பாரதத்தின் பாரம்பரிய ஆட்டம் கயிறுகளில் இருந்து நிழல்கள் வரை

சினிமா, தொலைக்காட்சி மற்றும் அனிமேஷன் ஆகியவை கதை சொல்லும் முறையை அமைப்பதற்கு முன்பே, பாரதம் தனக்கென ஒரு காட்சி அரங்கை கொண்டிருந்தது. அதில் மர உருவங்கள், தோல் உருவச் சிலைகள், கயிறுகள், கம்பிகள் மற்றும் பொம்மலாட்டக் கலைஞர்களின் திறமையான கைகள் மூலம் கதைகள் உயிர்பெற்றன. ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன், ராவணன் மற்றும் பிற கதாபாத்திரங்கள் பல்வேறு பிராந்திய பொம்மலாட்ட மரபுகளில் தோன்றின.
ஒவ்வொரு மாநிலமும், இந்த காவியத்திற்கு தனக்கே உரிய கலைத்துவத்தை அளிக்கிறது. ராமர் ஓர் இடத்தில் வண்ணமயமான மரபொம்மையாகவும், மற்றொரு இடத்தில் நிழல் உருவமாகவும், வேறொரு இடத்தில் தடியால் இயக்கப்படும் கதாபாத்திரமாகவும் தோன்றலாம். காட்சி மொழி மாறினாலும், மையக்கதை பரிச்சயமானதாகவே இருக்கிறது.
ராமரின் வனவாசம், சீதையின் கடத்தல், அனுமனின் இலங்கை பயணம், மற்றும் ராவணருக்கும், ராமருக்கும் இடையிலான போர் போன்ற நிகழ்வுகள், காட்சிவழி கதை சொல்லலுக்கு இயல்பாகவே பொருந்தின. பொம்மலாட்டத்தின் மூலம் பார்வையாளர்கள் காவியத்தை கேட்பதோடு மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களையும், நாடக நிகழ்வுகளையும், தங்கள் கண்முன்னே கொண்டு வருவதை காண முடிகிறது.
பாரதத்தின் மிகவும் பிரபலமான ராஜஸ்தானின் “கத்புத்லி பொம்மலாட்டம்”, ராஜஸ்தானி பொம்மைகள், வண்ணமயமான ஆடைகளை அணிந்த மரபு உருவங்கள் இவற்றில் புராணக் கதைகளும், மன்னர்கள், போர் வீரர்கள், நாயகர்கள் உள்ளூர் புராணங்கள் போன்ற கதைகளும் இடம்பெற்றன. ‘கத்’ என்றால் மரக்கட்டை என்றும், ‘புத்லி’ என்றால் பொம்மை என்றும் பொருள்.
ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் “தோலு பொம்மலாட்டா”, பாரதத்தின் முக்கியமான தோல்நிழல் பொம்மலாட்ட மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. தத்ரூபமான கதாபாத்திரங்களில் ஒளி மூலத்திற்கும், ஒளிபுகும் திரைக்கும் இடையில் பார்வையாளர்களுக்கு முன்பாக தோன்றி, சமய மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து பெருமளவில் உத்வேகம் பெற்றுள்ளது.
கர்நாடகாவின் “தொகலு கொம்பேயட்டா” தனக்கே உரிய தனித்துவமான தோல் நிழல் பொம்மலாட்ட மரபு. தோல் பதப்படுத்தப்பட்டு, வெட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சில சமயங்கள் சிக்கலான வடிவங்களை உருவாக்க துளையிடப்படுகிறது. அவற்றின் வழியே ஒளி பாயும்போது இந்த நுணுக்கங்கள், திரையில் தோன்றும் காட்சி கைவினைகலைஞர்கள் மற்றும் பொம்மலாட்டக் கலைஞர்களின் திறமைகளை ஒன்றிணைக்கின்றன.
