ரௌத்திரம் பழகு!

அன்புடையீர் வணக்கம்.

திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை பத்திரிகைக்கு ‘உண்மை’ என்று பெயர். பெயருக்கும் அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கும் சம்பந்தமே இல்லை. நவம்பர் இதழில் மற்றொரு சனியன் கார்த்திகை தீபம்” என்ற தலைப்பில் ஈ.வெ.ராவின் பழைய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கோடிக்கணக்கோர் கொண்டாடும் ஒரு ஹிந்துப் பண்டிகையை ‘சனியன்’ என்று குறிப்பிடுகிறார். அன்று ஏற்றப்படும் விளக்கு, அதற்கான எண்ணெய், தீபத்திற்காக திருவண்ணாமலை செல்வதற்காக செலவிடப்படும் பணம் எல்லாம் வீண் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளை ‘சனியன்’ என்று குறிப்பிடுவதற்கு இவர்களுக்கு திராணி கிடையாது. அவர்களை விமர்சித்தால் அடி, உதை விழும் என்பது தி.க.வினருக்கு நன்றாகவே தெரியும். ஹிந்துக்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள். ஹிந்துக்களிடையே பக்திக்கு ஒன்றும் குறைவில்லை. சபரிமலை, திருப்பதி, மேல்மருவத்தூர் போன்ற கோயில்களில் குவிகிறார்கள். பிரதோஷத்தன்று சிவன் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இந்த பக்தி மட்டும் போதுமா? போதாது.

ஹிந்துவின் நம்பிக்கைகளையோ தெய்வங்களையோ புனித நூல்களையோ மகான்களையோ யாரும் அவமானப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் வகையில் நமது சமுதாயம் வீறுகொண்டெழவேண்டும். இத்தகைய விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் ‘விஜயபாரதம்’ செயல்பட்டு வருகிறது. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் சிலரை ‘விஜயபாரதம்’ சந்தாதாரர் ஆக சேர்த்துத் தரும்படி பணிவோடு வேன்டுகிறோம்.

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்