அரசுப் பள்ளியிலிருந்து விண்வெளி வரை மாணவிகளின் பயணம்

“அரசுப் பள்ளி மாணவி விண்வெளி ஆராய்ச்சியில் தடம் பதிக்கப் போகிறார்”, அது ஒரு மாணவியின் வெற்றிக் கதையில் முடிவதில்லை. பாரதத்தின் கல்விக் கொள்கை, அறிவியல் முதலீடு, பெண்கள் முன்னேற்றம், தனியார் -அரசு கூட்டாண்மை, உலகளாவிய STEM இயக்கம் எனப் பல அடுக்குகளைத் தொடுகிறது.
STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்ற நான்கு துறைகளின் ஒருங்கிணைந்த கற்றல் முறை. இதனை ஊக்குவிக்க நிதி ஆயோக் மூலம், அட்டல் டிங்கரிங் லேப் (ATL) திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் வெறும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்குவது அல்ல; பிரச்சினைகளை அறிவியல் சிந்தனையுடன் அணுகும் புதுமையாளர்களை உருவாக்குவதாகும்.
நமது கல்வி முறை நீண்ட காலமாக மதிப்பெண்களை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் ATL, வேறுபட்ட அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. ஒரு மாணவர் மின்சுற்றை தானே அமைக்கிறார், ரோபோவை இயக்குகிறார், 3டி பிரிண்டரில் மாதிரியை உருவாக்குகிறார், கோடிங் கற்றுக்கொள்கிறார். அறிவியல் என்பது புத்தகத்தில் இருக்கும் வரிகள் அல்ல; அனுபவத்தில் கிடைக்கும் புரிதல் என்பதை இந்த ஆய்வகங்கள் கற்றுக் கொடுக்கின்றன. உலகளவில் விண்வெளி மற்றும் உயர்தர தொழில்நுட்பத் துறைகளில், பெண்களின் பங்கேற்பு இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த இடைவெளியை குறைப்பதற்காகவே பெண்களை மையமாகக் கொண்ட STEM முயற்சிகள் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இன்-ஸ்பேஸ், இஸ்ரோவின் ஒத்துழைப்பு மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முன்னெடுக்கும் இந்த முயற்சி, 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 மாணவிகளை STEM மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பப் பயிற்சியுடன் இணைக்கும் உலகளாவிய திட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக, மதுரை திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என். மோனிகா மற்றும் ஏ. ஜமீலா தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் 120 மணி நேர ஆன்லைன் பயிற்சி, தொழில்நுட்ப மதிப்பீடு உள்ளிட்ட பல கட்டங்களை வென்று பாரதிய அணியில் இடம்பிடித்தனர். ஆசிரியர் சி. சிந்தியா அவர்களின் வழிகாட்டுதல், இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. ஜமீலா தனது தந்தை தினக்கூலி தொழிலாளி என்றும், கல்வி தான் தனது வாழ்க்கையை மாற்றும் சக்தி என்றும் கூறியுள்ளார்.
ஒரு அரசுப் பள்ளியில் ₹10 லட்சம் மதிப்புள்ள ஆய்வகத்தை அமைப்பது செலவு அல்ல; அது எதிர்காலத்தில் உருவாகும் விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதலீடு. அறிவியல் சாதனைகள் சமூகத்தில் தொடர்ந்து பேசப்படும்போதுதான், அடுத்த தலைமுறை குழந்தைகள் அதைப் பார்த்து கனவு காணத் தொடங்குவார்கள்.
இந்த சாதனையை கல்வி, அறிவியல் மற்றும் பெண்கள் முன்னேற்றக் கொள்கைகள் இணைந்து உருவாக்கிய ஒரு புதிய திசையின் அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்