வாய் கொழுப்பும் வரம்பு காட்டியக்கனும்

‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்று புதைத்தோம்’ என்று சீமான் பேசியுள்ளார். ‘பிரிவினை வாதம் பேசி, வன்முறையைத் தூண்டுவோம், நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற தைரியமா? குண்டு வெடித்து ராஜீவ் கொலையானபோது பக்கத்தில் இருந்த அப்பாவிகள் 14 பேர் கொல்லப்பட்டார்களே அவர்களின் குடும்பங்கள் நிர்க்தியானதற்கு யார் காரணம்?
இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் கொல்லப்பட்டார். அவரது மனைவி பாலசரஸ்வதி, ”என் இரண்டு பிள்ளைகள் தந்தையின் உடலைக் கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு என் கணவரின் உடலை பொட்டலமாக கொடுத்தனர்” என்று தெரிவித்தார். கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழகக் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சீமான் கருத்துக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குவது வழக்கம். சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விட்டு வழக்குப் போடுகிறார்கள். ஆனால் தங்கள் கட்சித் தலைவனைக் கொன்ற குற்றவாளிகளுக்கு பரிந்து பேசும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள அவமானச் செயலை என்னவென்பது?
சந்தடி சாக்கில் கோட்சே பற்றி பேச்செடுக்கிறார்கள் சிலர். ‘நான்தான் கொன்றேன்’ என்று சொல்லி அன்றே தூக்குமேடை ஏறி விட்டான் கோட்சே. எந்த தலைவரும் கோட்சேயின் செயலை நியாயப்படுத்திப் பேசவுமில்லை, அதை மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழகத்திலுள்ள தொலைக்காட்சிகள் விவாதங்களில் சீமான், திருமாவளவன் கட்சியினரை அழைத்து அவர்களை மீண்டும் தங்கள் அக்கிரம வாதத்தை நியாயப்படுத்த வாய்ப்புக் கொடுத்து வருவது ஊடக தர்மம் அல்ல.
ராஜீவ் கொலை வழக்கு நடக்கும்போதே சோனியாவின் மகள் பிரியங்கா சிறைக்குச் சென்று கொலையாளி நளினியை சந்தித்த அபத்தம் நடந்தது. வழக்கு திசையறியாமல் தடுமாறியது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகும் ‘அவர்கள் அப்பாவிகள், எத்தனை ஆண்டுகள் தான் சிறையில் வாடுவார்கள்? என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் சிலர். மத்திய அரசு கொஞ்சம், கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் சீமான் போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.