ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும் என, சட்டசபை தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

இதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு தென்னை விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். கோஷம் எழுப்பிய விவசாயிகளை, வாகனத்தில் ஏற்றி கோமலீஸ்வரன் பேட்டை சமுதாய கூடத்தில், போலீசார் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.

ஈஸ்ட்-கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் இ.வி.காந்தி கூறியதாவது:

இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய வேண்டும்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதன்வாயிலாக பலருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர் பற்றாக் குறை ஏற்படுவதால், தென்னை விவசாயத்தை, பலரும் நம்பியுள்ளனர். இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.