வாழ்க்கையில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் – ராமதீர்த்தர்

ஆன்மீக ஞானியான சுவாமி ராமதீர்த்தர் ஒரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஒரு நாள் வகுப்பில் கரும்பலகையில் ஒரு கோடு வரைந்தார். ஒரு மாணவனை அழைத்து, இந்த கரும்பலகையில் உள்ள கோட்டினை அழிக்காமலே சிறியதாக்கு பார்க்கலாம் என்றார். மாணவன் திகைத்தான். கோட்டை அழிக்காமல் எப்படி சிறிதாக்குவது? வகுப்பில் இருந்த மாணவர்களுக்கும் கூட விஷயம் விளங்கவில்லை.

ராமதீர்த்தர் கரும்பலகையில் அந்த கோட்டுக்கு அருகில் அதை விடப் பெரிய கோடு ஒன்றை வரைந்தார். பிறகு அவர் மாணவர்களிடம், இதில் எது சிறிய கோடு எது ? என்று கேட்டார்.
ராமதீர்த்தர் முன்பு வரைந்த கோடுதான் சிறியது என்றனர் மாணவர்கள். பிறகு இரண்டாவதாக வரைந்த கோட்டை அழித்துவிட்டு, முன்புதான் வரைந்த கோட்டுக்கு அடியில் சிறிய கோடு ஒன்றை வரைந்தார். இப்போது இதில் எந்த கோடு பெரியது என மாணவர்களைக் கேட்டார். முதலில் வரைந்தது என்றனர் மாணவர்கள்.

பின்னர், அந்தக் கோடுகளை கொண்டு ஒரு தத்துவத்தை எடுத்துரைத்தார் ராமதீர்த்தர்.

மாணவர்களே, நாம் மற்றவர்களைவிட உயர வேண்டும் என்றால், மற்றவர்கள் வாழ்வை அழித்து அந்த நிலையை அடையக்கூடாது நாமாக முயன்றுதான் வளர வேண்டும்.

நாம் மற்றவர்களை விட தாழ்ந்து விட்டால், அதற்கு மற்றவர்கள் காரணம் அல்ல.

அதற்கு நாம்தான் காரணம். இதைத்தான் கரும்பலகையில் போட்டுக் காண்பித்த கோடுகள் உணர்த்துகின்றன என்றார்.

ராம தீர்த்தரின் பிறந்த தினம் இன்று.