10. கல்லூரிப் பெண்களும் காலை நேர போஸ்டரும்
அவரை சந்திக்கும்போது எனக்கு வயது இருபது. அவருக்கு அதைவிட ஐந்து வயது குறைவு. காலண்டரில் 1970. பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர் பெயர் வாசு பிரஸன். சற்று துடிப்பாகவே இருக்கும் வாசு, கல்லூரி வளாகத்தில் நடந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிக்ஷத் கூட்டத்துக்கு போனார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்குடைய தாயார் வித்யாவதி அவர்களை வரவேற்கும் கூட்டம். சிறப்பு அழைப்பாளராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசுவதாக ஏற்பாடு.
பரபரப்பான அந்தச் சூழலில் சிவாஜி கணேசன் சார்ந்திருந்த ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அரங்கத்தில் நிரம்பி விட்டார்கள். ஏ.பி.வி.பி.காரர்கள் மைனாரிட்டியாக ஆகிவிட்டார்கள். முதலில் வித்யாவதி வந்து காத்திருந்தார், பிறகு சிவாஜி கணேசன் வந்தார். இது ஏ.பி.வி.பி.காரர்களை சூடேற்றி விட்டது. தவிர சிவாஜி கணேசன் வாழ்க என்ற கோஷமும் ஒலித்தது. ஏ.பி.வி.பி.காரர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. ஆனால் சிவாஜி கணேசன் மேடைக்குச் சென்று, அந்த அம்மையாரின் காலைத் தொட்டு வணங்கினார். அதன் பிறகு நிலைமை சகஜமாயிற்று.
ஏ.பி.வி.பி.யின் செயல்பாட்டில் உள்ள தீவிரத்தன்மை வாசுவுக்கு பிடித்திருந்தது. அவர் அந்த மாணவர் இயக்கத்தில், தன்னை இணைத்துக் கொண்டார். கொஞ்ச நாள் ஏ.பி.வி.பி, பிறகு ஆர்.எஸ்.எஸ், பிறகு ஜனசங்கம் என்பதாக ஒரு சூறாவளிப் பயணம். 1971 காலத்தில், நான் நண்பர்களோடு ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காகப் பணி செய்து கொண்டிருந்தேன். ஆனால் பொதுத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜனசங்கம் பற்றி வாசு தொடர்ந்து வலியுறுத்துவார். முடிவில் நானும் நண்பர்களும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாக ஆனோம்.
ஜனசங்கத்திற்கென்று அடையாறில் தனியாக அமைப்பில்லை. தென்சென்னை மயிலாப்பூரில் குருமூர்த்தி, ராஜசேகர், லாண்டரி குப்புசாமி, தி.நகரில் நாராயண ராவ், மாம்பலத்தில் வாசு, ட. நடராஜன், ஐ.ஐ.டி.யில் கோவிந்தா, அண்ணாமலைபுரத்தில் ஹண்ட்ரட் ஜி ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள். இதில் ஹண்ட்ரட் ஜி தவிர மற்றவர்கள் இளைஞர்கள். நான் அடையார் ஷாகாவில் பெளத்திக் பிரமுக், வாசு பிரஸன் முக்கிய சிக்ஷக்.
இயக்க ரீதியாக நாங்கள் பாலர் பருவத்தில் இருந்தோம். பாரதிய ஜனசங்கம், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவாலய குழு, கோயில் பாதுகாப்பு இயக்கம், இந்து முன்னணி என்று வெவ்வேறு தயாரிப்புகள். மாவு ஒன்றுதான், பலகாரம் பலவிதம்.
அகில இந்திய அளவில் எந்த நேரமும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் போர் நடக்க வேண்டிய சூழ்நிலை. கோடிக்கணக்கான அகதிகள் கிழக்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவுக்குள் நுழைந்து விட்டார்கள். அவர்களை பராமரிக்க வேண்டிய சுமை, இந்திய அரசின் மீது விழுந்தது. கிழக்கு வங்காளத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, ஜனசங்கம் போராட்டத்தில் குதித்தது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் அன்றைய ஜனசங்கத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் பேசுவார் என்று சொல்லப்பட்டது, வாஜ்பாய் கூட்டத்திற்கான போஸ்டர் ஒட்டும் வேலை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முதல் நாள் நீண்ட நேர அரசியல் அலசலுக்கு பிறகு, நான் தூங்கப் போகிறேன் என்று வாசுவிடம் சொன்னேன். காலையில் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று அவன் நினைவூட்டினான்.
