லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும்  ஒரு இடைத்தரகருடைய பெயர் ’சுகேஷ்’. ரமேஷ் சுரேஷ் போன்று பாப்புலரான பெயர் அல்ல சுகேஷ். இளைஞரான இவருடைய பெயர் பத்திரிகைகளில் தினமும் அடிபட்ட போது தோன்றிய யோசனை இது: மிக உன்னதமான கனவுகளுடன் சுகேஷின் பெற்றோர் இவருக்கு இந்த பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஏனெனில், சுகேஷா என்பது உபநிடதங்களில் இடம்பெறும் ஒரு சாதகரின், ஒரு தவசீலரின் பெயர். அவரது சிறந்த குணநலன்கள் ‘பிரச்ன உபநிடத’த்தில் காணக்கிடைக்கின்றன. சங்கரர் முதலிய ஆசார்யர்கள் இந்த உபநிடதத்திற்கு உரை எழுதியுள்ளார்கள். குறிப்பாக, சங்கரரின் உரையைத் தழுவி சுகேஷா பற்றிய உபநிடதக் கருத்துக்களை இந்த கட்டுரையில் பதிவு செகிறேன். ஹிந்து பொது மக்களுக்கு ‘அடிபட்ட பெயரால் சற்று ஆன்மிக சிந்தனை லாபம்!

அதர்வ வேதத்தைச் சேர்ந்தது ‘பிரச்ன உபநிடதம். ‘சுகேஷா ச பாரத்வாஜ:..’ என்று தான் இந்த உபநிடதமே துவங்குகிறது. பரத்வாஜர் எனும் ரிஷியின் புதல்வர் சுகேஷா. இவருடன் மேலும் ஐந்து சாதகர்கள் பரம்பொருள் பற்றி சந்தேகம் தெளிய பிப்பலாதர் எனும் மகரிஷியை நாடிச் சென்று கேள்விகள் பல கேட்கிறார்கள். பிரச்ன என்றால் கேள்வி. ஆறு சாதகர்களின் கேள்விகள் இடம் பெறுவதனால் இந்த உபநிடதம் பிரச்ன உபநிடதம் என்று பெயர் பெற்றுள்ளது.

பொருளும் பரம்பொருளும்:

சுகேஷா முதலிய சாதகர்களை இந்த உபநிடதம் ‘ப்ரஹ்ம பராஹா’ (பரம்பொருளை அடைவதை குறிக்கோளாகக் கொண்டவர்கள்). ‘ப்ரம்ஹ நிஷ்டாஹா‘ பரம்பொருளில் நிலைத்தவர்கள். ‘பரம்ப்ரம்ம அன்வேஷமாணாஹா’ (பரம்பொருளை நாடுபவர்கள்) என்றெல்லாம் போற்றுகிறது. பரம்பொருளை மட்டுமே நாடிய சுகேஷா எங்கே? உலகியல் பொருட்களை மட்டுமே பரமமானது (உயர்ந்தது), அதனால் அனைத்தையும் சாதிக்க முயன்றதாக பத்திரிகைகள் கூறும் சுகேஷ் எங்கே?

ஸமித்பாணி:

மேலும், உபநிடத்தில் சுகேஷா முதலிய அறுவரும் ‘ஸமித்பாணயஹ’ (சமித்துக்களை கையில் பிடித்துகொண்டிருப்பவர்கள்) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். பிப்பலாதரை நாடும் இவர்கள் வெறுங் கையுடன் செல்லவில்லை. அவரது வேள்வியில் அர்ப்பிக்க உகந்த சமித்து எனப்படும் சிறு  குச்சிகளை கொண்டு செல்கிறார்கள். உயர்ந்த பரம்பொருளை அடைய, சீடர்கள் சமர்ப்பண மனோபாவத்துடன் கொண்டுவரும் சிறு குச்சிகளைக் கூட உவந்து ஏற்றனர் ‘போதும் என்ற மனம்’ கொண்ட புண்ணியர்களான முனிவர்கள். மேலும், சான்றோரை காணச் சென்ற போது உயர்ந்த நோக்கத்துடன் எளிய சமித்துக்களை தம் கைகளால் சிரத்தையுடன் சேகரித்து சென்றார் சுகேஷா. கையூட்டு கொடுத்ததற்காக கையும் களவுமாக பிடிபட்டார் நிகழ்கால சுகேஷ் எனும் பத்திரிகைகளின் கூற்று நினைவில் கொள்ளத்தக்கது..

நிதானமே பிரதானம்:

இவர்கள் அறுவரும் சந்தேகம் தெளிய வந்தவுடன், கேள்விகளுக்கு பதிலளித்து விட்டாரா பிப்பலாதர்? அதுதான் இல்லை. குருவானவர் கூறினார்: ஒருவருட காலம் சிரத்தையுடனும், பிரம்மச்சரியத்துடனும், தவம் செதுவிட்டு வாருங்கள். (தபஸா, ப்ரஹ்மசர்யேண, ஸ்ரத்தையா ச ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத) அதன் பின், விரும்பும் கேள்விகளைக் கேளுங்கள். பதிலை அறிந்தால் உங்களுக்கு கூறுவோம். (யதாகாமம் ப்ரச்னான் ப்ருச்சத யதி விஜ்ஞானாஸ்யாமஹ ஸர்வம் ஹவோ வக்ஷ்யாஹ:).

இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? எந்தப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பும் நாம் நம்மை பொறுமையாக முயன்று தகுதியுள்ளவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் கணநேரத்தில் பணபலத்தால் சாதித்துவிடலாம் என மனக்கோட்டை கட்டினால், பலனும் கைமேல் கிடைக்கும் அல்லவா!

