வரலாற்றங்கரையான் யார் இவர்?

ஒரு சென்னைக் குடும்பம். ஹிந்துக் குடும்பம். கணவன், மனைவி இருவரும் ஹிந்து ஒற்றுமைப் பணியில் முனைப்புடன் செயல்படுபவர்கள். மகன், மகள் கல்லூரியில் படிப்பவர்கள். அந்தக் குடும்பத்தில் எல்லோருமாக (இணையதளத்தில் கிடைத்த அற்புத தகவலை வைத்து) இந்த குடியரசு தினத்தன்று, பள்ளிப் பிள்ளைகள் ‘பொக்கிஷ வேட்டை’ விளையாட்டில் தேடி துருவி கண்டுபிடிப்பது போல தெருத்தெருவாக சுற்றியலைந்து பொக்கிஷம் கண்டுபிடித்தார்கள். அந்த அரிய பொக்கிஷம்தான் –

திருமதி சரஸ்வதி ராஜாமணி, வயது 92. நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) தீவிர பங்காற்றியவர். சென்னை ராயப்பேட்டை பகுதியில் சின்னஞ்சிறு குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்.

அவர் ராயப்பேட்டையில் வசிப்பதாக மட்டுமே இணையதளத் தகவல் கூறியது. குடியரசு தின நன்னாளை ஒரு தேசபக்தருடன், சுதந்திரப் போராட்ட வீராங்கனையுடன் செலவிடலாம் என்ற நல்ல யோசனையை அந்தக் குடும்பம் அன்றைய தினம் செயல்படுத்தியது. ஒரு குடும்பம் குடியரசு போன்ற தேசிய விடுமுறையை பயனுள்ள விதத்தில் செலவிட முடிவெடுத்தால் எவ்வளவு நன்மை பாருங்கள் ‘விஜயபாரதம்’ வாசகர்களுக்கு, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒரு வீராங்கனையை இதோ அறிமுகம் செய்ய முடிகிறேதே! (அந்தக் குடும்பம் விஜயபாரதம் வாசகர் குடும்பம் என்பது கூடுதல் தகவல்).

அந்தக் குடும்பத்தாருடன் ராயப்பேட்டை வீதிகளில் வலம் வருவோம், வாருங்கள்!

 

இதுவரை இந்தப் பேட்டையில் பலரையும் கேட்டதில் அப்படி ஒரு அம்மையார் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அப்போதுதான் அந்த காய்கறி வண்டிக்காரரைப் பார்த்தோம். கேட்டோம். ‘நீங்க சொல்றாப்ல ஒரு அம்மா, ரொம்ப வயசானவங்க. அதோ அந்த பிளாட்ல இருக்காங்க…’ என்று எங்கள் காதில் தேனை வார்த்தார்” என்று கூறினார் அந்த குடும்பத்தின் புதல்வியான கல்லூரி மாணவி.

அவர் தொடர்கிறார்: தட்டினோம். சிறுவயதில் வலுவான உடற்கட்டு இருந்திருக்கும் என்று யூகிக்கக்கூடிய தோற்றத்துடன் சற்றே தாங்கலான நடை நடந்து வந்து கதவைத் திறந்தார் சரஸ்வதி. நாங்கள் தேடிப்போன பொக்கிஷம் அவர்தான் என்பதற்கு அத்தாட்சி, சுவர்களை வியாபித்த நேதாஜி சித்திரங்கள். தையல் மிஷினும் பாதி தைத்த துணிமணிகளும் இறைந்து கிடக்க, இடம் பார்த்து அமர்ந்தோம். (தையல் சங்கதி பிறகு சொல்கிறேன்).

