சமூகத்திற்கு நாம் திருப்பிக் கொடுப்பதே தர்மம்

‘சேவா’ ஒரு தனிப்பட்ட துறையாக உருவானது
சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் நூற்றாண்டு விழா 1989–90 காலகட்டத்தில் நடைபெற்றபோது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் சங்கம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் அடிப்படையில், 1991ஆம் ஆண்டு சங்கத்திற்குள் சேவா விபாக் உருவாக்கப்பட்டது.
இன்று பல்வேறு சேவை அமைப்புகளின் மூலம் சங்க ஸ்வயம்சேவகர்கள் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு போன்ற துறைகளில் 1,67,113 சேவைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சேவை ஏன்?
ஸ்வயம்சேவகர்களால் இதை தொடர்ந்து செய்ய முடிவதற்கு காரணம், அவர்களின் தத்துவ அடித்தளம் ஹிந்துத்துவம் என்பதுதான். ஹிந்துத்துவம் என்பது ஒரு “மதம்” அல்ல. அது ஆன்மீகம் அடிப்படையிலான, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வாழ்க்கைப் பார்வையாகும்.
ஆத்மீயதா — பிறர் நம்முடையவர்களே என்ற ஆழமான உணர்வு — என்பதன் அடிப்படையில்தான், ஸ்வயம்சேவகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தச் சேவையை மேற்கொள்கிறார்கள். சிலர் இதை கிறிஸ்தவ மிஷனரிகளின் சேவைப் பணிகளுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கட்டுரையின் பார்வையில், மிஷனரி சேவை என்பது அதன் அடிப்படை வடிவில் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டது. சேவை என்பது அதற்கான ஒரு வழிமுறையாக இருந்தது; மதமாற்றமே முதன்மையான நோக்கமாக இருந்தது. மதமாற்றத்திற்கான வாய்ப்பு இல்லாத இடங்களில், சேவை மேற்கொள்ளப்படவில்லை என்பதே இங்கு முன்வைக்கப்படும் கருத்தாகும். இதனை விளக்குவதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
மியான்மர் எல்லைக்கு அருகில் மணிப்பூரில் “உக்ருல்” என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கிருந்த முழு மக்கள்தொகையும், கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தது. அதன் விளைவாக, அங்கு பள்ளியோ, கல்விக்கான ஏற்பாடுகளோ இல்லை.
1971ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரான சங்கர் (பையாஜி) கேனே அங்கு சென்றபோது, குழந்தைகளுக்குக் கல்வி பெறுவதற்கான எந்த வசதியும் இல்லை என்பதைக் கண்டு, அது அவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்று கவலை கொண்டார். அங்கிருந்த சில குழந்தைகளை மகாராஷ்டிராவுக்கு அழைத்துச் சென்று, கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.
ஆனால், மணிப்பூரைச் சேர்ந்த ஒரு குழந்தையை தெரியாத ஒருவரின் பொறுப்பில், மகாராஷ்டிராவுக்கு அனுப்புவது பெற்றோருக்கு எளிதான முடிவாக இருக்கவில்லை. எனவே, பையாஜி தன்னுடன் மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த பன்னிரண்டு வயது சிறுவனை உக்ருலிலேயே விட்டுச் சென்றார். அது பெற்றோரிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்கான அடையாளமாக அமைந்தது. நம்பிக்கை மெல்ல வளர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும், சில குழந்தைகள் மகாராஷ்டிராவுக்கு வந்து படிக்கத் தொடங்கினர். அது அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
மகாராஷ்டிராவுக்கு கல்விக்காக வந்த ஒவ்வொரு குழந்தையும் கிறிஸ்தவர்கள்தான். பையாஜி அவர்களை ஹிந்துக்களாக மாற்ற முயற்சிக்கவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருந்தனர். கல்வி முடித்த பிறகு அந்தக் குழந்தைகள் உக்ருலுக்குத் திரும்பினர். நல்ல வேலைகளில் சேர்ந்தனர். பையாஜியால் ஊக்கமடைந்து, குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கல்வி கற்கும் வகையில் அங்கேயே ஒரு பள்ளியை உருவாக்கினர்.
