வடகிழக்கில் காவி ஒளிவட்டம் திரிபுராவில் சிவப்பு தரைமட்டம்!

ந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக, இது ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது” என்று நினைவுபடுத்தும் நிலைக்கு தள்ளப்பட இருக்கிறது. நான் கம்யூனிச சித்தாந்தத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இப்படி  கூறவில்லை.

உலக சரித்திரத்தை விட்டுவிடுங்கள். அதில் கோர்பசேவுக்குப் பிறகு கம்யூனிசம் காணாமல் போனது. சீனாவை கம்யூனிஸ்ட் கணக்கில் சேர்க்க முடியாது. அது இன்று ஒரு சிவப்பு முதலாளிகள் நாடு. வடகொரியா, கம்யூனிஸப் பெயரில் ஒரு சர்வாதிகார நாடு. அதை அழிக்க டோனால்ட் டிரம்ப் என்ற எமன் பிறந்துவிட்டான்.

இந்தியாவில் 1969 முதல் 2004 வரை கிட்டத்தட்ட 35 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் சராசரியாக 45 கம்யூனிஸ்டு எம்.பிக்கள் இருந்து வந்தார்கள். 2009ல் 27 ஆகி 2014ல் 10 ஆக சுருங்கிப் போனார்கள்.

32 ஆண்டுகாலம் ஆண்ட மேற்கு வங்கத்தை பறிகொடுத்தார்கள். அங்கே நேற்று நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தார்கள். (பாஜக இரண்டாவது இடம்).

இப்போது ஓடிக் கொண்டிருப்பது கேரளா. பினராயி விஜயன் என்கிற – தன் தலையில் தானே கை வைத்து மரணிக்கும் – அசுரனை முதல்வராக்கி இருக்கிறார்கள். அது 2021ல் முடிவுக்கு வரும். வடகிழக்கு மாநிலங்களில், திரிபுராவில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஊழல் மாணிக் சர்க்காரின் ஆட்சி 2018ல் முடிவுக்கு வர, அதன் நாடி அடங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்! நான் ஆரூடம் சொல்லவில்லை. ஊழல் திலகங்களான உத்தம திலக வேடதாரிகள், இடதுசாரிகளின் முகத்திரையை சென்றமாதம் 29ம் தேதி(ஏப்ரல் 29,2017) உச்ச நீதிமன்றம் கிழித்தெறிந்து அவர்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

அப்படி என்ன ஊழல் செய்துவிட்டார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. கம்யூனிஸ்டுகளின் ஊழல் பெரும்பாலும் காசு பணத்தில் இருக்காது. அவர்கள் பொருளாகத்தான் ஊழல் புரிவார்கள். பொருள் முதல்வாதிகளல்லவா?

கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், உறுப்பினர்கள், தொழிற்  சங்கத்தை என 10,323 பேருக்கு ஆசிரியர் பதவி அளித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இது என்னங்க பெரிய ஊழல். எல்லா கட்சியும் செய்வது தானே என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது. மத்திய அரசின் NCERT, வழிகாட்டு குறிப்புகள் படியும் மாநில அரசின் ஆசிரியர் தேர்வு பரீட்சைகள் மூலமும் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாறாக நான் மேலே குறிப்பிட்டது போல தன் கட்சிக்காரர்களுக்கு அரசு பதவி கொடுக்க, புனிதமான ஆசிரியர் பதவிகளை, 2010ம் ஆண்டு முதுகலை ஆசிரியராக 1,100 பேரும் இளைநிலை ஆசிரியராக 4,617 பேரும் 2014ல் 4,606 பேரும் நியமிக்கப்பட்டதை திரிபுரா உயர் நீதிமன்றம் செல்லாது என 2014 மே 7 அன்று தீர்ப்பளித்தது. இதை மார்ச் 2017ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நான் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் விதமாக, மாநில கல்வி மந்திரி, தபன் சக்கரவர்த்தி இத்தீர்ப்பை எதிர்த்து சொன்ன பதிலைப் பாருங்கள்:

நாங்கள் சில பேருக்கு தேவை, மற்றும் குடும்ப பொருளாதார சிக்கலை சரிசெய்யவே வேலை கொடுத்தோம். இது தவறா?”

அப்படி என்றால், கட்சிக்காரர்களுக்கு பதவி கொடுங்கள். ஆனால் அது தகுதி அடிப்படையில் அல்லவா இருக்க வேண்டும்? அதை ஏன் புறந்தள்ளினீர்கள் என்ற கேள்விக்கு கடந்த 35 ஆண்டுகாலமாக இப்படித்தான் திரிபுராவில் அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்களாம்”!