கதையைத் தொடருவோம். சுகேஷாவும் அவரது சக கேள்வியாளார்களும் பொறுமையாக குருவான பிப்பலாதரின் சோற்படி ஒருவருட காலம் ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து, பின்னர்  கேள்விகளைக் கேட்கத் துவங்கினர்.

தலைமைப் பண்புமுதலியவை:

பிரச்ன உபநிடதத்தை ஆழ்ந்து படித்தோமானால், இந்த ஆறு சாதகர்களுள் பிரதானமானவாராக இருப்பவர், தலைமைப் பண்புகளையும் கொண்டவராக இருப்பவர், ஞானம் அதிகம் உள்ளவர் சுகேஷா தான் என்று தோன்றுகிறது. ஏனெனில்,முன்பு குறிப்பிட்டபடி ‘சுகேஷா ச…’ என்று சுகேஷாவின் பெயருடன் தான் உபநிடதமே துவங்குகிறது. ஆக இவர் பிரதானமாவர். ஏன் பிரதானமானவர், பிரச்ன உபநிடத்தில் மற்ற ஐவரையும் முதலில் கேள்விகளைக் கேட்க அனுமதித்து விட்டு சுகேஷா கடைசியில் தனது கேள்வியைக் கேட்கிறார். குழுவினை வழிநடத்துபவர் தலைவர். தன் நலனை பின்னுக்குத் தள்ளி குழுவினர் அனைவருக்கும் வாப்பளித்து, பின்னர் அவரது சந்தேகத்தை முன்வைக்கிறார். இது அல்லவோ தலைமைப் பண்பு? குழுவின் மற்ற உறுப்பினர்கள், ப்ராணன், புலன்கள், மனம், பிரணவம் போன்ற ஆன்ம தத்துவத்துடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி கேட்கிறார்கள். ஆனால் சுகேஷாதான் நேரிடையாக ஆன்மாவினைப் பற்றி கேள்வியெழுப்புகிறார். ஆக ஆன்ம சாதனையில் பிறரைவிட முன்னேறிய ஞானி சுகேஷா என்று அறியலாம்.

நேர்மையே உருவானவர்:

கடைசியாக சுகேஷா பற்றி ஒரு கருத்து. அதனை அவர் சோற்களிலேயே கேட்கலாம். பிப்பலாத மகரிஷியிடம் ஆன்மாபற்றி தன்னுடைய கேள்வியினைக் கேட்கும் முன் சுகேஷா, அந்தக் கேள்விக்கு ஒரு சிறு பின்னணியை விவரிக்கிறார்: ‘கோசல தேசத்திலிருந்து, ஹிரண்யநாபன் எனும் ராஜகுமாரன் என்னைக் காணவந்தான். பதினாறு கலைகள் கொண்ட ஆன்மாவினைப் பற்றி நீர் அறிவீரா? என்று கேள்வி எழுப்பினான். எனக்குத் தெரியாது என்றேன். எனக்கு இந்த விஷயம் தெரியாது என்பதில் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால்  எனக்குத் தெரிந்திருந்தால் உனக்கு கூறுவதில் எனக்கேதும் தயக்கமில்லை எனக் கூறினேன். இதைக்கேட்ட பின்பும் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பது போல எனக்குத் தோன்றியதால், மேலும் கூறினேன், ராஜகுமாரா! ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு தெரியாது எனப் பொ கூறினால், அவர் வேருடன் பட்டுப்போவார் என்பதனை நான் அறிந்திருக்கிறேன். இதற்கு பதிலேதும் பேசாமல் அவன் தேரில் ஏறிச் சென்றுவிட்டான்.  அவன் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாதபடியால் என் இதயத்தில் அது முள்ளாகத் தைத்துள்ளது. அந்த பதினாறு கலைகளைக் கொண்ட ஆன்மா பற்றி உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன்.‘

இதிலிருந்து உபநிடத சுகேஷா நேர்மையே உருவானவர் என்பது வெளிப்படை. மேலும், சுகேஷா ஒரு சாதகர் மட்டுமல்ல அறிவுத்தாகம் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பது கூட அவரது சோற்களிலிருந்து தெளிவாகிறது. மாணவன் கேட்ட கேள்விக்கு தெரியாது என பதில் கூறும் ஆசிரியர்கள் சிலரே. அவ்வாறு கூறுபவர்களுள், அந்தக் கேள்விக்கு விடைதான் என்ன என்று முயன்று தெளியும் குணநலன் கொண்ட ஆசிரியர்கள் மிகச் சிலரே. இல்லையா?

முடிவுரை:

இப்படியாக நேர்மை, பொறுமை, சிரத்தை, பிரம்மச்சரியம், தவம், தலைமைபண்பு, நல்லாசிரியப் பண்பு, மேன்மையான பரம்பொருளைக் காணும் அவா ஆகிய குணநலன்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது சுகேஷா எனும் பெயர். இப்படிப்பட்ட பெயரை தனது மகனுக்குச் சூட்டிய நிகழ்கால சுகேஷின் பெற்றோர், அந்தப் பெயரின் மகத்துவத்தையும் எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தியிருக்கலாம். தவறான காரணங்களுக்காக தனது பெயர் பெயர் ஒற்றுமையால் சுகேஷா எனும் உபநிடத ரிஷியினைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலர் அறியும் வாப்பை சுகேஷ் ஏற்படுத்திக் கொடுத்து. புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறார். இந்த புண்ணியத்தினாலாவது இனிமேல் அவர் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக தனது வாழ்நாளை செலவிட பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.