மும்பை ஐ.ஐ.டி-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாஹில் வகோடே. கடந்த செப்டம்பர் 19 மாலை அவர் கல்லூரியில் உள்ள தனது ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது, கிடைத்த தகவல்கள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 19 அன்று கல்லூரியில் தேர்வு எழுதும் போது, இந்த மாணவர் செல்போன் ஒன்றை ரகசியமாக தன் மடியில் வைத்திருந்திருக்கிறார். இதை கண்டுபிடித்த தேர்வு கண்காணிப்பாளர் டீன் சூர்ய நாராயணா, தேர்வு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, சாஹிலை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியுள்ளார். இது சி.சி.டி.வி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அதன் பிறகு அந்த மாணவருக்கு அறிவுரைகள் வழங்கி, அவரது ஹாஸ்டல் அறைக்கு அனுப்பி வைத்துள்ளார். மாணவன் மீது, வேறு ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில், மாணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கு சற்றுமுன் நெருங்கிய தோழி ஒருவருக்கு சாஹில் போன் செய்து, தான் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டதாகக் கூறி இருக்கிறார். அந்த தோழி ஆறுதல் கூறி, கடந்து செல்ல அறிவுரை கூறியுள்ளார்.
இந்நிலையில் எங்கேயாவது ஏதாவது நடக்காதா என்று காத்திருக்கும் சில அறிவுசார் நக்சல் கும்பல், அவரது மரணத்திற்கு நிர்வாகத்தைக் காரணமாக்கி, சில மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தை அரங்கேற்றினர். போராட்டக்காரர்கள் தேர்வு கண்காணிப்பாளர் சூர்ய நாராயணவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாணவனின் பெற்றோரும் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக, பேராசிரியர் சூர்ய நாராயணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மறுபுறம் கல்லூரி பேராசிரியர்களும், பிற மாணவர்களும் சூர்ய நாராயணாவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினர், அறிக்கையும் வெளியிட்டனர். சில அரசியல் கட்சிகள், இதை பெரிய போராட்டமாக மாற்றி, மாணவர்களை பலிகடாவாக்க முயற்சிகள் மேற்கொண்டன. இதையடுத்து, டீன் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக சூர்ய நாராயணா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக வந்த செய்தி பொய் என்று நிர்வாகம் கூறி இருக்கிறது. பாரபட்சமின்றி விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக மட்டுமே, அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவன் தற்கொலை செய்துக் கொண்டது துரதிருஷ்டவசமானது என்பது மாற்று கருத்தில்லை. ஆனால் நேர்மையாக தனது பணியை செய்த பேராசிரியர் மீது, ஏன் வீண் பழியை சுமக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நேர்மையாக பணியாற்றுவோர் இத்தகைய பிரச்சனைகளுக்கு உட்படுத்தப்பட்டால், நாளை தவறு செய்யும் மாணவனை எந்த ஆசிரியரும் கண்டிக்க முன்வர மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு நடந்தால், கல்வியின் தரமே சீரழியும் என்கிறார்கள்! நியாயம் தானே!