எங்கள் எதிரே சாமானிய சென்னை மூதாட்டியின் தோற்றத்தில் அமர்ந்திருப்பவர் வாழ்க்கை அசாதாரணமானது என்பதை எங்கள் உள்ளுணர்வு அடித்துச் சொல்லியது. சரஸ்வதி ராஜாமணி தனது வாழ்க்கையை, (பாரத சுதந்திர வேள்வியில் ஆகுதியான தனது ஜீவனை என்பது சரியாக இருக்கும்) துடிப்பாக, துல்லியமாக இதோ இப்படி விவரித்தார்:

‘நான் 1927ல் பர்மாவில் பிறந்தவள். எங்கள் குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில் குதித்த குடும்பம். அப்பா திருச்சியிலிருந்து பர்மாவுக்குப் போய் அங்கே சுரங்கத் தொழில் நடத்தி வந்தார். வசதிக்குக் குறைவில்லை. பிரிட்டிஷ்காரனிடம் பிடிபடாமல் தப்ப பர்மாவிலேயே தங்கிவிட்டார்.

‘சிறுவயதில் சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் இந்திய தேசிய ராணுவம் பற்றியும் நிறைய கேள்விப்பட்டேன். ரங்கூனுக்கு சுபாஷ் பாபு எனக்கு 16 வயது. இரண்டாம் உலக மகாயுத்தம் உலகத்தை உலுக்கிக் கொண்டிருந்தது. காந்திஜியும் இந்திய தேசிய காங்கிரசும் சொல்வது போல அல்லாமல், நேதாஜி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டுத் துரத்த ஆயுதம் ஏந்துமாறு பிரகடனம் செய்து வந்தார்.

‘அவரது கர்ஜனை என்னை அப்படியே ஆட்கொண்டு விட்டது. என் நகைகளை எல்லாம் கழற்றி இந்திய தேசிய ராணுவத்திற்கு காணிக்கையாக அளித்தேன். இந்த விலையுயர்ந்த காணிக்கை நேதாஜியின் கவனத்திற்கு வந்தது. மறுநாளே அவர் என் வீடு தேடி வந்து அப்பாவிடம் நகைகளை ஒப்படைத்தார். சின்னஞ்சிறு பெண். விஷயம் தெரியாமல் செய்து விட்டாள்… என்றார். அப்பா மௌனமாக புன்னகைத்ததோடு சரி (ஐ.என்.ஏக்கு அவர் பல ஆண்டுகளாக நிறைய நிதியுதவி செய்தவர்தான்).

‘எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. உரத்த குரலில், நகை என்னுடையது. அதை நான் கொடுத்தது கொடுத்ததுதான் என்று அதட்டினேன். அதை திரும்பப் பெற்றுக் கொள்வதைத் தவிர நேதாஜிக்கு வேறு வழியிருக்கவில்லை. அங்கேயே அப்போதே நான் ஐ.என்.ஏயில் சேர்ந்தே ஆகணும் என்று அடம் பிடித்தேன். மறுநாள் நேதாஜி என்னையும் என் தோழிகள் நாலு பேரையும் இந்திய தேசிய ராணுவத்தின் உளவாளிகளாக நியமித்தார்.

‘நாங்கள் ஐந்து பேரும் சிறுவர்கள் போல மாறுவேடம் போட்டு பிரிட்டிஷ் ராணுவப் பாசறைகள், ராணுவ அதிகாரிகள் வீடு இங்கெல்லாம் எடுபிடிகளாக வேலை செய்தோம். அப்போது என் பெயர் மணி! போர்முனையின் பிரிட்டிஷ் ராணுவ நடமாட்டம் பற்றி தகவல் சேகரித்து ஐ.என்.ஏ தலைமையகத்திற்குத் தெரிவித்து வந்தோம். இதுபோல இரண்டு வருட காலம் செயல்பட்டோம்.

‘பிரிட்டிஷ் ராணுவத்திடம் பிடிபடக்கூடது என்று எங்களுக்கு ஆனால் எங்களில் ஒருத்தி பிடிபட்டாள். பிடிபடும் உளவாளியின் கதி என்ன ஆகும் என்று எனக்குத் தெரியும். நாட்டியக்காரி வேடம் அணிந்து போய் ஆடிப்பாடி பிரிட்டிஷ் ராணுவ சிறை அதிகாரிகள் கண்ணில் மண் தூவி என் தோழியை தப்பச் செய்தேன். தப்பியோடும் போது பிரிட்டிஷ் ராணுவம் சுட்டதில் என் வலது காலில் இரண்டு குண்டு பாய்ந்தது. எல்லோரும் ஒரு மரத்தில் ஏறி மூன்று நாட்கள் அங்கேயே பதுங்கி, தப்பினோம்.