இப்படி செய்யும் சொக்கத் தங்கம் மாணிக் சர்க்காரின் ஆட்சியில்தான் ஒரு பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தான் அரசு காண்ட்ராக்டில் கொள்ளை அடித்த பணத்தை, தன் தலை மீது ஸ்வர்ணாபிஷேகம் செய்துகொண்ட செய்தி படமாக வந்து, அவரை கட்சி பதவிநீக்கம் செய்தது.

ஊழலுக்கு துணை போவதை, குற்றம் சாட்டினாலேயே கம்யூனிஸ்ட்கள் அதை ஏற்க மாட்டார்கள். குற்றம் சாட்டியவரை  ஓரம்கட்டி கட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள். 1995ல் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு மீது ஊழல் குற்றம் சாட்டிய அப்போதைய திரிபுரா முதல்வர் நிருபன் சக்ரவர்த்தி  கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட திரிபுராவில் இடதுசாரிகள் தங்களது கடைசி ஆண்டு ஆட்சியை அனுபவித்து வருகிறார்கள். ஆம். வடகிழக்கு மாநிலங்களில் வீசும் காவி சூறாவளி திரிபுராவின் மீது படர்ந்து வருகிறது.

கட்சிக்காரர்களுக்கே சலுகை, அரசு நிர்வாகத்தில் சீர்கேடு, கடந்த 7 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்ந்துள்ளது என வலுக்கிறது முற்றுகை. மாணிக் சர்க்கார் அண் கோவை சர்க்காரிலிருந்து அகற்றப் போவதை நினைத்து, கம்யூனிஸ்டுகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில்

காவி ஒளிவட்டம்

அஸ்ஸாம் 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பக்கம் சாய்ந்தது. அதுவே 2016 சட்டமன்ற தேர்தலில் மாநில ஆட்சியையும் பாஜகவிடம் ஒப்படைத்தது. 2017 சட்டமன்ற தேர்தலில் 15 ஆண்டுகால காங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக பொறுப்பேற்றது.

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் உட்கட்சி பூசலால் கட்சியே கலைக்கப்பட்டு பாஜகவுடன் இணைந்தது. ஆக அருணாச்சலும் பாஜகவின் ஆளுகைக்குள் வந்தது. எட்டு மாநிலங்களைக் கொண்ட வடகிழக்கில் பாஜக சாதுர்யமாக வடகிழக்கு மாநில ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் உள்ளூர் கட்சிகளை தன் அணியில் சேர்த்து வருகிறது.

மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்யமான காய் நகர்த்தலால், அங்கே கலவரம் செய்து கொண்டிருந்த NSCN என்ற கும்பலுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டு அவர்களை தேசிய நீரோட்டத்துக்குள் இழுத்தது. அதன் பயனாக 6 மாதமாக இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை அடைத்து வைத்து மக்களை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கிய நிகழ்வு முடிவுக்கு வந்தது. பாஜக பெரும் வெற்றி பெற்றது. 2012ல் வெறும் 2.1% ஓட்டு வாங்கிய பாஜக 2017ல் 36.3% ஓட்டு பெற்றது மோடியின் சாணக்கியத்துக்கு சான்று.

நாகாலாந்திலும் சிக்கிமிலும் பாஜக தலைமையிலான வடகிழக்கு மாநில ஜனநாயக கூட்டணிதான் ஏற்கனவே ஆட்சியில் உள்ளது. ஆக 5 மாநிலங்களை பிடித்துவிட்ட பாஜகவிற்கு பாக்கி இன்னும் 3 மாநிலங்கள்தான். அவை மேகாலயா, மிசோராம், திரிபுரா. இதற்கான தேர்தல் 2018ல் வருகிறது.

பெட்டி படுக்கை, மூட்டை முடிச்சோடு, உத்தரப் பிரதேசத்தில் வெற்றியை அள்ளித்தந்த டீம், இம்ம்மாநிலங்களுக்கு சென்று விட்டது. அதிரடி ஆரம்பமாகிவிட்டது.

தலையும் தலைமையும் இல்லாத காங்கிரஸ் மேலும் 2 மாநிலங்களை இழக்கப் போகிறது. கம்யூனிஸ்டுகளின் கடைசி மாநிலம் கரைந்து கொண்டிருக்கிறது.

வடகிழக்கு மாநில ‘7 சகோதரிகள்’ (Seven sisters) தன்னுடைய அருமைச் சகோதரன் நரேந்திர மோடியின் அன்பால், ஆளுகையால் இன்முகத்தால் கவரப்பட்டு, பாஜகவை ஆலிங்கனம் செய்ய காத்திருக்கிறார்கள். அதைக்காண நாமும் பொறுப்போம் 2018 வரை.