தனது தந்தை தினமும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை சிறுவயதில் பார்த்துக் கொண்டிருந்தான் மகன். ஒருநாள், அந்த மகனே வானத்தைப் பார்த்தான். இவ்வளவு நாளும் நாம் மழைக்காகத்தானே வானத்தைப் பார்த்தோம், அதே வானத்திலிருந்து வருமானத்தைப் பெற முடியாதா? அந்த ஒரு கேள்விதான் இன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வயல்களில் சூரிய ஒளியாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
வயலில் ஒரு பக்கம் பயிர்கள், இன்னொரு பக்கம் சூரியனை நோக்கி விரிந்திருக்கும் சோலார் பேனல்கள். ஒரு காலத்தில் இதே வயலில் தண்ணீருக்காகவும், மின்சாரத்துக்காகவும் போராடிய விவசாயி, இன்று அதே சூரிய ஒளியிலிருந்து வருமானத்தையும் பார்க்கிறார்! இதற்குப் பின்னால் இருப்பவர் பவேஷ்.
மத்தியப் பிரதேசத்தின் கல்காட் பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த பவேஷ், தனது தந்தை விவசாயத்தில் பட்ட கஷ்டத்தை சிறுவயதிலிருந்தே பார்த்தவர். வாழ்நாள் முழுவதும் விவசாயம் செய்தும், ஏன் நிலையான வருமானம் கிடைக்கவில்லை? இந்தக் கேள்வி பவேஷின் மனதில் ஆழமாகப் பதிந்தது. படிப்பு முடிந்ததும் தொழில்நுட்பத் துறையில் வேலை, IIT-_BHU படிப்பு, Agri-tech, Climate-_tech என பல துறைகளில் அனுபவம்.
மனதில் இருந்து விவசாயம் மட்டும் போகவில்லை.“விவசாய நிலம் பயிரை மட்டும் தர வேண்டுமா? மின்சாரத்தையும் தந்தால் என்ன?”
அரசின் PM_–KUSUM திட்டத்தின் மூலம் விவசாயத்துடன், சூரிய மின்சாரத்தையும் இணைக்கும் வாய்ப்பை பவேஷ் ஆராயத் தொடங்கினார். மற்றவர்களுக்கு சொல்லும் முன், தானே செய்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தனது குடும்ப நிலத்தில் 2 MW திறன் கொண்ட சோலார் மின் நிலையத்தை அமைத்தார். சூரியன் உதித்தது. சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்தன. அந்த மின்சாரம் மின்வலை அமைப்புக்கு விற்பனை செய்யப்பட்டது. “அட… இதுவும் ஒரு வருமான வழிதானே!” என்று சுற்றியிருந்த விவசாயிகள் கவனிக்கத் தொடங்கினர்.
“எங்களாலும் இதைச் செய்ய முடியுமா?” அந்த ஒரு கேள்விதான் பவேஷின் அடுத்த பயணத்தைத் தொடங்கியது. அதன் விளைவாக உருவானதுதான் Solar sure. 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் தகவலின்படி, 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் திட்டங்களில் இணைந்துள்ளனர். 300 MW-க்கும் அதிகமான சோலார் மின் திறனும் நிறுவப்பட்டுள்ளது. இங்கே பவேஷின் பார்வை சற்று வித்தியாசமானது.
இதன் பலனைப் பெற்ற எண்ணற்ற விவசாயிகளில் ஒருவர் நிகில் படேல். சோலார் திட்டத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைப்பதால், குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட முடிகிறது. ஒரு பக்கம் மின்சாரச் செலவு குறைகிறது. இன்னொரு பக்கம், சூரிய மின்சாரம் மூலம் வருமானம் கிடைக்கிறது என்கிறார் நிகில். விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்த்து வலிமை சேர்த்த பவேஷ் அறியப்படாத மாபெரும் சாதனையாளர்.
கட்டுரையாளர் : சமூக ஆர்வலர்