சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

இந்த நூற்றாண்டின் துவக்கம். இடம் மதுரை. மதுரை என்றதும், மீனாட்சிக்கு அடுத்தது நாம் உணர வேண்டியது வெயில். அந்த வெயில் தாக்குண்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறேன் நான். சூடு தாங்க முடியாமல், கொஞ்சம் நகர்ந்தால் பக்கத்து டீக்கடையில் இருந்து உஷ்ணம். அப்போது ‘அந்த வானம் அழுதால்தான் இந்த பூமி சிரிக்கும்’ என்ற தத்துவ வரிகள். பாட்டு முடிந்து நிகழ்ச்சியைத் துவக்கும் பெண்மணியிடம் யாரோ ஒரு நேயர் நெளிந்து கொண்டிருக்கிறார்.
எதற்கு இந்த குரலால் நடத்தும் கோமாளித்தனம். நேரடியாக பாட்டைப் போட்டால் யாரும் கேட்க மாட்டார்களா? தேவை என்றால் ஒரு கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு நடத்தி அந்த வரிசைப்படி அலற விடலாமே.
அதற்குள் அடுத்த பாட்டு. தோம், தோம் என்று குதித்தல். சாந்தோமைத் தவிர எல்லா தோமையும் ஒரே பாட்டில் சங்கமமாக்கும் முயற்சி. நல்ல வேளையாக நாலாம் நம்பர் பஸ் வந்து விட்டது…
வளைகாப்பு முதல் வாழ்க்கையின் எல்லை வரை, நம்முடைய உணர்ச்சிகளுக்கு நெடியேற்றுவது சினிமா. குடும்பச் சண்டையாக இருந்தாலும், கொள்கைப் போராட்டமாக இருந்தாலும், சினிமாவின் சாயல் அங்கே நிச்சயம் இருக்கும். இன்றைய இளைஞர்களிடையே படிப்பவர்களை விட, பார்ப்பவர்கள் அதிகம். எனவே சினிமா. ஆனால் தமிழல்ல, ஆங்கிலம் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம் கல்லியின் தயவால்.
கல்யாண ராமராவ் என்கிற எதிர்வீட்டு கல்லிக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அதைக் கொண்டாடுவதற்காக என்னை சினிமாவுக்கு அழைத்துப் போனான். ரொம்ப நட்பு என்று சொல்ல முடியாது. “வரியாடா” என்று கேட்டான். வார்த்தையை முடிப்பதற்குள் அவனோடு ஒட்டிக் கொண்டேன். அவன் ஆவியானான் நான் பரிசுத்தமானேன்.
13 வருடங்கள் திட்டமிட்டு, 13 மணி நேரம் செயல்பட்டுக் கொள்ளை அடித்ததை, 13 வினாடிகளில் பறிகொடுத்தது பற்றிய கதை. கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) கோடிக்கணக்கில் மதிப்புடைய வைரம் ஒன்று. அது இருப்பது பாரிஸ் நகரத்தின் வங்கிப் பெட்டகத்தில். அதன் மீது குறி வைக்கிறான், ஒரு கிழவன். ஒத்தாசைக்கு மகள். மகள் அந்த வங்கியில் வேலைக்கு சேர்ந்து, திருடுவதற்கான முன் தயாரிப்பில் 13 வருடங்கள் பாடுபடுகிறாள். பிறகு அப்பனும், மகளுமாய் ஒரு நல்ல முகூர்த்தத்தில் வைரத்தோடு அம்பேல் ஜுட்.
இருவரும் இத்தாலிக்குப் போகிறார்கள். தெருவோர ஹோட்டலில் நிம்மதியாக டீ சாப்பிடுகிறார்கள். மேசை மீது வைரம் உள்ள கைப்பை. சைக்கிளில் வேகமாக வரும் ஒருவன், பையை எடுத்துக் கொண்டு அப்படியே தப்பி விடுகிறான். மகள் போடும் சத்தத்தில் கூட்டம் கூடுகிறது. ‘ரொம்ப நஷ்டமா’ என்று கேட்கிறார் ஒருவர். பதில் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாமல், தியேட்டரில் எல்லோரும் எழுந்து நின்று விட்டார்கள்.
திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த பி. சி. ஸ்ரீராமோடு கொஞ்சம் பரிட்சயம் உண்டு. அவர் சிபாரிசு செய்த படம் black stallion. 19 ஆம் நூற்றாண்டுக் கதை. பந்தயக்குதிரையை ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல், கடலில் கவிழ்ந்து விடுகிறது. குதிரையும், ஒரு சிறுவனும் மட்டும் பயணித்து ஆள் இல்லாத தீவில் கரையேறுகிறார்கள்.
2 மணி நேரப்படத்தில் 1 1/2 மணி நேரம் தீவு, கடல்,அலை,காற்று குதிரை, சிறுவன் என கண்ணுக்கு இனிமையான கலவை. ஆடையில்லாத சிறுவன், சேணமில்லாத குதிரை மீது சுற்றி வந்து வாலிபன் ஆகிறான்.
