கடும் எதிர்ப்புக்கு இடையேயும் சங்க வேலை செய்து குடும்பத்தையே சங்க மயமாக்கிய காமராஜ் அவர்கள்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, காமராஜ் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ள அப்புவிளை கிராமத்தில், 1960 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அருணாச்சலம் – அன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், காமராஜ் அவர்கள். அவருடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை. தந்தை இலங்கையில் வியாபாரம் செய்து வந்தார். பின்னர் சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து, தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.
காமராஜ் அவர்கள் ஐந்தாவது வகுப்பு வரை அப்புவிளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்தார். பின்னர், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திசையன்விளை உலக ரட்சகர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அதனைத் தொடர்ந்து, தட்சிணமாற நாடார் கல்லூரியில் பி.யு.சி படிப்பை முடித்த பிறகு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical and Electronics Engineering) படிப்பில், பி.இ. பட்டம் பெற்றார்.
1987 ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணைப் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது தாலுகா அமைப்பாளராக இருந்த இராம இராஜசேகர் ஜியும், தூத்துக்குடி ஜில்லா அமைப்பாளராக இருந்த கேசவ விநாயகம் ஜியும், காமராஜ் அவர்களை சந்தித்து சங்கத்தை அறிமுகம் செய்தார்கள்.
டாக்டர் ஜி நூற்றாண்டு நடந்து கொண்டிருந்த சமயத்தில் மாநில அமைப்பாளராக இருந்த சண்முநாதன் ஜியை சந்தித்து உரையாடினார். அவர்கள் ஷாகாவிற்கு அழைத்தபோது, தமிழக அரசுப் பணியில் இருந்ததாலும், அதிகாலையில் வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததாலும் ஷாகாவிற்கு வர முடியாத சூழலைப் பற்றி எடுத்துரைத்தார். எனினும் அவ்வப்போது அதிகாரிகளிடம் கலந்துப்பேசி, சங்க வேலையைப் பற்றி அறிந்துக் கொள்வார்.
1989 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் சென்னையில் இரண்டு மாதம், அலுவலகம் ரீதியான பயிற்சி இருந்தது. அதில் கலந்துகொள்ள ரயிலில் சென்றார். அப்போது குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில், சங்க புத்தகம் விற்பனை கடையில் வாங்கிய “ஆர்.எஸ்.எஸ் ஆற்றும் அரும்பணிகள்” புத்தகத்தை, தன் கையோடு எடுத்துச் சென்றார். பயண நேரத்தில் அந்த புத்தகத்தை முழுக்க படித்தார். அதன் மூலம் சங்க வேலையைப் பற்றி புரிந்து கொண்டு, இனிமேல் எந்த சூழ்நிலையிலும், தினசரி ஷாகாவிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்து, சங்க வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என சபதம் எடுத்தார்.
சென்னைக்கு வந்த உடனே, அப்போது இருந்த டெலிபோன் டைரக்டரியின் மூலமாக, சேத்துப்பட்டில் உள்ள சங்கத் தலைமை அலுவலக எண்ணை கண்டுபிடித்து, தொடர்புக் கொண்டார். தான் தங்கியிருக்கும் இடம் அருகில், எங்கு ஷாகா நடைபெறுகிறது என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டு, அடுத்த நாளே சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே நடந்த ஷாகாவிற்கு சென்றார். தற்போதைய ஷேத்ர பொறுப்பாளரான பிரகாஷ் ஜியும், சென்னை மாநகர பொறுப்பில் இருக்கும் நாகராஜன் ஜியும் அந்த ஷாகாவில் இருந்தனர்.
பயிற்சி முடித்த பிறகு, ஊருக்கு திரும்பியவுடன், தனது வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் நடக்கும் ஷாகாவிற்கு, 40 பேருடன் தினமும் செல்ல தொடங்கினார். பஜனை பாடுவது, மாதந்தோறும் திருவிளக்கு பூஜை, கார்த்திகை தீபம் நேரத்தில் சொக்கப்பானை கொளுத்துவது என பல விதங்களில், ஹிந்து எழுச்சியை ஏற்படுத்தினார்.
ஒரே சமுதாய மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கிடந்தது. அதனை ஒன்றுபடுத்த, தனது கிராமத்தில் உள்ள 125 குடும்பங்களையும் நேரில் சென்று சந்தித்து, ஹிந்து சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி, அனைவரையும் ஒன்றுபடுத்தி திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்டார். குடும்பச்சூழல் காரணமாக 1992ல், அரசு வேலையை ராஜினாமா செய்து, சொந்த ஊரில் விவசாயப் பணியுடன், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.
1989 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 18ம் நாள் ரமாசங்கரி அம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. சங்க வேலை செய்வதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. மனைவி, பெற்றோர் என அனைவரும் எதிர்த்தபோதும், தொடர்ந்து சங்க வேலையை செய்து கொண்டு வந்தார்.
1992 ஆம் ஆண்டு, தெள்ளாரில் உள்ள சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்தார். அந்தப் பயிற்சிக்கு செல்லும் நாளன்று, தனது தம்பியின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், சங்கப் பயிற்சி முகாமுக்கு சென்றார். அதைப்போலவே 1994 ஆம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு சங்கப்பயிற்சியின் போது, தனது மனைவியின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றது. கல்யாணத்திற்கு கூட செல்லாமல், சங்கப்பயிற்சி முக்கியம் என கருதி, திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற சங்கப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.
தொடக்கத்தில் சங்க வேலை செய்ய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்த மனைவி, காலப்போக்கில் சங்க வேலையின் முக்கியத்துவத்தையும், சங்க அதிகாரிகளின் அணுகுமுறையும் கண்டு, மனம் மாறி சங்கத்தின் பெண்கள் அமைப்பான சமிதியில் சேர்ந்து, இரண்டாம் ஆண்டு சங்கப்பயிற்சி முகாமை முடித்து, தற்போது தென்தமிழக மக்கள் தொடர்பு (சம்பர்க ப்ரமுக்) பொறுப்பாளராக உள்ளார்.
அவர்களுக்கு கார்த்திக் அருணாச்சலம் என்ற மகனும், பிந்தியா அருண், பிரியசேனா அருண் என்ற இரண்டு மகளும் உள்ளனர். மகன் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், இரண்டு மகள்களும் இரண்டாம் ஆண்டு சமிதி முகாமும் முடித்துள்ளனர்.
சுனாமியின் போது மக்கள் நலப்பணியை செய்த காமராஜ் அவர்கள், தாலுகா முதல் மாநிலப் பொறுப்புகள் வரை பல பொறுப்புகள் வகித்த பின்னர், தற்போது கன்னியாகுமரி கோட்டத்தின் தலைவராக இருந்து சங்கப்பணி செய்து, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

அ.ஓம்பிரகாஷ்