ஒடிசாவின் “கண்டேய் நாச்சா”, மாநிலத்தின் பாரம்பரியமான கம்பிப் பொம்மலாட்ட மரபைப் பிரதிபலிக்கிறது. இந்த பொம்மைகள் கம்பிகளைக் கொண்டு புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சமூகக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை சித்தரிக்கின்றன. ஒடிசாவின் வளமான மத மற்றும் இலக்கிய மரபுகள் பொம்மலாட்டம் மூலம் கதை சொல்வதற்கு, இயற்கையான களத்தை வழங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தின் “புத்துல் நாச்” எனப்படும் பாரம்பரிய பொம்மலாட்ட நடனத்தை உள்ளடக்கிய ஒரு வளமான பொம்மலாட்டம், கம்பி மற்றும் தோல் அடிப்படை என தனக்கே உரிய கலைத்துவத்தை அளிக்கிறது. பாரம்பரிய நாட்டுப்புற பொம்மலாட்டத்தில், நெகிழ்வுத் தன்மையையும், பொழுதுபோக்கு, கதை சொல்லல் மற்றும் வர்ணனை ஆகியவற்றை இணைக்கும் திறன் கொண்டது.
தமிழ்நாட்டின் “பொம்மலாட்டம்”, கயிறுகள் மற்றும் கம்பிகளின் கலவையை பயன்படுத்தி, கலைஞர்களுக்கு அசைவுகள் மூலம் கட்டுப்பாட்டை அளிக்கிறது. உள்ளூர் மரபுகளுடன் தொடர்புடைய கதைகளும், பாரதத்தின் பாரம்பரிய நாடக வடிவங்கள், கைவினை, இசை, இயக்கம் மற்றும் புராணம் ஆகியவை ஒன்றிணைந்து, ஒரு முழுமையான கலாச்சார அனுபவத்தை உருவாக்குகிறது.
கேரளத்தின் “தோல்பாவைக்கூத்து”, பாரம்பரிய தோல் நிழல் பொம்மலாட்ட நிகழ்ச்சி. பாரம்பரிய காவிய விளக்குகளை பயன்படுத்தி, ஒரு திரையில் கலைஞர்கள் மூலம் கதை சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு பொம்மலாட்டம் மரபும் சிறப்பு வாய்ந்த கைவினைத் திறனை சார்ந்துள்ளது. மரம் செதுக்கப்பட வேண்டும், தோல் பதப்படுத்தப்பட்டு வெட்டப்பட வேண்டும், முகங்கள் வர்ணம் பூசப்பட வேண்டும், உடைகள் தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் கயிறுகள் இணைக்கப்பட வேண்டும், பொம்மலாட்டக் கலைஞரே மையமாக இருக்கிறார். ஒரு பொம்மையை இயக்குவது என்பது வெறும் கயிறுகளையும், கம்பிகளையும் அசைப்பதை விட, கலைஞர்கள் மரபுகளை அறிந்திருக்க வேண்டும். கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள வேண்டும். கதாபாத்திர கதையோட்டத்துடன் அசைவுகளை ஒருங்கிணைக்க வேண்டும், சில சமயங்கள் ஒரே காட்சியில் பல பொம்மைகளை இயக்க வேண்டும்.
பாரதத்தின் பொம்மலாட்ட பாரம்பரியம் என்பது மகத்தான பன்முகத் தன்மையின் கதை. பயன்படுத்தப்படும் பொருட்கள் மொழிகள் மற்றும் நுட்பங்கள், வேறுபடலாம். ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றாகவே இருக்கிறது. ஒரு கதை உயிர் பெறுவதற்காக, உயிரற்ற ஒரு உருவத்திற்கு மனித கை உயிர் கொடுக்கிறது.
கயிறுகள் பழமையானவையாக இருக்கலாம், தோல் தலைமுறைகளின் தடயங்களைத் தாங்கி இருக்கலாம். கதைகள் நூற்றாண்டுகள் பழமையானவையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு பொம்மலாட்டக் கலைஞர் திரைக்குப் பின்னால் சென்று ஒரு உருவத்தை உயர்த்தி ஒரு கதையை சொல்லத் தொடங்கும் போது பாரதத்தின் பண்டைய நாடகக்கலை மீண்டும் உயிர் பெறுகிறது.

– கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்