“பெரிதும் சிறிதுமாக உலகம் முழுவதும் நடந்து வரும் போர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இயற்கை சீற்றங்கள். பலவீனமடைகிற சமுதாய / குடும்ப பிணைப்பு. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கலாச்சாரம், நம்பிக்கை, பாரம்பரியம் என அனைத்து பிணைப்புகளையும் அழிப்பதுதான் தீர்வு என வக்கிரமான, மக்கள் விரோத சக்திகள் உலகை மிரட்டுகின்றன. உலகமோ பாரதிய தத்துவ அடிப்படையிலான தீர்வை நாடுது. இந்த சூழலில் அதனை வழங்குவது நம் பொறுப்பு”. நாகபுரி விஜயதசமி பேருரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்.
நன்னாளான விஜயதசமி அன்று நாம் கூடியிருக்கிறோம். இன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவக்கப்பட்டு நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தற்செயலாக, இந்த ஆண்டு ஸ்ரீ குரு தேக்பகதூர்ஜி மகாராஜின் தியாகத்தின் 350வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. அந்நிய மதத்தின் படையெடுப்பாளர்களின் அட்டூழியங்களிலிருந்து ஹிந்து சமுதாயத்தை பாதுகாக்க கேடயமாக மாறி, தன்னைத் தியாகம் செய்தார் அவர். ஆங்கில நாட்காட்டியின்படி, இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். நமது சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் முக்கியமானவர் மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு, ஸ்வ (சுயசிந்தனை) அடிப்படையிலான பாரதத்தை கற்பனை செய்தவர்களில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இன்று முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிஜியின் பிறந்த நாள். எளிமை, பணிவு, நேர்மை, உறுதி ஆகிய பண்புகளின் உருவகமாக விளங்கி, தேசத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்தவர் அவர்.
இவர்கள் பக்தி, அர்ப்பணிப்பு தேச சேவை இவற்றின் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாக விளங்கியவர்கள். மனிதன் உண்மையிலேயே மனிதனாக வாழ்வது எப்படி என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு கற்பிக்கிறது. பாரத நாட்டு மக்கள் அதேபோல தேசிய ஒழுக்கமும், தனிநபர் ஒழுக்கமும் வாய்ந்தவர்களாக விளங்குவது, எவ்வளவு முக்கியம் என்பதை தற்போதைய தேசிய சூழ்நிலையும் சரி, உலகளாவிய சூழ்நிலையும் சரி, வலியுறுத்துகின்றன. கடந்த ஒரு வருடம் முழுவதும் சுதந்திர தேசமாக நாம் தேர்வு செய்த பாதை குறித்து மதிப்பாய்வு செய்யும் போது இது தெரிய வருகிறது.
தற்போதைய சூழ்நிலை:
நம்பிக்கை, சவால்கள்
கடந்த ஓராண்டுக் காலகட்டத்தில் நமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் வலுப்பட்டன; மறுபுறம், பழைய, புதிய சவால்கள் பற்றி நமக்கு தெளிவும் ஏற்பட்டது. நமது எதிர்கால கடமைகளையும் வரையறுத்தது.
ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா, பாரதம் முழுவதிலுமிருந்து வந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் கடந்த கால சாதனைகளை முறியடித்து, புதிய உலக சாதனையைப் படைத்தது. ஏற்பாடுகளை பொறுத்தவரை அனைத்து அளவுகோல்களையும் தாண்டி, சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இது பாரதம் முழுவதும் நம்பிக்கையையும், ஒற்றுமையின் வலிமையையும் பறைசாற்றியது.
ஏப்ரல் 22 அன்று, எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை, அவர்கள் `ஹிந்துவா’ என்று கேட்டு கொன்றார்கள். இந்தத் தாக்குதலால் பாரதம் முழுவதும் துக்கம், சோகம் சூழ்ந்தது; கோப அலை எழுந்தது. மே மாதத்தில் நமது அரசு இந்தத் தாக்குதலுக்குப் தகுந்த பதிலடியை வழங்கியது. இந்தக் காலகட்டம் முழுவதும், நாட்டின் தலைமை காட்டிய உறுதிப்பாடு, நமது படைகளின் வீரம், போர் தயார்நிலை, என்பதோடு கூட நமது சமுதாயத்தின் திடசித்தமும் ஒற்றுமையும் நன்கு விளங்கின. இருப்பினும், அனைவருடனும் நட்பு எனும் கொள்கையை பேணும் அதே வேளையில், நாம் அதீத விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், நமது பாதுகாப்புத் திறன்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக உணர்ந்தோம்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, உலகின் பிற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், உலக அரங்கில் நமது நண்பர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியதுடன், அவர்கள் எந்த அளவிற்கு நமக்கு ஆதரவாக நிற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் வெளிக்காட்டியுள்ளன.
அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக பயங்கரவாத நக்சலைட் இயக்கங்கள் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்களின் வரட்டு சித்தாந்தம் கொடுமைகள் ஆகியவை பற்றி மக்கள் புரிந்து கொண்டதும் இதற்கு ஒரு காரணம். சுரண்டல், அநீதி, வளர்ச்சியின்மை இவற்றோடு நிர்வாகத் தரப்பின் சரியான புரிதலின்மை ஆகியவையே நக்சலைட்டுகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. இப்போது இந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. அந்தப் பகுதிகளில் சமூகநீதி, வளர்ச்சி, சமூகம் குறித்த நல்லெண்ணம், அக்கறையோடு கூடிய செயல்பாடுகள், நல்லிணக்கம் இவற்றை உறுதி செய்ய ஒரு விரிவான செயல் திட்டம் தற்போது தேவைப்படுகிறது.
இன்று பொருளாதாரத்துறையில், நமது நிலை மேம்பட்டு வருகிறது எனலாம். தொழில்துறையில், நமது நாட்டை உலகின் முன்னணி நாடாக மாற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே உற்சாகமும் செயலூக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், தற்போது இருக்கும் பொருளாதார வழிமுறைகள் உலகம் முழுவதும் சில குறைகளை கொண்டுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தல், ஒரே இடத்தில் பணம் குவிதல், சுரண்டலுக்கான புதிய வழிமுறைகள் வலுவடைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, வியாபாரத்தில் மனித உறவுகளுக்கு பதில் வியாபார ரீதியிலான மனிதாபிமானமற்ற தன்மை ஆகியவை உலகளவில் அதிகரித்து வருகின்றன. இவை நம்மை பாதிக்காமல் இருக்கவும், அமெரிக்கா தனது சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அறிவித்துள்ள வரிக்கொள்கையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் சில மறுபரிசீலனைகள் அவசியம்.
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதன் மூலமே உலகம் இயங்குகின்றது. எனினும் நாம் சுயசார்பு தேசமாக உருவெடுத்து, நாம் பிற நாடுகளை சார்ந்திருக்காமல், நமது விருப்பப்படி சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டும். சுதேசிக்கும், சுயசார்புக்கும் மாற்றாக எதுவும் கிடையாது.
பொருள் முதல்வாத அடிப்படையில் குறுகிய கண்ணோட்டத்துடன் வளர்ச்சி காணும் எண்ணம் உலகளவில் தென்படுகிறது. அதனால் நுகர்வு கலாச்சாரம் வலுத்து, அனைத்து இடங்களிலும் தீங்கு ஏற்படுவது கண்கூடாக தெரிகிறது. பாரதத்திலும், அதே நடைமுறை காரணமாக, கடந்த 3, 4 ஆண்டுகளில் சீரற்ற மழைப்பொழிவு, நிலச்சரிவுகள், பனிப்பாறைகள் உருகுதல் போன்ற மோசமான விளைவுகள் தீவிரமடைந்துள்ளன. தென்மேற்கு ஆசியாவின் முழு நீர் தேவையும் இமயமலையைச் சார்ந்துள்ளது. இமயமலையில் ஏற்படும் இந்த பேரழிவுகள் பாரதத்திற்கும், தெற்காசியாவின் பிற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகக் கருதப்பட வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில், நமது அண்டை நாடுகளில் பெருமளவிலான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளம் இங்கெல்லாம் பொதுமக்கள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது, நமக்கு கவலை அளிக்கிறது. பாரதத்திலும் இதுபோன்ற குழப்பங்களை உருவாக்க விரும்பும் சக்திகள் நம் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரமாக செயல்படுகின்றன. இப்படிப்பட்ட நிலை உருவாவதற்கு, அரசாங்கத்திற்கும், சமுதாயத்திற்கும் நடுவே இடைவெளி அதிகரிப்பதும், மக்கள் நலன் விரும்பும் திறமையான நிர்வாகம் / நிர்வாகிகள் இல்லாமல் போவதும் காரணம். இருப்பினும், வன்முறை மூலம் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. ஜனநாயக வழிமுறைகள் மூலம் மட்டுமே சமுதாயம் முழுமையான மாற்றத்தை உருவாக்க முடியும். இல்லையெனில், இதுபோன்ற வன்முறை ஏற்படும்போது, உலகின் ஆதிக்க சக்திகள் தங்கள் சொந்த லாபத்திற்காக குழப்பம் விளைவிக்கும் வாய்ப்புள்ளது. இந்த அண்டை நாடுகள், கலாச்சார ரீதியிலும் மக்களுக்கிடையிலான நீண்டகால உறவு அடிப்படையிலும், பாரதத்துடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளன. ஒரு வகையில், அவை நமது சொந்த குடும்பத்தின் அங்கமே. நமது சொந்த நலன்களைப் பாதுகாப்பதைப் போலவே, இந்த நாடுகளில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு, சமுதாய சூழ்நிலை மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வது நமது நலனுக்கு உகந்தது மட்டுமல்ல, நமது சகஜமான பரிவுணர்வாலும் இது தேவை.
