ரமண மகரிஷியும் பால் பிரன்டனும்

நிம்மதியான வாழ்வு, ஆன்மிக உயர்நிலையைத் தேடி பாரதம் வந்தார் அமெரிக்க கோடீஸ்வரர் பால் பிரண்டன். வடமாநிலங்களில் சுற்றிவிட்டு தமிழகம் வந்தார். காஞ்சி மகாப்பெரியவரை சந்தித்தால் பதில் கிடைக்கும் என காஞ்சி சென்று அவரை தரிசித்தார். ஆனால் காஞ்சி மகானோ ‘உனக்கென்று ஒருவன் திருவண்ணாமலையில் இருக்கிறான், அவனிடம் செல்’ என ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்தார். மாலையில் திருவண்ணாமலையை அடைந்தார். ரமணரை தரிசிக்க முடியவில்லை. கொசுக்கடியில் தூக்கம் வரவில்லை. அப்போது காஞ்சி பெரியவர் அவர் முன் தோன்றி ‘காலையில் ரமணரை தரிசித்துவிட்டு செல், உனக்கு விடை கிடைக்கும்’ என்றார். தன் சந்தேகங்களை 18 கேள்விகளாக எழுதி எடுத்துச் சென்றார் பிரண்டன்.
ஆஸிரமத்தில் ரமணர் உள்ளே வந்தார். ஜன்னல் பக்கமாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். உடன் வந்த தமிழக நண்பர், ‘எழுந்து நில்லுங்கள். அப்போதுதான் சாமி உங்களை பார்ப்பார். நீங்கள் கேள்விகளை கேட்கலாம்’ என்றார். அதற்கு பால் பிரண்டன் ‘பேசாமல் இருங்கள், என் கேள்விக்கு பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது’ என்றார். ரமணரை மற்றொரு முறை சந்தித்தார் பால் பிரண்டன். அப்போது ரமணர் ‘வா மகனே வா, உனக்கு ஒரு உபதேசம் வேண்டியிருக்கிறது. வந்தவழி திரும்பி செல், இதுவே உனக்கு உபதேசம்’ என்றார். உடன் வந்த நண்பருக்கு ஏதும் புரியவில்லை. வெளியே வந்ததும் நண்பரிடம் ‘தலையில் இருந்து புறப்படும் உயிரணு, தாம்பத்தியம் மூலம் உடலை படைக்கிறது. அந்த உடல் ஆசையில் அகப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறது. தலைதான் கடவுள். உடலில் உள்ள அந்த ஆத்மா எப்போது கடவுள் எனும் தலைக்கு மீண்டும் வந்து சேர்கிறதோ அப்போதுதான் மனிதனுக்கு நிம்மதியும், அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும்.’ இதுதான் உபதேசத்தின் பொருள் என விளக்கினார் பால் பிரண்டன்.