காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 1930ல் கனடா நாட்டில் தொடங்கியது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் முடிந்ததும், நிறைவு விழாவில் பாரதத்தின் ஆமதாபாத் நகரில், 2030ல் அடுத்த போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே பாரதத்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகள் அந்த நிகழ்வின் நூற்றாண்டை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதியுடன் முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் பாரத வீராங்கனைகளும், வீரர்களும் புரிந்த சாதனைகளை தொகுத்தளிக்கிறது இந்த வார அட்டைப்படக் கட்டுரை.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் 74 நாடுகளை சேர்ந்த 3,000 வீரர் – வீராங்கணைகள் கலந்து கொண்டனர். பாரதம் சார்பில் 122 பேர் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் ஓட்டுமொத்தமாக 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்ற பாரத வீரர்கள், ஒட்டுமொத்தமாக நான்காவது இடத்தை பிடித்தனர்.
சென்ற முறை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில், பாரதத்தின் சார்பில் 210 பேர் பங்கேற்று, மொத்தம் 61 பதக்கங்களை வென்றிருந்தனர். ஏற்கனவே போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், 2023ம் ஆண்டு செலவுகளை காரணம் காட்டி, போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகியது.
இதன் காரணமாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் போட்டியை ஏற்று நடத்த முன் வந்தது. அதன் காரணமாக இந்த
முறை 19 விளையாட்டுகளில், 215 போட்டிகள் நடைபெற்றன. ஸ்காட்லாந்தில் இந்த போட்டி நடைபெறுவது நான்காவது முறையாகும்.
துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பாட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் இந்த முறை நீக்கப்பட்டன. இதன் காரணமாக பாரதத்தின் பதக்க எண்ணிக்கை குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பர்மிங்காமில் வென்ற 61 பதக்கங்களின் கணிசமான எண்ணிக்கை, இந்த நான்கு விளையாட்டுக்கள் மூலம் பெறப்பட்டவை ஆகும்.
காமன்வெல்த் விளையாட்டில், இம்முறை நமது நாட்டிற்கு அதிக பதக்கங்களை குவித்ததில் குத்துச்சண்டை விளையாட்டு ஆதிக்கம் செலுத்தியது. குத்துச்சண்டையில் தான் பாரதம் அதிகபட்சமாக 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கம் வென்று அசத்தியது. பளுத்துாக்குதல் விளையாட்டில் பங்கேற்ற மீராபாய் சானு மூன்றாவது முறையாக தங்கம் வென்று ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்று சாதனை படைத்தார். இம்முறை 10 விளையாட்டுகள் மட்டுமே இடம் பெற்ற நிலையில், பாரதிய வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தன.
காமன்வெல்த் விளையாட்டில், 11 பாரா வீரர்களில் (மாற்றுத் திறனாளிகள்) 6 பேர் பதக்கம் வென்றது, இம்முறை வெகு சிறப்பாக அமைந்தது. குண்டு எறிதல் போட்டிகளில், வலது கை பாதிக்கப்பட்ட திலிப் காவிட், வலது கால் செயல் இழந்த சோமன், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஷர்மிளா என 3 பேர் தங்கம் வென்றனர்.
சென்ற முறை 3 போட்டியில் மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்தன. இம்முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன. கடந்த 6 சீசனில் நடைபெற்ற ‘பாரா’ போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் தான் பாரதத்திற்கு கிடைத்தன.
குத்துச்சண்டையில் ஜாஸ்மின், சாக்சி, பிரீத்தி, சச்சின் உட்பட 7 பேர் தங்கம் வென்றனர். லவ்லினா உட்பட 3 பேர், வெள்ளி வென்றனர். மொத்தம் 10 பதக்கம் கிடைத்தது. காமன்வெல்த் குத்துச்சண்டை வரலாற்றில், 22 சீசனில் பாரதத்திற்கு 11 தங்கம் மட்டும் கிடைத்தன. இம்முறை ஒரே சீசனில் 7 தங்கத்தை கைப்பற்றியது பாரதம்.
பளுதுாக்குதலில் 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தது. எதிர்பார்த்தபடி மீராபாய் சானு, இந்த போட்டியில் மூன்றாவது முறையாக வென்றார்.