உலகம் முழுவதும் அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்பம் மூலம் மனித வாழ்க்கையின் பல அம்சங்களை வசதியாக மாற்றும் திறன், தகவல் தொடர்பு மூலம் நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் தொடர்பு, உலகளாவிய வர்த்தகம் இவை எல்லாமாக வாழ்வை சுகமயமாக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், அறிவியல் / தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வேகத்திற்கும் மனிதர்கள் இவற்றிற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வேகத்திற்கும் இடையே கணிசமான இடைவெளி உள்ளது. இதன் காரணமாக, சாதாரண மக்கள் ஏராளமான பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
பெரிதும், சிறிதுமாக உலகம் முழுவதும் நடந்து வரும் போர்கள் / மோதல்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஏற்படும் இயற்கை சீற்றங்கள், சமுதாய மற்றும் குடும்ப பிணைப்புகள் பலவீனமடைதல், அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் மீதான விரோதம் போன்ற பிற பிரச்சினைகளையும் நாம் காண்கிறோம். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவை மோசமடைவதைத் தடுக்கவோ அல்லது ஒரு விரிவான தீர்வை வழங்கவோ முடிவதில்லை. கலாச்சாரம், நம்பிக்கை, பாரம்பரியம் போன்ற அனைத்து பிணைப்புகளையும் முற்றிலுமாக அழிப்பதுதான் தீர்வு எனும் வக்கிரமான, மக்கள் விரோத சக்திகளின் மிரட்டலை அனைத்து நாடுகளும் எதிர்கொள்கின்றன. ஏற்கனவே நிலவி வரும் சமுதாயக் கேடுகள், மோதல்கள், வன்முறை இவற்றை சாதகமாக்கிக் கொண்டு அவற்றை மேலும் தீவிரமாக்கும் சக்திகள் இவை. பாரதத்திலும், இத்தகைய சூழ்நிலையை நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம். பாரதிய தத்துவ, சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, தேசியவாத உணர்வும், கலாச்சார ஈடுபாடும் தொடர்ந்து அதிகரித்து வருவது, நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது; உத்வேகம் அளிக்கிறது. ஸ்வயம்சேவகர்களுடன் செயல்படும் ஆன்மீக / சமுதாய நிறுவனங்களும், தனிநபர்களும், சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு தன்னலமின்றி சேவை செய்ய முன்வருகிறார்கள். இதன் விளைவாக, சமுதாயத்தின் சுயசார்பு, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன. சங்கப்பணியிலும் சமுதாய சேவையிலும் இணைந்து பணியாற்ற சமுதாயம் அதிகமதிகமாக ஆர்வம் காட்டுவதை காண முடிகிறது. சிந்தனையாளர்கள் மத்தியிலும், வளர்ச்சி விஷயத்தில் தற்போது நிலவுகிற முன்மாதிரிகள் அல்லாமல், பாரதிய கண்ணோட்டத்தின் அடிப்படையிலான வளர்ச்சிக்கான உத்திகள் பற்றி ஆராயும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பாரதத்தின் தத்துவக் கண்ணோட்டம்
சுவாமி விவேகானந்தர் முதல் மகாத்மா காந்தி, தீனதயாள் உபாத்யாய, ராம் மனோகர் லோஹியா வரை நமது நவீன சிந்தனையாளர்கள் அனைவரும், பாரதத்தையும் உலகத்தையும் பற்றி பாரதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிந்திக்க முயன்றவர்கள். உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு ஒரே திசையில் பயணித்துள்ளனர். நவீன உலகக் கண்ணோட்டம் முற்றிலும் தவறாக இல்லையென்றாலும் கூட, அது முழுமையடையவில்லை. இதனால் தான் சில நாடுகளும், சில பிரிவினர்களும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டுள்ள போதிலும், அனைவருக்கும் இது நடக்கவில்லை. மற்றவற்றை விட்டுவிடுங்கள், சில ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவில் இருப்பது போன்ற வளமான / மேம்பட்ட வாழ்க்கையை பாரதம் வாழ வேண்டுமென்றால், அதற்கு இன்னும் ஐந்து பூமிகளுக்கு சமமான வளங்கள் தேவைப்படும் என்று கூறுகின்றனர். இதனால்தான் வளர்ச்சியோடு கூட மனித குலத்திற்கும் இயற்கைக்கும் புதிய பிரச்சினைகள் எழுகின்றன; பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. சரியான கண்ணோட்டம் இல்லாததே காரணமாகும்.
நமது முழுமையான, சனாதன, ஆன்மீக / ஒருங்கிணைந்த கண்ணோட்டம், மனம், அறிவு, ஆன்மீக வளர்ச்சியுடன், ஒரு தனிநபரின் பொருளாதார நல்வாழ்வையும் உறுதி செய்யும் சக்தியைக் கொண்டுள்ளது. இது மனித சமுதாயத்தின், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய முடியும். தனிப்பட்ட தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப பொருளாதார நல்வாழ்வை உறுதி செய்வதோடு, நமது கண்ணோட்டம் கடமை உணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்கிறது. ஏனென்றால், அனைவரையும் ஒன்றிணைக்கும் கொள்கையை நாம் உணர்ந்துள்ளோம். அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதர்கள்- இயற்கை சகவாழ்வை மதிக்கும் ஒரு அழகான, வளமான, அமைதியான வாழ்க்கை முறையை நாம் உருவாக்கினோம். இன்றைய உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும், இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் இந்த முழுமையான / ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய வடிவத்தை உலகம் கோருகிறது. பாரத நாட்டு மக்கள், அப்படியொரு வாழ்க்கை மூலம் அனைவரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியை, வாழ்க்கை முறையை வழங்குவது காலத்தின் தேவை.
