வாழ்க்கையை சீரழிக்கும் போதை

பெற்றோரின் வருமானத்தில் படிக்கும் பிள்ளைகள், தங்கள் கடமையை உணர்ந்து தவறான வழியில் செல்லாமல், நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் பெற்றோருக்கு பெருமை தேடி தர வேண்டும். எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள் தான், ஒரு சிலரின் தவறான சேர்க்கையால் பின்விளைவுகள் தெரியாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தங்களுடைய எதிர்காலத்தையே சிலர் வீணாக்கிக் கொள்கின்றனர்.
குடும்பத்தில் ஒருவர் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுது, அவருடைய தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அவரால் மற்றவர்களைப் போல், இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், பண தேவைக்காக தன் குடும்பத்தில் உள்ளவர்களை தொந்தரவு செய்வார், குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொடர்ச்சியாக போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் உடல் ஆரோக்கியம் கெட்டு, சுய சிந்தனையை இழந்து, ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள்.
மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, எந்த கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதில் இளம் வயதினர் கவனமாக இருக்க வேண்டும். யார் எதை கொடுத்தாலும், வீட்டுக்கு தெரியாமல் அதனை வாங்கி பயன்படுத்தக் கூடாது என, பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கையையும், ஒழுக்கத்தையும் பெற்றோர் கவனிப்பது முக்கியம்.
இளம் பருவத்தினரின் தினசரி நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அதனை கண்காணித்து, அதற்கான காரணத்தை அறிந்து அதனை சரி செய்ய வேண்டும். பெற்றோர் கண்டுகொள்ளாமல் விடும் பிள்ளைகள், தங்களை கேள்வி கேட்க யாரும் இல்லை என்பதால், தேவை இல்லாத பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே பெற்றோரின் அன்பும், பராமரிப்பும் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் தேவை.
குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தந்தையால், பள்ளிக்கூட பாடங்களை கூட படிக்க முடியாத சூழ்நிலைக்கு பிள்ளைகள் ஆளாகின்றனர். அதனால் குடிப்பழக்கம் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தின் நன்மையைக் கருதி, அதனை குடும்பத்திற்குள் கொண்டு வராமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் ஒருவரின் போதைப் பழக்கத்தினால் பிள்ளைகளின் பாதிப்பதுடன், குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படவும் வழி வகுக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக, போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். பொதுவாக மனிதர்களுடைய எந்த பிரச்சினைக்கும், போதைப் பழக்கம் தீர்வாகாது என்பது தான் உண்மை.
போதை ஒருவரை தெளிவில்லாமல் வாழச் செய்து, கடைசியில் அவரது குடும்பத்தினரே அவரை வெறுக்கும்படி செய்து விடும். ஒரு தவறை செய்து விட்டால், அதிலிருந்து மீண்டு வருவது தான் நல்லது. மன உறுதியுடன் இருந்தால், போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

கட்டுரையாளர்: மோ. கோமதி
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், தமிழ்நாடு