அஸ்மிதா படைத்த வரலாறு
யாரும் எதிர்பாராத வகையில் மகளிர் ஜூடோவில் அசத்திய அஸ்மிதா, காமன்வெல்த் வரலாற்றில் தங்கம் வென்ற முதல்
பாரதியர் என்ற வரலாற்றை படைத்தார். மொத்தம் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் ஜூடோ போட்டியில் கிடைத்தன. பாரா ‘பவர் லிப்டிங்கில்’ ஜண்டு குமார் வெண்கலம் வென்று ஆறுதல் தந்தார்.
தமிழகத்தின் பங்களிப்பு
தமிழக வீரர்கள் இம்முறை தடகளத்தில் 6, பளுத்துாக்குதலில் 1, பாரா தடகளத்தில் 1, பாரா பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். இதில் பளுத்துாக்குதலில் ராஜா, டிரிபிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கத்தையும், செல்வ பிரபு வெண்கலம் என 3 வீரர்கள் பதக்கம் வென்றனர்.
குத்துச்சண்டையின் தலைநகரம் பிவானி
ஹரியானா மாநிலத்தின் பிவானி, பாரத குத்துச்சண்டை விளையாட்டின் தாயகமாக திகழ்கிறது. தொடர்ந்து 11 ஆண்டுகள் தேசிய ‘ஹெவிவெயிட்’ சாம்பியனாக திகழ்ந்த கேப்டன் ஹவா சிங், தனது பணி ஓய்வுக்குப்பின் 1986ல், பிவானியில் ஒரு பயிற்சி மையத்தை நிறுவினார். உலக அரங்கில் கியூபாவுக்கு அடுத்து, பிவானியை ‘மினி கியூபா’ என அழைக்கின்றனர். பயிற்சியாளர் ஜகதீஷ் சிங், 2003ம் ஆண்டு பிவானி குத்துச்சண்டை கிளப்பை துவக்கினார்.
பாரதத்தின் முதல் ஒலிம்பிக் குத்துச்சண்டை பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் (2008), இவரிடம் பயிற்சி பெற்றவர் தான். இம்முறை பாரதம் வென்றுள்ள 7 தங்கப் பதக்கத்தில் சாக்சி, பிரீத்தி, பிரியா, ஜாஸ்மின், சச்சின் என 5 பேர், பிவானியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது
குல்வீர் – இரண்டு
அதிக பதக்கங்களை வெல்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கபட்ட தடகளப் போட்டிகளில், கடந்த முறை 37 பேர் பங்கேற்று, 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றனர். இம்முறை 32 பேர் களமிறங்கியும் வலுவான போட்டியாளர்களின் வரவு காரணமாக, குல்வீர் சிங் மட்டும் 10,000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி, 5000 மீட்டரில் வெண்கலம் என இரண்டு பதக்கம் வென்றார்.
டெகாத்லான் போட்டியில் காயத்துடன் விளையாடிய தேஜஸ்வின் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்ட பாரதத்தின் நீரஜ் சோப்ரா வெள்ளியை பெற்றது பெரிய ஏமாற்றம். தடகளத்தில் ஓட்டு மொத்தமாக 5 வெள்ளி, 5 வெண்கலம் மட்டும் கிடைத்தன.
போட்டியின் இறுதியில் பதக்கப்பட்டியலில் பாரதம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-ஆம் இடத்தை கைப்பற்றியது.
அடுத்த போட்டி பாரதத்தில்…
உலக அளவில் விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக காமன்வெல்த் போட்டி கருதப்படுகிறது. 2030ம் ஆண்டு நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளை நடத்த பாரதத்தின் ஆமதாபாத் (குஜராத் மாநிலம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான கொடியை மாநிலத்தின் துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்வி பெற்றுக்கொண்டார். நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக அனைத்து நாடுகளின் கொடியுடன் முதலில் சீனியர் வீரர்கள் அணி வகுத்தனர். அதன் பின்னர் பங்கேற்ற அனைவரும் ஒட்டு மொத்தமாக பேரணியாக பங்கேற்றனர்.