கூவம் கரையோரங்களில் இருந்து மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

கூவம் நதியின் கரையோரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. சென்னையின் கூவம் நதியின் கரையோரங்களை ஆக்கிரமித்து குடியிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மறுகுடியமர்த்தப்பட்டோருக்கு தேவையான மறுவாழ்வு பணிகளை சட்ட ரீதியாகமேற்கொள்ளவில்லை என்றும்,எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது மறுகுடியமர்வு தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் நகர்ப்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மறு குடியமர்த்தப்படும் குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தரப்பில், சென்னையில், கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து வசித்த 14 ஆயிரத்து 257குடும்பங்களில், 13 ஆயிரத்து 514குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும்,அவர்களுக்கு பல்வேறு திட்டப்பணிகள் மூலமாக சட்ட ரீதியாகஅனைத்து உதவிகளும் முறையாகவழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், கல்வி உரிமைச் சட்டப்படி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால், அடிப்படை கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை என கருத்துதெரிவித்தனர். குறிப்பாக மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.