பல வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பக்கமாக வரும் இன்னொரு கப்பலால் கண்டுபிடிக்கப்பட்டு வாலிபனும், குதிரையும் இங்கிலாந்துக்கு வருகை. குதிரையேற்றம் தவிர வேற எதுவும் தெரியாததால், அவனையும் குதிரையையும் பந்தயத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
தடுப்புகளுக்குள் ஓடிப் பழக்கம் இல்லாததால், குதிரை முரண்டு பிடிக்கிறது. வாலிபனுக்கு மானப்பிரச்சினை. தொப்பி முதல் உள்ளாடை வரை கழற்றி எறிந்து விட்டு, குதிரையை விரட்டுகிறான். குதிரை முன்னணியில் பாய்கிறது.
ஒமர் முக்தார் (Omar Mukthar ) என்று ஒரு படம். ஒமர் முக்தார் அரேபிய கட்டபொம்மன். ராணுவ டேங்குகளுக்கு எதிராக குதிரைகள், கடைசியில் அவருக்கு மரண தண்டனை. அதற்கு முன் கழுத்திலிருக்கும் சங்கிலியை கழற்றி, ஒரு சிறுவனுக்கு மாட்டி விடுகிறார் அவர்.
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். நாயகன் கமலஹாசனையும் அவரது பேரனையும் நினைவுபடுத்திக் கொள்ளவும்.
மாணவர்கள் சட்டை அணியும் விதத்தையே மாற்றியவர் புரூஸ்லி. அதற்கு முன் கவ்வி பிடிக்கும் சட்டைகளுக்குத் தான் மவுசு. புஜ பலம், புஷ்டி பலம் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, நம்நாடு போஸ்டரில் இரண்டுக் கைகளையும் தூக்கிக்கொண்டு இருப்பார் எம்.ஜி.ஆர். தொள தொள சட்டை போட்டுக்கொண்டு, வெற்றி வீரனாக இருக்கலாம் என்பதைக் காட்டியவர் புரூஸ்லி.
ஈராஸ் தியேட்டரில் Carpet Baggers படத்துக்குப் போயிருந்தேன். Herald Robbins எழுதிய புகழ்பெற்ற நவீனம் Carpet Baggers. இரண்டு முறை விளம்பரம், இரண்டு முறை அரசின் செய்திப்படம், இரண்டு முறை இருட்டு என்று காலத்தைக் கடத்தினார்கள். சந்தடியில்லாமல் இருந்த போது ‘ஆபிஸ்ல கூப்ட்ராங்க’ என்று தோளை தட்டி அழைத்துப் போனார் ஒருவர். அங்கே ‘தனி ஆளுக்கு படம் போட முடியாது’ என்று சொல்லி காசைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அந்த காலத்தில் அறம் இருந்தது.
Benhur ரோமானியர் காலத்து வரலாற்றுப் படம். கதையில் சில நிமிடங்கள் இயேசு வருவார். இயேசு வரும்போது தியேட்டரே மாறி விடும். இருக்கைகள் காலி செய்யப்பட்டு மண்டியிடல், மன்னிப்பு, தோத்திரம் என்று தியேட்டர் தேவாலயம் ஆகிவிட்டது. நான் ஞானஸ்நானத்திலிருந்து தப்பி டாய்லெட் பக்கம் போனேன்.
ஆங்கிலப் படங்களைப் பொறுத்த வரை, என் மதிப்பீட்டில் Gandhi க்குத் தான் முதல் இடம்’ he was not a general, but the generals followed his cartage’ என்ற வர்ணனையோடு பிரமாண்டமான துவக்கம். ‘காவ் (இந்தி-சாப்பிடு) என்று சொல்லி, காந்தியின் மீது சப்பாத்தியை வீசி எறியும் ஓம் புரி, கொலைகாரனை சாந்தமாக எதிர்நோக்கும் மகாத்மாவின் உண்ணா நோன்பை இதைவிட உண்மையாச் சித்தரிக்க முடியாது.
சென்ற நூற்றாண்டில் தமிழர்களைக் கவர்ந்த சினிமா, இன்றைய சூழலில் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சில காலங்களில் சினிமா தான் பிறவி பயன் என்று இருந்திருக்கிறேன் என்றாலும், மொத்த வாழ்க்கையில் அது ஒரு சிறு பகுதிதான்.
இந்தத் திரைப்படப் பின்னோட்டத்தை முறைப்படுத்தி பார்க்கும்போது, ஒரு திரைப்படம் தனியாக தெரிகிறது. “முத்துக்களோ கண்கள்” என்ற டூயட் வரும், நெஞ்சிருக்கும் வரை. எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்த கோயில், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒத்துக் கொண்ட ஒரே விஷயம், தில்லானா மோகனாம்பாள், ரஜினியின் தளபதி எல்லாம் இருந்தாலும், ஒரு திரைப்படம் தனியாகத் தெரிகிறது. அது விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும், பத்மினியும் (2014).
இந்தப் படம் எனக்கு எழுத்தாளர் சாவி எழுதிய ‘எல்லோரும் நல்லவரே’ என்ற கதையைப்போல ஒட்டியிருந்தது. வில்லன்கள் இல்லாத வரைவு அது. பண்ணையாரும், பத்மினியும் படத்தில் அதீதமாக இருப்பது ஒன்றுதான், அந்தப் பெண்ணின் பேராசை, மற்றவருடைய நற்பண்புகள் அதை சமன்படுத்துகின்றன. நீதி சொல்கிறது என்பதாலும், அது அழகியலோடு அமைந்திருக்கிறது.என்பதாலும், இந்தப் படம் தனியாக நிற்கிறது.
தொடரும்…

கட்டுரையாளர் : சுப்பு