போராட்டம் செய்வது, கொள்கையை விளக்குவது ஆகிய விஷயங்களில் ஆர்வத்துடன் இருந்த எனக்கு போஸ்டர் ஓட்டுவது கொஞ்சம் பிரச்சனை தான். ஆனால் முக்கிய சிக்ஷக் சொல்வது தான் முக்கியம்.
காலை நேரம், கல்லூரி நேரம். அலுவலகம் போகும் அவசர நேரம். என் வயது ஒத்தவர்கள், ஆணும், பெண்ணும் கல்லூரிக்கோ, வேலைக்கோ போகும் அவசரத்தில், அங்கே குவிந்து கொண்டிருக்க, நான் மட்டும் சைக்கிள் கேரியரில், பக்கெட்டில் மைதா பசையோடு. போஸ்டரும், கையுமாக வாசு. இப்படி பெண்கள் பார்க்கும்படியாக நிற்பது எனக்குப் பிடிக்கவில்லை.
”டேய் பார்க்குறாங்கடா” என்றேன். “பார்க்கட்டும். அவங்க பார்த்தா தான் அடுத்தவரும் பார்ப்பாங்க. நல்லது” என்று என்னை அடக்கி விட்டார். எது நடக்கக் கூடாது என்று நான் பயந்தேனோ, அது நடந்து விட்டது. ஓடுகிற பஸ்ஸில் அடிபடாமல் தப்பி, ரோட்டை கடந்த இரண்டு பெண்கள் இங்கே வந்து விட்டார்கள்.
“சுப்பு நீ போஸ்டர் கான்ட்ராக்ட் எடுத்திருக்கியா” என்றாள் ஒருத்தி. அதை ஆமோதிப்பது போல் அடுத்தவள் சிரித்தாள். முக்கிய சிக்ஷக் பதில் பேசட்டும் என்ற எண்ணத்தில், நான் பதில் பேசவில்லை.
காலச்சுழலில் வாசு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, உயர்ந்து லெப்டினன்ட் கர்னல் ஆகி, காஷ்மீரில் காயம் பட்டு, இப்போது ஓய்வு பெற்று ஹைதராபாத்தில் வசிக்கிறார் மகளோடும், மனைவியோடும்.
சுஜாதாட்ஸ் / சுஜாதா / விகடன் பிரசுரம்
ஓவியத்தில் எத்தனையோ பாணிகள் உண்டு. ஒவ்வொரு பாணிக்கும் பரம்பரை உண்டு. ரவி வர்மாவை முன்னோடியாகக் கொண்டு, படம் வரைபவர்கள் ஏராளம். ஆனால் சிற்பியின் வழியில் கூட்டம் இல்லை. பத்மவாசன் உட்பட ஒன்றிரண்டு பேர் முயற்சி செய்தார்கள். நல்ல முயற்சிதான் இருந்தாலும் சிற்பி சிற்பி தான்.
தனக்குப் பின்னால் ஆள் இல்லை என்பது ஒரு வகை சிறப்பு என்றால், தனக்குப் பின்னால் அனைவரும் என்கிற முத்திரை சுஜாதாவுக்கு உண்டு. ஆய்வாளர்கள் அமைதியோடு இருந்தால், ஒன்று சொல்வேன். இன்றைய தமிழ் எழுத்தில், சுஜாதாவின் முத்திரை தவிர்க்க முடியாதது. அடேங்கப்பா எவ்வளவு பெரிய கேன்வாஸ். இதில் தமிழ் இலக்கணம் உண்டு, வரலாறு உண்டு, பண்பாட்டுச் சின்னங்கள் உண்டு, மனித மனதின் ஆழங்களும், அவலங்களும் உண்டு, சமூக அக்கறை உண்டு, சிணுங்கல் உண்டு, கொஞ்சம் சிற்றின்பமும் உண்டு.
