வருகிறது இயற்கை நிறமி: அழகுக்காக வண்ணம்; ஆரோக்கியம் பற்றிய எண்ணம்?

உணவு வகைகளில் குறிப்பிட்ட சில வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தலாம். இதற்காக சில உள்ளீடுகளையே உபயோகிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் விதி மீறல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அதிக பளபளப்புக் கொண்ட செயற்கை ரசாயனங்கள் ஆபத்தானவை. எனினும் இதன் ஈர்ப்பில் நுகர்வோர் பலர் மயங்கிவிடுகிறார்கள்.

உணவில் செயற்கை நிறமிகள் அபாயகரமான விளைவை ஏற்படுத்துவதைப் போல உடையிலும் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் உணவில் இந்த விளைவுகள் பளிச்சென புலனாகும். உடையில் இந்த விளைவுகள் பளிச்சென புலனாகாது. ஆனால் வெளிப்படையாக, உடனடியாக தீய விளைவுகளை உணர்ந்துகொள்ள முடியாததாலேயே செயற்கை நிறமிகளின் பயன்பாடு நீடிக்கவேண்டும் என்று வாதிடுவதை ஏற்க முடியாது.

கதர் துறையைப் பொறுத்தவரை இயற்கை நிறமிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. இத்துறையில் வெண்மை நிறத்துக்கே பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது இதர நிறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எனினும் கூட இந்த இயற்கை நிறமிகள் பளபளப்பாக இல்லையே என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகிறார்கள். மென்மையாக உள்ளவை யாவும் அதீத பளபளப்புடன் காட்சி அளிப்பதில்லை. மென்மையற்றவைதான் அதீத பளபளப்புடன் காட்சி அளிக்கின்றன. உணவிலும் உடையிலும் மென்மையான இயற்கை நிறமியை பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கும் ஆனந்தத்துக்கும் உகந்தது.

செயற்கை நிறமிகளின் எண்ணிக்கை அளவுக்கு இயற்கை நிறமிகளின் எண்ணிக்கை இல்லை என்பது ஒரு குறைபாடாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் இதை இயற்கை ஆதரவாளர்கள் பெரிய குறைபாடாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இளந்தலைமுறையினரிடையே இக்குறைபாடு ஓர் உள்ளது. இவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் கேரள வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் அமைந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட இயற்கை நிறமிகள் சார்ந்த தாவரங்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த தாவரங்களின் பயன்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட கேரள வேளாண் பல்கலைக் கழகம் உத்தேசித்துள்ளது.

இயற்கை நிறமிகளின் உற்பத்தியும், உபயோகமும் அதிகரிக்கும்போது விலை குறைய வாய்ப்புள்ளது. இப்போது இயற்கை நிறமி கொண்ட உடையின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் இது குறைய வாய்ப்புள்ளது. இதற்கு கேரள வேளாண் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி வழிவகை செய்துள்ளது.

 

*****************

ஆயுர்வேத ஆடை

சில ஆண்டுகளுக்கு முன் ‘ஆயுர்வேத ஜவுளி’ என்ற புதிய ரகம் சந்தைக்கு வந்தபோது அமோக வரவேற்புப் பெற்றது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தை அதற்கு கதவைத் திறந்து வைத்ததுண்டு. மூலிகைச் சாற்றில் ஊறிய நூலால் நெசவு செய்த ஜவுளிதான் அது.

*****************