ரவுடி ‘கருக்கா’ வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் என்று தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகியோர்தான். பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் கட்சிப் பொறுப்பில் இருந்து 2021-ம் ஆண்டே விலகிவிட்டார். மேலும், திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி, நிசோக் ஆகியோர் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரைப் பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.

தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமீனில் எடுத்துள்ளனர். எனவே, இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.