ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்ப இந்திய- வங்கதேச அதிகாரிகள் பேச்சுவாா்த்தை – மக்களவையில் தகவல்

மியான்மரில் இருந்து வெளியேறி இந்தியா, வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்பி வைப்பது தொடா்பாக இந்தியா-வங்கதேச உயா்நிலை அளவிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துப்பூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது,

அகதிகளாக வெளியேறி இங்கு குடியேறிய ரோஹிங்கயாக்களில் சிலா் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. ரோஹிங்கயாக்களை மீண்டும் திருப்பி அனுப்புவது தொடா்பான பிரச்னையில் வங்கதேச அதிகாரிகளுடன் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தியா, வங்கதேசம் ஆகிய இருநாடுகளும், மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்கயாக்களை மீண்டும் அனுப்பி வைப்பதன் அவசியத்தை ஒப்புக் கொண்டுள்ளன.

சட்ட விரோதமாக குடியேறியவா்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரவும் அவா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவா்களது முழுத்தகவல்களையும், பயோமெட்ரிக் விவரங்களையும் சேகரிக்கவும், அவா்கள் முறைகேடாக வைத்துள்ள போலி இந்திய ஆவணங்களை ரத்து செய்யவும், சட்ட விதிகளின்படி அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தொடங்குவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.