சங்கத்தின் தொலை நோக்குப் பார்வை
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சங்கத்தின் நற்குணங்களை உள்வாங்கிய பிறகு, ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தில் வெவ்வேறு துறைகளிலும், அமைப்புகளிலும் பங்களித்து வருகின்றனர். உள்ளூர் முதல் தேசிய அளவிலான அமைப்புகள் வரை பணியாற்றுகின்றனர். சமுதாயத்தில் ஆக்கபூர்வமாக பணியாற்றி வரும் பலருடன் இணைந்து, பரஸ்பர ஒத்துழைப்புடன் பல்வேறு காரியங்களில் ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒட்டுமொத்த அனுபவத்தின் அடிப்படையில் சங்கம் சில தெளிவுகளையும், தீர்வுகளையும் கண்டறிந்துள்ளது
1) பாரதத்தின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இருப்பினும் சில அரைகுறை கொள்கைகளை, செயல்முறைகளை கடைபிடித்து வருகிறோம். அதே வழிமுறையின் மூலமாக, உலகத்துடன் சேர்ந்து நாமும் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பதும், உடனடியாக மாற்றங்களைச் செய்ய முடியாது என்பதும் உண்மை தான். ஆனால், நீண்ட கால நன்மைக்காக, நாம் படிப்படியாக மாற்றங்களைச் துவக்க வேண்டும். உலகம் தற்போது எதிர்கொள்ளும் அல்லது எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களிலிருந்து நம்மைப் தற்காத்துக் கொள்ள வேறு வழியில்லை. நமது ஒருங்கிணைந்த, முழுமையான பார்வையின் அடிப்படையில் ஒரு வெற்றிகரமான வளர்ச்சி மாதிரியை உருவாக்கி, அதை உலகின் முன் வைக்க வேண்டும். பொருளாசை போன்ற அதீத ஆசைகளின் பின்னால் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகிற்கு, ஆன்மீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், அனைவரையும் அரவணைத்து சென்று முன்னேறுதல் என்கிற தர்மத்தின் அடிப்படையிலான வளர்ச்சியை காட்ட வேண்டும்.
2) உலகம் பின்பற்றுவதற்கு ஏற்ற ஒரு மாதிரியை உருவாக்குவதன் பொறுப்பு அரசை மட்டும் சார்ந்தது இல்லை. ஏனெனில், மாற்றத்தை உருவாக்க அரசு இயந்திரத்தின் விருப்பமும், திறனும் ஒரு வரையறைக்கு உட்பட்டது. இதற்கான உத்வேகமும், அதை செயல்படுத்த தேவையான திறனும் சமுதாயத்தின் விருப்பம் மூலம் மட்டுமே கிடைக்கிறது. எனவே சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு, விழிப்புணர்வும், சமுதாயத்தின் நடத்தையில் மாற்றமும் அவசியமாகிறது. வெறும் பேச்சு, எழுத்தால் சமுதாயத்தின் நடத்தையில் மாற்றம் ஏற்படாது. நாம் தீவிரமான சமுதாய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். உருவாக்குபவர்கள், அவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும். தனது வாழ்க்கையின் மூலம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருக்க வேண்டும். எனவே தான், மனித நிர்மாணத்தின் மூலம் சமுதாய மாற்றம், அந்த சமுதாய மாற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த மாற்றம் என்பது தான் உலகில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வழி. இதுவே ஸ்வயம்சேவகர்களின் கூட்டு அனுபவமாக இருந்து வருகிறது.
3) ஒவ்வொரு சமூகத்திலும், இப்படிப்பட்ட நபர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடு உண்டு. இந்த வழிமுறைகள் பல நூற்றாண்டு அந்நிய ஆக்கிரமிப்பில் அழிக்கப்பட்டது. அவற்றை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில், நமது வீடு, கல்விமுறை, சமுதாயத்தின் பரிமாணங்களுக்கு ஏற்ப மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மனதளவில் இவற்றை ஏற்றாலும் கூட, இவற்றை நடைமுறைப்படுத்த நமது புத்தி, சொல், செயல் இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கு ஒரு வழிமுறை அவசியம். சங்க ஷாகா இத்தகைய ஒரு வழிமுறை. கடந்த 100 ஆண்டுகளாக சங்க கார்யகர்த்தர்கள், பல்வேறு வித சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இந்த வழிமுறையை பின்பற்றி வருகிறார்கள். இதை எதிர்காலத்திலும் தொடர்ந்து செய்ய வேண்டும். எனவேதான் ஸ்வயம்சேவகர்கள், தங்களது அன்றாட பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, தினசரி ஷாகாவில் பங்கேற்பது அவசியம். தனி மனிதரின் குண மேம்பாடு, குழுவாக பணியாற்றுதல், சமுதாயத்தில் ஒற்றுமையை, புரிந்துணர்வை ஏற்படுத்தி, அங்கு இணக்கமான சூழலை ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிகளை அளிப்பதே ஷாகாவின் நோக்கம்.
4) ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியகாரணி சமுதாய ஒற்றுமை ஆகும். நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. பல மொழிகள், பல மதங்கள், பல வாழ்க்கை முறைகள், மாநிலம், சாதி காரணமாக பலவிதமான உணவுப் பழக்கங்கள் என இந்த பன்முகத்தன்மை பல காலமாக இருந்து வருகிறது. கடந்த 1,000 வருடங்களில் பாரதத்தின் எல்லைக்கு வெளியில் இருந்து அந்நிய வழிபாட்டு முறைகள் உள்ளே வந்துள்ளன. அந்நியர்கள் வெளியேறி விட்டாலும், அந்த வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொண்ட நமது சகோதரர்கள், பாரதத்தில் இருக்கிறார்கள். அனைவரையும் வரவேற்று, ஏற்பதே பாரதிய கலாச்சாரம். அவர்களை அந்நியர்களாக நாம் கருதவில்லை. இந்த பன்முகத்தன்மையே நமது சிறப்பு, இதுகுறித்து பெருமை கொள்ள வேண்டும். இந்த பன்முகத்தன்மை நமக்குள் பிரிவை ஏற்படுத்தக் கூடாது. நாம் அனைவருமே பெரிய சமுதாயத்தின் ஒரு அங்கம். ஒரு சமுதாயமாக, ஒரு கலாச்சாரமாக, ஒரு தேசமாக நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த அடையாளமே மற்ற அனைத்தையும் விட உயர்ந்தது. சமுதாயத்தில் நாம் ஒருவரையொருவர் இந்த எண்ண ஓட்டத்துடன் பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நம்பிக்கைகள், மஹாபுருஷர்கள், வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றை, நமது மனம், சொல், செயல் ஆகியவற்றால் அவமதிக்கக் கூடாது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாம் அனைவரும் சட்ட-திட்டங்களை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அல்லது யூகத்தின் அடிப்படையில் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடுவது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது இவற்றைத் தவிர்க்க வேண்டும். அது தவறு. தங்கள் பலத்தை காட்டி பிற மதத்தவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவது, எதிர்வினை புரிவது போன்ற செயல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இந்த சதியில் சிக்கிக்கொள்வது தற்காலம், நீண்டகாலம், இரண்டிற்குமே ஆபத்து. இவற்றை தடுத்து நிறுத்துவது அவசியம். அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, நிர்பந்தத்தாலோ பாரபட்சத்துடனோ அல்ல. நாட்டில் உள்ள நல்ல மனிதர்களும் (ஸஜ்ஜன சக்தி) இளைஞர்களும் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பதுடன் தேவைக்கேற்ப தலையிடவும் வேண்டும்.
5) இந்த ஒற்றுமையின் அடித்தளத்தை நமது உளமார்ந்த கலாச்சார ஒற்றுமை என்று கூறுகிறார் பாபாசாகேப் அம்பேத்கர். பண்டைய காலங்களில் இருந்தே பாரதிய கலாச்சாரம் இங்கு சிறப்பாக போற்றப்பட்டு வந்துள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கி, அனைத்து விதமான பன்முகத்தன்மையையும் மரியாதை அளித்து அரவணைக்க சொல்கிறது. இதுவே பாரதத்தின் ஆன்மீக தத்துவம். இரக்கம், தூய்மை, ஒழுக்கம் ஆகியவை நம் தர்மத்தில் வேரூன்றியுள்ளது. இந்த தேசத்தின் குழந்தைகளாக, ஹிந்து சமுதாயம் இதை தங்களது வாழ்க்கை முறையின் அங்கமாக ஏற்றுள்ளது, அதனால் இது `ஹிந்து பாரம்பரியம்’ என அழைக்கப்படுகிறது. இது பல முனிவர்களின் தவத்தின் மூலமாக உருவானது. பாரதத்தின் வளத்தாலும் பாதுகாப்பான சூழலாலும், அவர்களுக்கு இது சாத்தியமானது. அந்த கலாச்சாரம் தழைத்து, அறுபடாமல் தொடர்கிறது. நமது முன்னோர்களின் விடாமுயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால்தான், நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். தேசிய உணர்வு என்பது என்னவெனில், பாரத பண்பாட்டின் படி வாழ்வது, முன்னோர்கள் குறித்த பெருமை, அவர்களின் நடத்தையை பின்பற்றுவது, நமது தாய்நாட்டிற்காக நம்மை அர்பணிப்பது. இந்த ஹிந்து தேசியம் நம்மை எப்போதும் ஒற்றுமையாக பிணைத்திருக்கும், அதே சமயம் அனைத்து பன்முகத்தன்மையும் ஏற்கும். நமக்கு ‘அரசுதான் தேசம்’ (‘nation-state’) என்ற கருத்து கிடையாது. அரசுகள் உருவாகின்றன, வீழ்ச்சியடைகின்றன; தேசம் (nation) நித்தியமாகவே உள்ளது. நமது ஒற்றுமையின் இந்த அடித்தளத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (We don’t have a conception of ‘nation state’. States form and decline, while nation remains eternal. We should never forget this foundation of our unity).