சுஜாதாவைப் பார்ப்போம்.
தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. 1998 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டுப் பங்கு பற்றியும், பாஜக -அதிமுக கூட்டணி அடைந்த வெற்றி பற்றியும் சுஜாதா எழுதுகிறார்.
தமிழ்நாடு எந்த வகையிலும் அடங்காத, தேர்தல் குணங்கள் கொண்ட தனிப்பட்ட மாநிலம். சில பத்திரிகைகள் லட்சக்கணக்கில் செலவழித்து, அலையாக அலைந்து கருத்துக்கணிப்பு செய்தார்கள். டில்லி நுனி நாக்கு ஆங்கில சிபாலஸ்டுகளும், விரித்த தலை நளினி சிங்கம் எக்ஸிட் போல் வெளியேற்ற ஓட்டெடுத்து, கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து கணக்கெடுத்து, உத்திரவாதமாக தி.மு.க, த.மா.கா 35 இடங்களை பெறும், அ.தி.மு.க.வுக்கு ஐந்து கூட தேறாது என்றார்கள். எல்லாமே தலைகீழாக இருந்தது, தமிழ்நாடு முடிவு. இந்தத் தேர்தல் மிகப்பெரிய அதிர்ச்சி.
அதற்கு கோயம்புத்தூரிலிருந்து ரஜினிகாந்த் வரை பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரஜினிகாந்த் அரசியல் ஆலோசகரை உடனடியாக மாற்ற வேண்டும், நிர்தாட்சண்யமாக அலசிப் பார்த்தால் கோவை நிச்சயம், தமிழ் நாட்டின் மனசைப் புண்படுத்தி இருக்கிறது. கோவை நகரம், பி.ஜே.பி.யை தேர்ந்தெடுத்து, திமுகவுக்கு கரி பூசி இருக்கிறது. தென்சென்னையில் ஜனா கிருஷ்ணமூர்த்தி மயிரிழையில் தோற்றிருக்கிறார். (பக்கம் 99,100)
பொதுவாகவே ஒரு செலிபிரிட்டியோடு ஒரு சந்திப்பு இருந்தால், அதைப் பற்றி அன்று முழுவதும் பேசுவது தான் மனித இயல்பு. அதே சந்திப்பு தொடர்பாக மாறினால், கேட்கவே வேண்டாம். பெருமையும், உரிமையும் அதிகமாகிவிடும். இந்த சூழலில் தனக்கும், ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கும் உள்ள உறவு பற்றி சுஜாதா எழுதியது.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் பற்றி பலர் எழுதி விட்டார்கள். போக்ரான் அணு ஆயுத சோதனைக்கு பின், அவர் மேல் கவன வெளிச்சம் மிக அதிகமாய் இருக்கிறது. அவர் என்னுடன் படித்தவர் அல்லது அவருடன் நான் படித்தேன் என்பது பலருக்கு தெரியாது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி வகுப்பிலும், பின்னர் எம்.ஐ.டி.யிலும் சேர்ந்து படித்தோம்.
ரஷ்ய விஞ்ஞானிகள் சிலர் ஹைதராபாத் வந்திருந்தார்கள். தொழில் பேச வந்திருந்தார்கள். அவர்கள் புறப்படும் முன், ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்திருந்தார்கள். கலாம் உடன் நானும் சென்றிருந்தேன். ஒரு முக்கியமான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதை கொண்டாடும் சந்தோஷத்தில், ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு, அதை அருந்துமாறு வற்புறுத்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்ல, எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். ரஷ்யாவுக்கு விளக்கிச் சொல்ல ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
கலாம் தர்மசங்கட நிலையில், என்னருகே வந்து இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு, நீ நேரா போய் இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்து என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்துடு என்றார். நான் அவ்வாறே செய்துவிட கலாம் ஒரு கோப்பை தண்ணீரை, ரஷியர்களை நோக்கி உயர்த்தி சியர்ஸ் என்றார். (பக்கம் 177,178)
கட்டுரையாளர் : சுப்பு
தொடரும்…