அருகிலிருந்த பள்ளிகளுக்கு “School”, “High School” போன்ற பெயர்கள் இருந்த நிலையில், பையா ஜியின் ஊக்கத்தால் உருவான அந்தப் பள்ளிக்கு “ஓஜா சங்கர் வித்யாலயா” என்று பெயரிடப்பட்டது. உள்ளூர் மொழியில் “ஓஜா” என்பது சமூகத்தின் மூத்தவரை மரியாதையுடன் அழைக்கும் சொல்.
‘சேவை’க்கு முன்பே இருந்த சொல் — தர்மம்
“சேவா” என்ற சொல் இந்தப் பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே, பாரதத்தில் இத்தகைய செயல்கள் அனைத்தும் தர்மம் என்றே புரிந்து கொள்ளப்பட்டன; இன்றும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகின்றன.
இங்கே தர்மம் என்பது மதத்தைக் குறிக்கவில்லை. ஆங்கிலத்தில் ‘Religion’ என்று அழைக்கப்படுவது, பாரதியச் சிந்தனையில் ‘உபாசனை’ என்பதற்கு நெருக்கமானது — அதாவது வழிபாடு. பாரதத்தில் தர்மம் என்பது, ஆன்மீகத்தின் வெளிப்பாடு. பாரதிய வாழ்க்கைப் பார்வை ஆன்மீகத்தில் வேரூன்றி இருப்பதால், அது அனைத்தையும் ஒருங்கிணைத்த முழுமையான பார்வையாக உள்ளது. படைப்பின் அனைத்தும் ஆன்மீக ரீதியாக ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற புரிதல் அதில் உள்ளது.
அதனால்தான் “வசுதைவ குடும்பகம்” — உலகமே ஒரு குடும்பம் என்ற சிந்தனை, பண்டைய காலத்திலிருந்தே பாரதிய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ‘நான்’ என்ற உணர்வு குறைந்து, பார்வை விரிவடையும் போது, ‘நாம்’ என்ற வட்டம் இயல்பாகவே பெரிதாகிறது. நம்முடையவர்கள் அல்ல என்று நினைத்தவர்கள் கூட, நம்முடையவர்களாகத் தோன்றத் தொடங்குகிறார்கள். இந்த ஆத்மீயதா, அதாவது ‘பிறர் நம்முடையவர்களே’ என்ற உணர்விலிருந்துதான், அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறது.
சமூகத்தின் மீது நமக்குள்ள சொந்த உணர்விலிருந்து கொடுப்பதும், சமூகத்திடமிருந்து பெற்றதை சமூகத்திற்கே திருப்பிக் கொடுப்பதும் — இதுவே உண்மையான தர்மம்.
ஸ்வாமி விவேகானந்தரின் ஐரிஷ் நாட்டுப் பிறப்புடைய சீடரான சகோதரி நிவேதிதா, தங்களது உழைப்பின் பலனை முழுவதுமாகத் தங்களுக்குள் வைத்துக் கொள்ளாமல், அதில் ஒரு பகுதியை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் மக்களைக் கொண்ட சமூகமே செழிப்படையும் என்று குறிப்பிட்டார். இவ்வாறு சேர்க்கப்படும் செல்வம் சமூகத்தின் ஒட்டுமொத்த வளமாக மாறி, சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் வளத்திற்கும் வழிவகுக்கிறது. இதுவே தர்மம்.
தர்மம் பாகுபாடு காட்டுவதில்லை. அது அனைவரையும் இணைக்கிறது; பிணைக்கிறது; தாங்கி நிற்கிறது. சமூகத்தின் இந்த சமூக மூலதனத்தை வளப்படுத்தும் ஒவ்வொரு செயலும் தர்மமே. மதம் தர்மம் அல்ல; மதம் உபாசனை. உபாசனையின் மூலம் ‘நான்’ என்ற உணர்வு குறைந்து ‘நாம்’ என்ற உணர்வு விரிவடைய உதவுகிறது. அந்த வகையில் அது தர்மத்தை நடைமுறைப்படுத்துவதற்கு துணை புரிகிறது. ஆனால் உபாசனைதான் தர்மம் என்று கூற முடியாது.
அடுத்த வாரம் தொடரும்…

கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ்.
தமிழில்: மருத்துவர் சுபா