இனியவை நாற்பது

தமிழ் இலக்கிய நூல்களை மாதம் ஒருமுறை பார்த்து வருகின்றோம். அந்தவகையில் இந்த மாதம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பது பற்றி அறிவோம். நூலாசிரியர் பூதஞ்சேந்தனார். 40 பாடல்களோடு கடவுள் வாழ்த்து ஒன்றாக 41 பாடல்களைக் கொண்டு இந்நூலினை அமைத்துள்ளார். மற்ற அறநூல்களைக் காட்டிலும், இந்நூல் சற்று வேறுபட்ட அமைப்பினைக் கொண்டது.
நூலில் வெறும் நான்கு பாடல்களே நான்கு இனிய பொருட்களைப் பற்றி அமைந்துள்ளது (பா.எண் – 1, 3, 4, 5). மற்றவை மும்மூன்று இனிய பொருட்களை மையமிட்டுப் பேசுவன. கடவுள் வாழ்த்து பாடல் சிவன், பிரம்மா, திருமால் என முக்கடவுளையும் பற்றி அமைந்துள்ளதால், ஆசிரியர் தன் நூலை சர்வ சமய நூலாக படைத்தது புலனாகின்றது.
உலக வாழ்வில் இனிமை தரும் பொருட்களைப் பட்டியலிட்டு, அவ்வழியே நீதியை கூறுவதே இந்நூலின் அடிப்படை நோக்கம். அதாவது, “இனியவை” (இனிமையானவை) என்றாலும், உள்ளடக்கம் வெறும் புலனின்பம் மட்டுமல்ல; மாறாக அறம், நீதி, சமூக ஒழுங்கு ஆகியவற்றை “இனிமை”யுடன் இணைக்கும் கருத்தியல் இங்கு காணப்படுகிறது.
சொல்லப்போனால், “நல்லது செய்வது இனிமையானது” என்ற சமன்பாட்டை நிலைநாட்டுவதே, இதன் அடிப்படை நோக்கம் எனலாம். இப்பாடல்களில் தனிமனித விழுமியங்கள் (துணிவு, மறம், வாய்மை, அறம், கல்வி) பொது நலனுடன் இணைக்கப்படுகின்றன.

ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது. (பா.எண்: 33)

