர்களை சேர்ந்தவர்களும், மற்றவர்களும் எந்த ஒரு பொருளையும் பொன் பாண்டியன் ஜி கடையில் வாங்கக்கூடாது என தடை உத்தரவுப் போட்டனர். எனினும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், எதற்கும் அடிபணியாமல் ஹிந்து சமுதாய ஒற்றுமைப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
1960ல், குழலாமணி அம்மாளை திருமணம் செய்த பொன் பாண்டியன் ஜிக்கு தமிழ்செல்வி, மலர்குழலி, தங்க காமாட்சி, செல்வநாயகி, கனிசந்திரா, பாக்யலட்சுமி என்ற 6 மகள்கள் மற்றும் மதிமுருகசாமி, வடிவேலு முருகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று, நல்ல நிலையில் உள்ளனர். அவர்களது மகன்கள் சிலர் தற்போது சங்க ஷாகாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்து முன்னணியில் சென்னை மாவட்டத் தலைவர், மாவட்ட அமைப்பாளர், மாநிலப் பொருளாளர், மாநில செயற்குழு உறுப்பினர் என பல பொறுப்புகள் வகித்த பொன்பாண்டியன் ஜி, 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி இயற்கை எய்தினார்.
பல எதிர்ப்புகள் வந்தபோதும், எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து சமுதாயப் பணி செய்த பொன் பாண்டியன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்ந்தவர்.

கட்டுரையாளர் : அ. ஓம்பிரகாஷ்