‘மகாத்மா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விவாதமே எழுந்தது. பல்வேறு கருத்துகளில் குறிப்பாக, மதமாற்றத்துக்கு எதிரான நிலைப்பாடு, பசுவதைக்கு எதிர்ப்பு, சுதேசிப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம், தேசிய சிந்தனை, ராமராஜ்ஜியம், தீண்டாமையை ஒழிப்பதற்கான முயற்சி, அர்ப்பணிப்பு மனப்பான்மை, பொதுவாழ்வில் நேர்மை என பல்வேறு விஷயங்களில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனைகளுக்கும், காந்தியின் கருத்துகளுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதமிக்க ஹிந்துவாகவே என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் ஹிந்து சாஸ்திரங்கள் என அனைத்தின் மீதும், அவதாரங்கள் மற்றும் மறுபிறவி மீதும் நான் முழுநம்பிக்கை கொண்டுள்ளேன். தற்போது நடைமுறையில் உள்ள திரிக்கப்பட்ட வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் அமைந்துள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு கொண்டுள்ளேன்.
“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தைத் தெற்கிலும், ஜகந்நாத்தை கிழக்கிலும், ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத் தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் தமது வீட்டிலேயே கடவுளை வணங்க முடியும் என்பதை அறிந்தவர்கள்தான். நல்இதயம் கொண்டவர்கள் வீட்டிலேயே கங்கையின் புனிதம் இருப்பதாகக் கூறியவர்கள்தாம். ஆனால், அவர்கள் இதன் மூலம் பாரதம் இயற்கையாகவே பிரிக்க முடியாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என்பதை உணர்த்தினர். உலகில் வேறெங்கும் காண முடியாத வகையில், புனிதத் தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசிய உணர்வின் ஜூவாலையை ஏற்றினார்கள்
ஹிந்து மதத்தின் பெயரில் நடைபெறும் சில மூடநம்பிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை. மதத்தைப் புறக்கணித்துக் கொண்டு அவற்றை எதிர்க்க முடியாது. ( ஹிந்த் சுயராஜ்யம் அத்தியாயம் 9 )
பசு, ஹிந்து சமயத்தின் ஆழமான ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. பசுவைப் பாதுகாப்பது என்பது வெறும் ஒரு விலங்கைப் பாதுகாப்பது மட்டுமல்ல; பலவீனமான உயிரினங்களைக் காப்பதன் மூலம் அஹிம்சையை நடைமுறைப்படுத்துவதும் ஆகும். “பசுவின் மீது எனக்கு அளவற்ற இரக்கம் இருந்தால், அவளைக் காப்பாற்றுவதற்காக என் உயிரையே தியாகம் செய்வேன்” என மகாத்மா காந்தி தனது ஹிந்த் சுயராஜ்யம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதும், காந்தியின் அரசியல் கனவுகளில் ஒன்றாக இருந்தது. காந்தியின் விளக்கத்தில் ராமராஜ்ஜியம் என்பது சத்தியம், அஹிம்சை, நீதி, ஒழுக்கம், சமத்துவம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் நல்லாட்சியைக் குறிக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தங்களுடைய சொந்த நலனுக்காகப் பயன்படுத்தாமல், மக்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்பாகக் கருத வேண்டும் என்பதே காந்தியின் அரசியல் சிந்தனையின் அடிப்படை.*