விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம் – அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 28 நாட்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பிற்பகல் 12 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் நகருக்குள் வந்தனர்.

கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை அளித்தனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் நகருக்குள் நுழைந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பாடமல் இருப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் எலுமிச்சை சாறு கலந்த 400 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அத்திவரதரை தரிசக்க வரும் பக்தர்களை போலீஸார் திருப்பி அனுப்புவதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அவர் கூறும்போது, “சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களை திருப்பி அனுப்பவில்லை. நகருக்குள் கட்டுக்கடங்காத வகையில், வெளியூர் பக்தர்கள் கூட்டம் இருப்பதால், நெரிசலை தவிர்ப்பதற்காக அவர்கள் வெளியேறிய பின்னர், அனுமதிக் கப்படுவீர்கள் என்று தெரிவித்தனர். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித் தார்.