‘காலில் பாய்ந்த தோட்டா காலை நிரந்தரமாக ஊனமாக்கியது. ஆனால் என் துணிகரமான சாகஸம் பற்றி நேதாஜிக்கு ஒரே சந்தோஷம். ஐ.என்.ஏயின் ராணி ஜான்ஸி பிரிகேடில், லெப்டினன்ட் பதவி அளித்து, பதக்கம் வழங்கி ஜப்பானின் சக்ரவர்த்தி என்னை கௌரவித்த நாள் என்னால் மறக்க முடியாத நாள்.

‘பின்னாளில் போரில் பிரிட்டிஷார் ஐ.என்.ஏ கலைக்கப்பட்டது. நேதாஜி அறிவுரைப்படி நானும் மற்ற ஐ.என்.ஏ படையினரும் பாரதம் வந்தோம்…’

சரஸ்வதி அம்மையார் மேலும் தொடர்வதற்குள், அவர் தைத்து வைத்த உடைகளை எடுத்துக் கொண்டுபோக அனாதை விடுதி ஊழியர் ஒருவர் வந்துவிட்டார். ஆம். இந்த தள்ளாமையிலும் ஆதரவற்ற மற்றவர்களுக்காக உடைகள் தைத்து அனுப்புவதை சரஸ்வதி அம்மையார் முழுநேரப்பணியாக செய்து வருகிறார். உடைக்குத் தேவையான துணி? தையல் கடைகளில் விழும் துண்டுத் துணிகள் தான்!”

அந்தக் குடும்பத்தின் கல்லூரி மாணவி அன்றைய அனுபவத்தை இப்படி பதிவு செய்கிறார் என்றால், சரஸ்வதி ராஜாமணியை சந்தித்த அனுபவம் பற்றி மிகுந்த அவளது தாய் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்: குரு கோவிந்த சிங் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இரண்டு புதல்வர்களை முகலாயர்களுடனான போரில் பறிகொடுத்தார். மேலும் இரண்டு புதல்வர்கள் (மதம் மாற மறுத்தவர்கள்) சுல்தானின் ஆட்களால் உயிரோடு சுவரெழுப்பி கொல்லப்பட்டார்கள். இத்தனைக்கும் பிறகு சமுதாயத்தில் நற்பண்புகள் தழைக்க ராமாயண சொற்பொழிவு செய்து, மனதில் கசப்பே இல்லாமல் வாழ்ந்து முடித்தார். சரஸ்வதி அம்மையார் வாழ்ந்த விதம், வாழும் விதம் இவற்றைப் பார்க்கும்போது குரு கோவிந்தரின் நினைவுதான் வருகிறது. நாட்டுக்காகப் போராடிய அம்மையார் சமுதாயத்திற்காக சேவை செய்கிறார். ஊனமோ முதுமையோ அவர் ஊக்கத்தை பாதிக்கவே இல்லை!”

அந்த சங்க குடும்பத் தலைவரோ குடியரசு தினத்தை இப்படி அர்த்தமுள்ள விதத்தில் செலவிட வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகனுக்கு நன்றி கூறுகிறார். கல்லூரி மாணவனான அவர் மகன்தான் சரஸ்வதி ராஜாமணி பற்றி இணையதளத்திலிருந்து தகவல் திரட்டியவன்.

 

* அந்த வீராங்கனையின் முகவரி: 3/5, பீட்டர்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 014.

* சரஸ்வதி ராஜாமணி யார் என்ன நன்கொடை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அனாதை இல்லத்துக்கு உடை அனுப்ப துண்டுத் துணி கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்.

* சரஸ்வதி ராஜாமணி அவர்களை பிப்ரவரி 11 அன்று ‘இந்தியா பவுண்டேஷன்’ என்ற அமைப்பு தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா கருத்தரங்கில் கௌரவித்து பெருமை கொண்டது.