6) ஹிந்து சமுதாயத்தின் வலிமை, நல்லொழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த தேசத்தின் ஒற்றுமை, ஒருமை, முன்னேற்றம் இவற்றை உறுதி செய்கிறது. ஹிந்து சமுதாயம் மிகவும் பொறுப்பான சமுதாயம். அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயம். அது, ‘நாம்’, ‘அவர்கள்’ என்று வேறுபாடு காட்டுவதில்லை, பெயர்கள், வடிவங்கள் இவற்றை வைத்து யாரையும் தனியே பிரித்துப் பார்ப்பதில்லை, இனியும் அவ்வாறு வேறாக பார்க்காது. `வசுதைவ குடும்பகம்’ என்கிற உயரிய கோட்பாடை, ஹிந்து சமுதாயம் உறுதியாக கடைபிடிக்கிறது. பாரதத்தை வளமான நாடாகவும், உலகிற்கே வழிகாட்டக் கூடிய தேசமாகவும் உயர்த்தும் பெரும் பொறுப்பும், தனது வலிமையின் அடிப்படையில் தர்மத்தைக் காத்து, உலகத்திற்கு வழிகாட்டும் கடமையும் ஹிந்து சமுதாயத்திற்கு உள்ளது. அத்தகைய ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றி வருகிறது. ஒருங்கிணைந்த சமுதாயம் சுயமாகத் தன் கடமையை செய்யக் கூடியது. பிறர் எதுவும் செய்யத் தேவை இருக்காது.
7) சமுதாயத்தின் இந்த லட்சியத்தை நிறைவேற்ற, தனி மனிதனும் சமுதாயமும் வலிமையான தேசிய ஒழுக்கம் வாய்ந்து விளங்க வேண்டும். நமது ராஷ்ட்ரம் எது என்ற அடையாளம், அதன் பெருமை ஆகியவை பற்றி சங்க ஷாகா தெளிவு தருகிறது. ஷாகாவில் நடைபெறும் தினசரி நிகழ்ச்சிகள் மூலம் ஆளுமைத்திறன், பண்புகள், தலைமை குணங்கள், அறிவாற்றல், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை மேம்படுகிறது
சங்கத்தின் நூறாவது ஆண்டில், இந்த மனித நிர்மாண பணியை நாடு முழுவதும் கொண்டு செல்ல சங்கம் முயற்சி செய்யும். ஐந்து நல்மாற்றங்களை (பஞ்ச பரிவர்த்தன்), ஸ்வயம்சேவகர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்து, அனைவரும் இவற்றை கடைப்பிடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
உலக வரலாற்றில் பாரதம் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகில் சமநிலை தவறிய போதெல்லாம் , அதை மீட்டுள்ளது. உலகளாவிய வாழ்க்கையில் கட்டுப்பாடு, ஒழுக்க உணர்வை வளர்க்கும் வாழ்வியலை வழங்குகிறது. நமது முன்னோர்கள் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தை ஒரே தேசமாக ஒழுங்கமைத்து, இந்த பொறுப்பை நிறைவேற்றினர். சுதந்திரமான பாரதம், ஒரு வளமான, முன்னேறிய, தேசிய மறுமலர்ச்சி கொண்ட தேசமாக இருக்கும் என்று தான் நமது விடுதலை போராட்ட வீரர்கள் கனவு கண்டனர்.
வங்காளத்தின் முன்னாள் சங்கசாலக் அமரர் திரு. கேசவ் சந்திர சக்கரவர்த்தி அருமையான பொருள் தரும் கவிதை ஒன்றின் மூலம் இவ்வாறு விவரிக்கிறார்:
“பாரதிய கலாச்சாரம் இலங்கை, ஜாவா தீவு வரை பரவியிருந்தது. எங்கு பார்த்தாலும் மடங்களும், கோவில்களும் இருந்தன; நம் வாழ்க்கை, பூவின் வாசம் போல பரவி வியாபித்தது. பாரதத்தின் இனிமையான குரல் கேட்டு, பிற நாடுகள் தம்முள் பகை நீக்கி, சாந்தி, சமாதானம் அடந்தன.”
வாருங்கள், இன்றைய தேசிய மற்றும் உலகளாவிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, பாரதத்தின் உண்மையான அடையாளத்தை மீண்டும் ஒருமுறை உலகில் நிலைநிறுத்துவோம். நமது முன்னோர்களால் வழங்கப்பட்ட இந்தக் கடமையை, இன்றைய உலகிற்குத் தேவையான கடமையை, நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒன்றாக நடந்து, நமது கடமைப் பாதையில் முன்னேறுவோம். விஜயதசமியின் இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், இந்த உறுதியுடன் புதிய எல்லைகளை எய்துவோம்.
