ரூ.12,000 கோடிக்கு ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் ரூ.2,000நோட்டுகளை செப்டம்பர் 30-ம்தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த மே மாதம் 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பின், ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதுவரை 87% ரூ.2,000 நோட்டுகள் (ரூ.3.43 லட்சம் கோடி) திரும்பி வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ரூ.12,000 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அக்டோபர் 8-ம் தேதி (நேற்று) முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். இதுவரை மாற்றப்படாதரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்துசெல்லத்தக்கவையாகவே இருக் கும். அவற்றை வங்கிகளில் வரவுவைக்க அல்லது மாற்றிக் கொள்ள ஆர்பிஐ புதிய வழியை அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும்அனைத்து மாநில தலைநகரங்களிலும் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்கள் உள்ளன. அங்கு சென்று ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு சென்று வர முடியாத நிலையில் இருப்பவர்கள், தபால் துறையின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு ரிசர்வ் வங்கிஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.