(மக்கள் வெறுக்காத நற்செயல்களைச் செய்வதும் (அறம்), சோர்வு இன்றி முயற்சி செய்வதும் (துணிவு), போர்க்களத்தில் எதிர்ப்படைகளை வீரம் கொண்டு தடுப்பதும் (மறம்) இனியவை).
இது “தனி மனிதன் நல்லவனாக இருப்பது சமூகத்திற்கு நல்லது” என்ற கருத்தியலை உறுதிப்படுத்துகின்றது. சங்கம் மருவிய கால நீதி இலக்கியங்களின் பொதுப்போக்கும் இதுவே. பெரும்பாலான நீதி நூல்கள் “செய்” / “செய்யாதே” என்ற கட்டளைக் கூற்றுகளாகவே தம் கருத்துகளை உரைக்கும்; ஆனால் இந்நூல் “இது இனிது” என்ற மகிழ்வூட்டும் சொல்லாடலைக் கையாண்டு நீதியை மறைத்து முன்வைக்கிறது.
நோபல் பரிசு பெற்ற உளவியலாளர் டேனியல் கான்மேன் கண்டறிந்த பாஸிட்டிவ் ஃபிரேமிங் (Positive Framing) என்ற கோட்பாட்டின்படி, ஒரு நிகழ்வு ஏற்பட்டால் அது முறையே நல்ல மற்றும் தீய விளைவுகளைப் பெற்று இருந்தாலும், அதிலுள்ள நேர்மறையான முடிவுகளை மட்டும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் அழுந்தக் கூறி முடிவை அவர்களிடமே விட்டுவிடும்போது, எவ்வித புற உந்துதலும் இன்றி மக்கள் தாமாகவே செவிமடுத்து, அதன்படி செயல்படுவர்.
பொதுவாகவே, மனித மனம் ஏமாற்றம், விபத்து, ஆபத்து, இழப்பு, போன்ற வலி தரும் சொற்களைத் தவிர்க்கும். உதாரணமாக, பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக லாபம் ஏற்படும் என்று மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அதிக முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். அதுவே, பங்குச்சந்தை முதலீட்டில் அபாயம் அதிகம். அதனால் முதலீட்டுக் கூட இழக்க நேரிடும் என்று அறிமுகப்படுத்தும் போது, முதலீட்டாளர்கள் எச்சரிக்கை யுடன் பயணிக்க உதவும். இந்த உளவியல் உத்தியே இந்நூலிலும் அமைந்துள்ளது. கட்டளையிடாமலேயே கருத்துளைக் கற்பவர்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் இந்த மொழியியல் தந்திரம் இதன் மிகத் தனித்துவமான இலக்கியப் பண்பாகின்றது.
பல தேசங்களின் பாரம்பரிய நீதி இலக்கியங்கள் “நல்லொழுக்கம் = நல் வாழ்வு” என்ற அதே சமன்பாட்டைக் கொண்டுள்ளன. இனியவை நாற்பதில் “இனிமை”யை அறத்துடன் இணைப்பது போலவே, கன்பூசிய மரபிலும் “அறம்” என்பது தனிமனித மகிழ்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
அரசன் – குடிமகன், தந்தை – மகன் உறவுகளை இயல்பானதாகவும் விரும்பத்தக்கதாகவும் காட்டும் உத்தி இரண்டிலும் பொதுவானது. கொரிய மற்றும் ஹையோ கருத்துக்கள், இனியவை நாற்பதின் அரச நீதி/குடும்ப நெறி பாடல்களுடன் செயல்பாட்டு ரீதியில் ஒப்பிடத்தக்கவை.
சிறு, சுருக்கமான பாடல்களில் நெறிமுறை களை அடுக்கடுக்காகச் சொல்லும் வடிவம், உலக இலக்கியங்களுக்கு ஒப்பான கவிதை வடிவங்களிலும், இதே சுருக்க – அடர்த்தி பண்பு உண்டு. இரு மரபுகளிலும் காணப்படுகிறது.
நல்ல இல்லற உறவுகள் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும். கல்வி கற்பதும், சான்றோர் நட்பும், நல்ல நூல் படிப்பதும் அறிவை வளர்க்கும். உண்மை பேசுதல், பொறுமை, கோபமின்மை ஆகியவை ஒழுக்கத்தை உயர்த்தும். விருந்தோம்பல், ஈகை ஆகியவை பண்பாட்டின் உச்சம். அரசன் நீதியுடன் ஆள்வதும், குடிமக்கள் அச்சமின்றி வாழ்வதும் நல்லாட்சியின் அடையாளம்.
செல்வம் ஈட்டி, தகுந்தோர்க்கு வழங்குவது சிறப்பு; கஞ்சத்தனம் இழிவு. நோயின்றி வாழ்தல், நல்ல மக்களுடன் பழகுதல், உழைத்து உண்ணுதல் ஆகியவை எளிய இன்பங்கள். ஆக, தார்மீகம், அறிவு, கருணை, சமூகப் பொறுப்பு இணைந்ததே இனிய, பொருள்பொதிந்த வாழ்க்கை என்பது இந்நூலின் சாரம். புலவர் தேசினியால் 2004 ஆம் ஆண்டு இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இந்நூலின் சில பாடல்கள் ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளில் தரமாகக் கையாளப்பட்டுள்ளன. பிற மொழிப் பெயர்ப்பாளர்களின் கவனத்திற்கு இந்நூல் கொண்டு செல்லப்பட்டால் எதிர்காலத்தில் புதுப்புது ஆய்வு கோணங்களில் இந்நூல் ஆயப்பட்டு தமிழிலக்கிய ஆய்வு கண்ணோட்டம் மேலும் விரிவடையும்
கட்டுரையாளர்: முனைவர் பட்ட ஆய்வாளர்