பாரத் மாதா கி ஜெய்
நாகபுரி விஜயதசமி விழாவில் தலைமை உரை நிகழ்த்திய முன்னாள்
பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சொற்பொழிவிலிருந்து…
திரு. ராம்நாத் கோவிந்த் பேசியது
மஹாத்மா காந்தி, லால் பஹதூர் சாஸ்திரி ஆகியோரை நினைவுக்கூர்ந்து தனது உரையை துவக்கினார் திரு. ராம்நாத் கோவிந்த். அவர் பேச்சின் முக்கிய அம்சங்கள்
என் வாழ்க்கையில் மகத்தானவர்களின் பங்களிப்பு
« என் வாழ்க்கையில் இரு மருத்துவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஒன்று டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றொருவர் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.
« டாக்டர் ஹெட்கேவாரின் ஆழமான சிந்தனைகள், ஒரு சாதாரண மனிதன், சமுதாயம் மற்றும் தேசத்தைப் புரிந்துகொள்வதற்கு என் பார்வையை தெளிவுபடுத்தியுள்ளன.
« அரசியலமைப்பை புரிந்துகொள்வதில், பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகள், ஒரு கலங்கரை விளக்கம் போல என் பார்வையை ஒளிரச் செய்துள்ளன
« மரியாதைக்குரிய தத்தோபந்த் தெங்கடி அவர்களிடமிருந்து, தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூக சேவையில் எனக்கு மதிப்புமிக்க பயிற்சி கிடைத்தது.
சங்கமும் அதன் சர்சங்கச்சாலக்குகளும் (தலைவர்களும்)
« இந்த நாளில், டாக்டர் ஹெட்கேவார் ஜி, ஸ்ரீ குருஜி, ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ் ஜி, ஸ்ரீ ரஜ்ஜு பையா ஜி மற்றும் ஸ்ரீ சுதர்ஷன் ஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
« டாக்டர் ஹெட்கேவார் ஜி நட்டு வளர்த்த அமைப்பின் செடியை, ஸ்ரீ குருஜி நல்ல விரிவாக்கத்துடன் வலுப்படுத்தி அதன் வேர்களை பலப்படுத்தினார்.
« ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ் ஜி, சங்கத்தை பூத்து வளரச் செய்து, நல்லிணக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.
« ரஜ்ஜு பையா ஜி, சுதந்திரத்திற்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள், அதன் விளைவாக ஏற்பட்ட சமுதாய மாற்றங்களுக்கு மத்தியில் சங்கத்தை வழிநடத்தினார்.
« ஸ்ரீ சுதர்ஷன் ஜி, சமூகத்தின் பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்கள் நேரத்தில், சங்கத்தின் பணிகளை முன்னெடுத்தார்.
« டாக்டர் மோகன் பாகவத் ஜி, பாரதிய பாரம்பரியத்தின் ஒப்பற்ற விளக்கவுரையாளராக இருப்பதோடு, நவீனத்துவத்தையும், மதிப்புகளையும் ஒருங்கிணைக்கும் தொலைநோக்கு சமுதாய விஞ்ஞானியாகவும் விளங்குகிறார்.
சங்கத்தின் நூறாண்டு பயணம்
« சங்கத்தை துவக்க, டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் மிகவும் புனிதமான நாளை மட்டுமல்ல, மிகவும் பொருத்தமான நாளையும் தேர்ந்தெடுத்தார்.
« விவசாயிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள், வணிகர்கள், பட்டியல் சமூகத்தவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், ராணுவ வீரர்கள், கலைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் பல்வேறு பரிமாணங்கள் மூலம் இணைக்கும் உன்னத பணியைச் செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
« அவசரநிலைக்கு எதிராக சங்கம் மேற்கொண்ட போராட்டத்தின் காரணங்கள் உலகளவில் விவாதப் பொருளாகியது.
« 1948, 1975 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் சங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டன. ஒவ்வொரு தடையைத் தொடர்ந்தும், சங்கம் கடுமையான சவால்களுக்கு மத்தியில் விரிவடைந்து, வளர்ச்சியடைந்து, மேலும் வலுவாக உருவெடுத்தது.
« கடந்த நூறு ஆண்டுகளில், சங்கம் ஒரு ஒற்றுமையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் உள்ளடக்கிய சமூகத்தையும், வலுவான தேசத்தையும் கட்டமைப்பதற்கு மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஸ்வயம்சேவகர்களும், ஷாகாவும்
« சங்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினர் என்று எதுவும் இல்லை, ஆனால் ஸ்வயம்சேவகர்களின் அர்ப்பணிப்பு போன்ற ஒன்றை வேறு எங்கும் காண முடியாது.
