மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்: பாஜகவிடம் மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் பாமக

மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வடதமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக, கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
இதில், 2019 மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்திலும் தோல்வி அடைந்தது. ஆனாலும், ஒப்பந்தப்படி அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், மயிலம், சேலம் மேற்கு ஆகிய 5 இடங்களில் வெற்றி பெற்றது.
பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, 2022 செப்டம்பரில் நடந்த 9 மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்ததுடன், ‘யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக கூட்டணியிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பாமக இல்லை” என்று வெளிப்படையாக அறிவித்தது.
இந்த நிலையில், ‘மக்களவை தேர்தலை முன்னிட்டு, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்’ என்று அறிவித்த பாமக, இதுதொடர்பாக அதிமுக, பாஜகவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக தலைமையின் ஆலோசனைப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, பாமக, தேமுதிகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 5-ம் தேதி டெல்லியில் பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினார். பாஜக முக்கிய தலைவர்களும் அன்புமணியிடம் பேசி வருகின்றனர். பாமக தரப்பில் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் 12 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அமைச்சரவையில் இடம் கேட்பதாக கூறப்படுகிறது. அதற்கு பாஜக ஒப்புதல் தெரிவிக்காததால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதால், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் அதிமுக தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, தங்கள் இறுதி நிலைப்பாட்டை கூறுவதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கடந்த 5-ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, கடந்த முறை போலவே பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க தயாராக இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியதாக தெரிகிறது.