விண்ணிலே பறந்தாய்! நெஞ்சிலே நிறைந்தாய்! – அனுமன் ஜெயந்தி

இஷ்ட தெய்வம் அனுமன்

‘மகாவீரனான அனுமனை உன் இஷ்ட தெய்வமாக்கிக் கொள். புத்தி சாதுர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்றவற்றுக்கு ஒருவரை உருவகப்படுத்தினால் அது அனுமனாகத் தான் இருக்க முடியும். ராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும்’ – சொன்னவர் யார் தெரியுமா?வீரத்துறவி விவேகானந்தர்.

புத்திமான் பலவான்

புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலம் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமர் மனம் மகிழும் விதமாக ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர். கடலை தாண்டுவது, மலையை பெயர்ப்பது, காட்டை துவம்சம் செய்வது என அவரது வீரத்தை பட்டியலிட முடியாது. வாலில் நெருப்பு வைத்தபோது இலங்கையை தீக்கிரையாக்கினார். இவரை ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என்றும் அழைப்பர்.

அனுமன் – பெயர் விளக்கம்

‘ஹனு’ என்றால் ‘தாடை’ ‘மன்’ என்றால் ‘பெரிதானது’. ஆகவே ‘ஹனுமன்’ என்றால் ‘பெரிய தாடையை உடையவன்’ என்பது பொருள். அதை ‘அனுமன்’ என குறிப்பிடுகிறோம். அஞ்சனையின் மகன் என்பதால் அவர் ‘ஆஞ்சநேயர்’. வாயு பகவானின் மகன் என்பதால் ‘வாயு புத்திரன்’. சூரிய பகவானை குருவாகக் கொண்டு ஒன்பது விதமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்ததால், ‘நவ வியாகரண பண்டிதர்’ என போற்றப்படுகிறார்.இவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரமான இன்று (டிச.25) அனுமன் கோயில்களில் திருவிழா களைகட்டும்.

நம்முடன் வாழும் சிரஞ்சீவி

ராமபிரான் வைகுண்டம் புறப்பட்ட போது அனுமனையும் அழைத்தார்.ஆனால், ‘வைகுண்டத்தில் உங்களை வணங்க கோயில்கள் இருக்காது. ராமநாமம் ஒலிக்காது. நான் பூலோகத்தில் இருக்கிறேன்’ என பிரியாவிடை கொடுத்து, பூமியில் சிரஞ்சீவியாக நம்முடன் இருக்கிறார் என்பது சத்தியம். ராம நாமம் சொல்லி அனுமனை வணங்கினால், தீய சக்திகள் நெருங்காது. புத்தி, பலம், புகழ், தைரியம், ஆரோக்கியம், வீரம் உட்பட அனைத்தும் கிடைக்கும்.

வாலில் நவக்கிரகங்கள்

ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர்.சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார். இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார் சிவன். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால், அனுமனின் வாலாக பார்வதியும் உடன் வந்தாள். மேலும் அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.

வாலில் நுனியில் இருந்து, இந்த ‘பொட்டு வைக்கும் பிரார்த்தனையை’ தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து, ஒரு மண்டலத்திற்குள் (48 நாள்) பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறும். அவல், தேன், பானகம், கடலை, இளநீர் படைத்து வழிபடலாம்.

சுந்தர காண்டம் படித்தால்…

அனுமனுக்கு ‘சுந்தரன்’ என்றொரு திருநாமம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில்’சுந்தர காண்டம்’என்ற பெயரில் தனியே இணைத்தார். ‘சுந்தர காண்டம்’ பாராயணம் செய்தால் குழப்பம் நீங்கி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ‘சுந்தர காண்டத்தை தினம் படிக்க வியாதி பறந்தோடும். கர்ப்பிணிகளுக்கு நல்ல குணமுடைய குழந்தை பிறக்கும்.

வரமளிப்பார் வாயுமைந்தர்

அனுமன் வழிபாடு என்றதும் நம் நினைவுக்கு வருபவை வெற்றிலை மாலை (வெற்றி வேண்டி அணிவிப்பது), வடைமாலை (ராகுதோஷம் நீங்க), வெண்ணெய்க்காப்பு (பிரச்னை மறைய) இவை தவிர செந்துாரம் அணிவித்தல், ராமநாமம் எழுதப்பட்ட மாலை சார்த்துதல் உள்ளிட்ட வழிபாடுகள் சிறப்பானவை. மாதம் தோறும் மூலநட்சத்திரத்தன்று விரதமிருந்து ராம நாமம் ஜபிக்கலாம். அத்துடன் அனுமன் அஷ்டோத்ரம், அனுமன் சாலீசா படிக்கலாம்.வாயு மைந்தரான அனுமன் எல்லா நலன்களை வழங்க வேண்டி பிரார்த்திப்போம்.