« பல்லாயிரக்கணக்கான ஷாகாக்கள் மூலம் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் தங்கள் ஆளுமை, பண்புகள் மற்றும் தேசத்தை உருவாக்கும் திறனை மேம்படுத்தி வருகிறார்கள்.
சங்கம்: சமுதாயமும், ஒற்றுமையும்
« சமுதாய ஒற்றுமையை சங்கம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு பணிகளும் நடைபெற்ற வருகிறது.
« இந்த ஒற்றுமை சிந்தனையை
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் நான் கண்டிருக்கிறேன்
சங்கமும் டாக்டர் அம்பேத்கரும்
« 1949 நவம்பர் 25 அன்று, அரசியலமைப்பு சபையில் பாபாசாகேப் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் வெளிப்படுத்திய சில கவலைகளை, சங்கமும் கொண்டுள்ளதை நான் காண்கிறேன்.
« பாபாசாகேப் அரசியலமைப்பு சபையில் பேசும் போது, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, பிரிந்து போனால் வீழ்ந்து விடுவோம் என்று பேசினார். ஒற்றுமை இருக்குமிடத்தில் பலம் உள்ளது; பிரிவினை இருக்குமிடத்தில் வீழ்ச்சி உள்ளது.
« 1940 ஜனவரியில், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள கராட் நகரத்தில்
ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிற்கு பாபாசாகேப் சென்று, அங்குள்ளவர்களுடன் பேசி, நட்புணர்வை வெளிப்படுத்தி, உதவி தேவைப்பட்டால் வழங்குவதாக உறுதியளித்தார்.
« 1940 ஜனவரி 9 ஆம் தேதியிட்ட கேசரி பத்திரிகையில் “சில விஷயங்களில் எனக்கு ஆர்.எஸ்.எஸ். உடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவர்களை அன்புடன் பார்க்கிறேன்” என்று அம்பேத்கர் கூறியதை குறிப்பிட்டிருந்தது.
« பாபாசாகேப்பின் சொந்த வார இதழான ‘ஜனதா’விலும், கராட் நகராட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, பாபாசாகேப் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை சந்தித்து, தேவைப்பட்டால் உதவுவதாக உறுதியளித்ததாக செய்தி வெளியானது.
சங்கத்தின் ஏகாத்மதா ஸ்தோத்ரம்
« ஒவ்வொரு பாரதியரும் சங்கத்தின் ஏகாத்மதா ஸ்தோத்ரத்தைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த ஸ்தோத்ரத்தில், பாரதிய வரலாறு, புவியியல், கலாச்சாரம், வாழ்க்கை மதிப்புகள், சமுதாய உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அற்புதமான வெளிப்பாடு உள்ளது.
சங்கமும் பெண்களும்
« நம் குடும்ப அமைப்பில் பெண்கள் சமமான பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்த உண்மை சங்கத்தின் வளர்ச்சி பயணத்திலும் பிரதிபலிக்கிறது. இன்றைக்கு சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு, 1936 அக்டோபர் 25 அன்று, விஜயதசமி நாளில், ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ சங்கத்தால் நிறுவப்பட்டது.
சங்கமும் சமூக ஒற்றுமையும்
« சமுதாய சமத்துவமும் ஒற்றுமையும் சங்கத்தின் அடையாளமாகும். ‘ஒரே கோயில், ஒரே நீர்நிலை, ஒரே மயானம்’ போன்ற முயற்சிகள் மூலம் பிரிவினை போக்குகள் அகற்றப்படுகின்றன.
« சங்கத்தில் நிலவும் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் முற்றிலும் ஜாதி பாகுபாடு இல்லாத நடத்தையை கண்டு மகாத்மா காந்தியும் பெரிதும் ஈர்க்கப்பட்டார், இதன் முழு விவரம் காந்திஜி வாழ்க்கை குறித்த புத்தகங்களில் காணப்படுகிறது.
சங்கம்: சுதேசியும் சுயசார்பும்
« பொருளாதார சுயசார்பு மற்றும் சுதேசியை ஊக்குவிப்பது சங்கத்தின் முன்னுரிமையாக இருந்து வந்துள்ளது
சங்கமும் ஐந்து நல்மாற்றமும்
« சங்கத்தின் நூறாவது ஆண்டில் ஐந்து நல்மாற்றங்கள் பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’, இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கை முறையை விரிவுபடுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
« இதில் ‘குடிமை கடமை’யும் சேர்க்கப்பட்டுள்ளது. நாம், பாரத மக்கள், சமூக நீதியை உறுதிப்படுத்த அரசியலமைப்பு உறுதிமொழி எடுத்துள்ளோம். இந்த உணர்வு மற்றும் இலக்குடன் பணியாற்றுவதன் மூலம், நமது குடிமை கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியும்.
சங்கமும் முன்னேறிய பாரதமும்
« 2047ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த பாரதத்தையும், முழுமையாக ஒற்றுமையான மற்றும் ஒருங்கிணைந்த பாரதத்தையும் கட்டமைப்பதில் சங்கத்தின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கும் என்று நான்
நம்புகிறேன்.